பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலய வாகனம் நிறுத்துமிடம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது

Admin
syerleena

கெபுன் பூங்கா – பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி (தண்ணீர்மலை) ஆலய கீழ்வாரத்தில் அமைந்துள்ள வாகனம் நிறுத்துமிடம் பொது மக்களின் வசதிக்காக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் செர்லினா அப்துல் ரஷிட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த மறுசீரமைப்புப் பணி கடந்த ஆண்டு செப்டம்பர்,15 தொடங்கப்பட்டு நவம்பர்,24 இல் நிறைவுப்பெற்றது.

இம்மறுசீரமைப்புப் பணியை திறந்த குத்தகை முறையில் பெர்லியான் டைனமிக் எண்டர்பிரைஸ் நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்று ஶ்ரீ கணேசர் ஆலய அருகாமையில் உள்ள இந்த வாகனம் நிறுத்தும் மறுசீரமைப்புக்கு வருகையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லினா ஆலய நிர்வாகத்திற்குப் பாராட்டுகளை தெரிவித்தார்.

“வழிபாட்டு தலங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வது இந்நாட்டில் வாழும் பல்லின மக்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. எனவே, சிறந்த முறையில் பராமரிக்கப்படும் ஆலய சுற்றுப்புற சூழல் அதனைப் பயன்படுத்தும் சமூகத்தில் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும்.

“ஆகவே, விரைவில் கொண்டாடவிருக்கும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்திற்கு இந்த மறுசீரமைப்புப் பணி வருகையளிக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பயனளிக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.பி.பி.பி கவுன்சிலர் விக்னேசன், அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் நரேஸ்குமார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆலய தலைவர் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு நேரத்தில் 82 வாகனங்கள் நிறுத்த இயலும். எனவே, ஆலயத்திற்கு வருகையளிக்கும் பக்தர்கள் மட்டுமின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு வசதியான சூழல்நிலையை இது வழங்கும் என மேலும் ஷெர்லினா சூளுரைத்தார்.