பினாங்கில் கோவிட்-19ஐ எதிர்கொள்ள நிதித் திரட்டும் திட்டம் – முதல்வர்

Admin

 

ஜார்ச்டவுன் – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவில் பாதிக்கப்படும் மக்களின் நலனுக்காக நேற்று பினாங்கு மாநில மக்கள் நலத்திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இம்மாநில தனியார் நிறுவனமும் தங்களின் பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளனர். தனியார் நிறுவனத்தினர் ரிம2 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து பினாங்கு மாநில கோவிட்-19 நிதி திரட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இன்று நடைப்பெற்ற முகநூல் நேரலையில் அறிவிப்புச் செய்தார்.

14 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவிற்கு தனியார் தரப்பினரிடம் இருந்து இந்த பங்களிப்பினை தாம் எதிர்ப்பார்க்கவில்லை என மாநில முதல்வர் குறிப்பிட்டார்

“எனவே, கிடைக்கப்பெற்ற ஆதரவின் பெயரில் மாநில அரசு பினாங்கு கோவிட்-19 நிதி திரட்டலை தொடங்கியுள்ளது. நிதி வழங்கவிரும்பும் தரப்பினர் மலாயன் வங்கி 557054620930 கணக்கில் செலுத்தலாம்; இவை அனைத்தும் இம்மாநில மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படும்”, என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் விவரித்தார். இந்நிதி திரட்டும் திட்டம் தொடர்பாக www.penanglawancovid19.com எனுன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதனிடையே, அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்படுவதன் மூலம் பினாங்கில் கோவிட்-19 எதிர்க்க முடியும் என அவர் மேலும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாநில அரசு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் கைத்தூய்மி திரவங்களை வழங்கி ஒவ்வொரு தொகுதிகளின் கீழ் இடம்பெறும் சமூக அமைப்புகள் மற்றும் குடியிருப்பு நிர்வாக அமைப்புகள் ஆகிய அனைத்து இடங்களிலும் இத்திரவம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெறுவதை உறுதிச்செய்யும்.

அதே வேளையில் மருத்துவ கை உறைகளை நன்கொடையாக வழங்கிய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மாநில முதல்வர் நன்றி நவிழ்ந்தார்.

மாநில அரசு பினாங்கு பொது மருத்துவமனையில் பணிப்புரியும் வீரர்களுக்காக 70,000 கை உறைகளை வழங்கியுள்ளது. தொடர்ந்து, தனியார் நிறுவனம் 300 பாதுகாப்பு ஆடைகளை பினாங்கு பொது மருத்துவமனைக்கு வழங்கியுள்ளதை சாவ் சுட்டிக்காட்டினார்.

நேற்று மாநில அரசு அறிவிப்புச் செய்த பினாங்கு மக்கள்நல உதவித் திட்டத்தில் 400,000 மக்கள் பயனடைவர். அந்த உதவித் திட்டங்கள் அனைத்தும் ஏப்ரல் இறுதியில் அவர்களுக்கு வழங்கப்படும். இதற்கு எவ்வித பதிவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த சிறப்பு உதவித் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கினை நாங்கள் (மாநில அரசு) அறிவோம், (ஆகவே,) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் மாநில அரசு ரிம30,000 ஒதுக்குகிறது, இந்நிதி தத்தம் சட்டமன்ற பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவியாகப் பயன்படுத்தப்படும்.

“எனவே, அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட தேவைகளை (பாதிக்கப்பட்ட மக்களை) அடையாளம் காண விழிப்புடன் இருக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மக்கள் பிரதிநிதிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் அறிவுறுத்தினார்.