பினாங்கில் ஒற்றுமை தைப்பூசம் மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது

img 20240125 wa0080

கெபுன் பூங்கா – “பினாங்கு மாநிலத்தில் 238-ஆவது ஆண்டாக மிக பிரமாண்டமான முறையில் ஒற்றுமை தைப்பூச விழாக் கொண்டாடப்பட்டது.
இந்த வருடம் அணுசரிக்கப்பட்ட ஒற்றுமை தைப்பூசத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இரதங்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாகச் சென்றது.

“ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் சனிஸ்வர நேதாஜி இராயர் அவர்களின் தலைமையில் வழிநடத்தப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இம்மாநில மக்களை, குறிப்பாக இந்தியச் சமூகத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் தனது அர்ப்பணிப்பையும் பங்கையும் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்,” என்று இன்று அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகையளித்தபோது தனது உரையில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.
img 20240124 wa0203

முதலமைச்சர் தனது உரையில், இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு கோவிலுக்கு ரிம200,000 நிதியுதவி வழங்குவதாகவும், அறிவித்தார்.

தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குரிய விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

பினாங்கு மாநில தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிள் என 1.5 மில்லியன் மக்கள் கூட்டம் வருகையளிப்பர் என கோவில் நிர்வாகத்தினர் தங்களின் எதிர்ப்பார்பைத் தெரிவித்தனர்.
img 20240125 wa0063(1)

மேலும், இந்த ஆலயத்திற்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்கும் இக்கொண்டாட்டத்தைக் காண்பதற்கும் சில நாட்களாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிகின்றன. இந்த விழா அனைத்து தரப்பினராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பதனை நன்குப் பிரதிபலிக்கிறது என சாவ் கூறினார்.

இந்த தைப்பூசத் திருவிழா மூன்று நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது.
img 20240125 wa0067

சட்டிப்பூசம் என்றழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் யாவ் மற்றும் அரசியல் தலைவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு வருகை மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் நூற்றுக்கணக்கானத் தண்ணீர் பந்தல்கள் நிறுவப்பட்டுள்ளன. பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் இருந்து பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் யாவ், இரண்டாம் துணை முதல்வர் ஜக்தீப் சிங் டியோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், ஆலய நிர்வாகத்தினருடன் தண்ணீர் பந்தலுக்கும் வருகை மேற்கொண்டனர்.
மேலும், தண்ணீர் பந்தல்களுக்கு வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாநில முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மேள வாத்தியங்களுடன் மாலை அணிவித்து மரியாதைச் செய்யப்பட்டது.

இதற்கிடையில், கோவிலின் தலைவர் நரேஷ்குமார், இதுவரை சுமூகமான மற்றும் அமைதியான கொண்டாட்டத்தை உறுதிப்படுத்த மிகவும் கடினமாக உழைத்த அமலாக்க அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் அவரது கோவில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றித் தெரிவித்தார்.

“பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) ஊழியர்கள், காவல்துறை மற்றும் ரேலா உறுப்பினர்கள், இரதங்கள் மற்றும் கூட்டத்தை நிர்வகிக்க இக்குழுவினர் உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை,” என்று அவர் கூறினார்.

நமது இந்து நண்பர்கள் அனைவருக்கும் தைப்பூசத் தின நல்வாழ்த்துக்கள். உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் போது பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் கொண்டாடுங்கள் என்றார்.

இதற்கிடையில், வருடாந்திர பாரம்பரிய அடிப்படையில், தங்கம் மற்றும் வெள்ளி இரதங்கள் தற்போது அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் ஆகியவற்றில் வைக்கப்படுகின்றன.

தொடர்ந்து நாளை குயின் ஸ்ட்ரிட் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலுக்கும், பினாங்கு தெருவில் உள்ள கோவில் வீடு கோயிலுக்கும் தங்க வெள்ளி இரதங்கள் திரும்பும்.