பினாங்கின் சுத்தம், பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய ஆண்டு விழாக் கொண்டாட்டம்

தாவரவியல் துறை பசுமை கண்காட்சி
தாவரவியல் துறை பசுமை கண்காட்சி

பினாங்கின் சுத்தம், பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய மாநிலமாக பிரகடணப்படுத்தப்பட்டு கடந்த 22 மே தினத்தன்று தனது ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா குயின்ஸ்பே பேரங்காடியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் பிரமாண்ட கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இரண்டு நாட்களுக்குக் கொண்டாடப்படும் இத்தினத்தில் மாநில அரசு துறைகள் மற்றும் பல அரசு சாரா அமைப்புகளின் கண்காட்சிகள் பொதுமக்களுக்காக ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்நிகழ்விற்கு இலவச இடவசதி ஏற்படுத்திக் கொடுத்த குயின்ஸ்பே பேரங்காடியின் நிர்வாகத்திற்கும் இலவச விளம்பரங்கள் வழங்கிய ஏம் மிக்ஸ் மீடியா மற்றும் ஒப்திமல் மீடியா தனியார் நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதனிடையே, சிறந்த சேவையின் மூலம் பினாங்கு மாநிலத்தை மேம்படுத்திய பினாங்கு மாநகர் மன்றத்தையும் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தையும் பாராட்டினார். அதோடு, தலையாய சேவையை வழங்கும் பொது தொழிலாளர்களையும் அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு அவர்களை சமீபத்தில் அங்கீகரித்ததையும் குறிப்பிட்டார் மாநில முதல்வர்.

பினாங்கின் சுத்தம், பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய ஆண்டு விழாவை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கின் சுத்தம், பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய ஆண்டு விழாவை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

பினாங்கு ஊராட்சி மன்றங்களின் பொறுப்பில் கடந்த 2008 முதல் 2015-ஆம் ஆண்டு வரை 23,8180 மரங்கள் ரிம 16.5 கோடி செலவில் பசுமையை நிலைநாட்டும் நோக்கில் நடப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும். பினாங்கில் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் இரகசிய கேமராக்கள் பொருத்துதல், சாலைகளில் விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் என பல மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்த மிதிவண்டி ஓட்டும் பழக்கத்தைத் தூண்ட ஆங்காங்கே மிதிவண்டி பாதையும் ஊராட்சி மன்றங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.