ஜார்ச்டவுன் – 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளாக ரிம32.9 பில்லியனைப் பதிவுசெய்து, பினாங்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் முதலீட்டுச் செயல்திறனைப் பதிவுசெய்து வருகிறது.
தற்போதுள்ள தொழில்துறை சூழலமைப்பின் வலிமையே, குறிப்பாக மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E), குறைக்கடத்தி மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில், இந்த முதலீட்டு பெறுவதற்குக் காரணம் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோ கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, திறன் மிக்க தொழிலாளர்களின் இருப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பினாங்கின் மூலோபாய நிலை போன்ற காரணிகளும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
“மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (MIDA) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் பினாங்கு துறைமுகம் மற்றும் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் வழியாக மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மதிப்பு ரிம573 பில்லியனாகவும், இறக்குமதி மதிப்பு ரிம382 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது.
“இந்தச் சாதனை, குறிப்பாக உயர் தொழில்நுட்ப மற்றும் உயர் மதிப்பு பொருட்கள் சம்பந்தப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பினாங்கு ஒரு முக்கிய மையமாக வகிக்கும் பங்கைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் (DUN) நான்காவது தவனையின் முதல் கூட்டத்தில், பத்து லஞ்சாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒங் ஆ தியோங் எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளித்தார்.
கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளித்த கொன் இயோவ், தற்போதுள்ள சூழலமைப்பை வலுப்படுத்தி, மாநிலத்திற்கு உயர் தொழில்நுட்ப மதிப்பைக் கொண்டுவரக்கூடிய முதலீட்டாளர்களுக்கும் தொழில்துறைகளுக்கும் மாநில அரசு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.
“மேலும் நிலையான மற்றும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, புதிய முதலீடுகளைப் பரிசீலிக்கும்போது நிலம், நீர், உழைப்பு மற்றும் பிற வளங்களின் பயன்பாடு தொடர்பான அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
“மாநிலத்தின் சூழலமைப்புக்குக் குறைந்த கூடுதல் மதிப்பை வழங்கும் தொழில்கள், அதிக நிலப்பரப்பைக் கொண்ட அருகிலுள்ள மாநிலங்களில் இடங்களைத் தேர்ந்தெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றன,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரான சாவ் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கில் தற்போதுள்ள தொழில்துறைப் பகுதிகளுக்கு மாற்றுத் தொழில்துறை இடங்களை வழங்குவதில் தனியார் தொழிலதிபர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று கொன் இயோவ் தெரிவித்தார்.
“உலகளாவிய அணுகல் அதிகரித்ததைத் தொடர்ந்து, உற்பத்தித் திறனை அதிகரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து தொழில்துறைப் பகுதிகளுக்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளது.
“அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்களும், உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளும் தற்போதைய முதலீட்டுத் துறைக்குச் சவால்களை ஏற்படுத்துகின்றன.
“இருப்பினும், பினாங்கு இன்னும் வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ‘சிறப்புத் துறையைக்’ கொண்டுள்ளது, இதனால் இப்பகுதியில் ஒரு முக்கிய முதலீட்டு இடமாக அந்த மாநிலம் தொடர்ந்து விளங்குகிறது,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.