பாயா தெருபோங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் கடுமையான மழையே காரணம்- சாவ் கொன் யாவ்

பாயா தெருபோங் மேம்பாட்டுப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் அரசியல் தலைவர்கள்
பாயா தெருபோங் மேம்பாட்டுப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் அரசியல் தலைவர்கள்

கடந்த 23/9/2015-ஆம் நாள் கிரின் கார்டன் அடுக்குமாடி, பாயா தெருபோங் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கான காரணம் கடுமையான மழையே என உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் சுட்டிக்காட்டினார். அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழையினால் அருகாமையில் அமைந்திருக்கும் மலை பகுதியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வீடமைப்புப் பகுதியில் நுழைந்தது என்றார்.
தினசரி ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் கிரின் கார்டன் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டமே மூலக் காரணம் எனக் குறிப்பிட்டது முற்றிலும் தவறு என்றார். கிரின் கார்டன் வீடமைப்புப் பகுதியில் மாநில அரசு எவ்வித மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ளவில்லை என்றும் அப்பகுதியில் நீர் ஊற்று உள்ளதையும் எடுத்துரைத்தார்.
வெள்ளம் ஏற்பட்ட பாய தெருபோங் பகுதியை நேரடியாகப் பார்வையிட சென்ற ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால், மாநகர் கழக பொறியியளாலர்களும் வருகைபுரிந்தனர்.
மேலும், 14/9/2015-ஆம் நாள் ஏற்பட்ட நிலச்சரிவிற்குக் காரணமாக விளங்கிய ” PLB Land Sdn. Bhd” எனும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வேலை தடை உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், Eco World, Eco Valley ஆகிய இரண்டு மேம்பாட்டு நிறுவனங்களின் மீதும் வேலை தடை உத்தரவு விதிக்கப்படுள்ளன.
மாநில அரசு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொண்டதாகவும், மேம்பாட்டு நிறுவனங்கள் இப்பிரச்சனைக் களைய உரிய நடவடிக்கை மேற்கொண்டப் பிறகு இத்தடை உத்தரவு திரும்பப்பெறப்படும் என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.}