பினாங்கில் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில சட்டமன்றத்தில்(DUN) ஒருமனதாக முன்னாள் புக்கிட் தம்பூன் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ லாவ் சூ கியாங் அவர்களை புதிய தவணைக்கான மாநில சட்டமன்ற சபாநாயகராக அறிவித்தது.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், டத்தோ லாவ் சூ கியாங் அவர்களை சட்டமன்ற சபாநாயகராக முன்மொழிந்து அதனை மாநில முதலாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் டத்தோ முகமட் அப்துல் ஹமிட் வழிமொழிந்ததைத் தொடர்ந்து லாவ் சூ கியாங் போட்டியின்றி சட்டமன்ற சபாநாயகராகப் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழாவில், டத்தோ டாக்டர் அமர் பிரித்திபால் அப்துல்லா அவர்களுக்குப் பதிலாக இரண்டு முறை பாயான் லெப்பாஸ் சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்ற அஸ்ருல் மகாதீருக்கு வழங்கப்பட்டது.
இவர் பினாங்கு அமானா நெகாரா கட்சியின் (அமானா) இரண்டாவது துணைத் தலைவராகவும் மாநிலத் தேர்தல் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

சட்டமன்ற சபாநாயகராக டத்தோ லாவ் சூ கியாங் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மேலும், மாநில சட்டமன்ற சபாநாயகர் முன்னிலையில் 40 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா, பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரான முதலமைச்சருடன் தொடங்கப்பட்டு, அடுத்து 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அதேவேளையில், சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர், முஹம்மது ஃபௌசி இயூசோப் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.
சபாநாயகர் தனது உரையில், சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“இந்த மரியாதைக்குரிய சபையை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி.

“இந்த நம்பிக்கையுடன், மாநில அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து சட்டமன்றக் கூட்ட விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் எனது கடமைகளைச் செவ்வனே செய்வேன்.
“15வது மாநிலத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.

“எனவே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் நலன்களுக்காக வழங்கிய ஆணையின் மூலம், எப்போதும் பொறுமையாகவும், அரசியல் சார்பு இல்லாமல் முழு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் சட்டமன்ற விதிகளுக்குக் கீழ்ப்பட்டு நல்லாட்சி வழங்க வேண்டும்,” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டம் அடுத்த தேதி அறிவிக்கும் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
15வது சட்டமன்றத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய முன்னணியுடன்(BN) இணைந்து 40 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் 29 இடங்களைக் கைப்பற்றி மாநில அரசாங்கத்தை அமைப்பதில் வெற்றிப் பெற்றது.

ஜனநாயக செயல் கட்சி (டி.ஏ.பி) போட்டியிட்ட 19 இடங்களிலும் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது.

இதற்கிடையில், மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்) கெபூன் பூங்கா, பந்தாய் ஜெரேஜாக், பத்து உபான், பத்து மாவுங், மச்சாங் புபுக், புக்கிட் தெங்கா மற்றும் புக்கிட் தம்புன் ஆகிய ஏழு மாநில சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றது.

அதேவேளையில், அமானா கட்சி பாயான் லெப்பாஸ் சட்டமன்ற தொகுதியை வென்றது.
போட்டியிட்ட ஆறு இடங்களில் பெர்தாம் மற்றும் சுங்கை ஆச்சே ஆகிய இரண்டு இடங்களில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கான ஒதுக்கீடு வழக்கம் போல் தொடரப்படும் என முதலமைச்சர்
செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.