பினாங்கு, இந்தியா இடையிலான நேரடி விமானச் சேவை விரைவில் தொடங்கப்படும்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசு, பினாங்கு மாநாடு & கண்காட்சி பணியகம்(PCEB) மூலம் ‘Go First Airlines’ விமானச் சேவை நிறுவனத்துடன் பினாங்கு மாநிலத்திருந்து இந்தியா நாட்டின் பிரதான நகரங்களுக்கு நேரடி விமானச் சேவை வழங்க உத்தேசித்துள்ளது. இத்திட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் போது முன்மொழியப்பட்டது.

இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தினால் Go First Airlines நிறுவனம் இத்திட்டம் குறித்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை.

கடந்த 2022, ஏப்ரல் முதல் அனைத்துலக எல்லை திறக்கப்பட்ட வேளையில் மாநில அரசு மேற்குறிப்பிட்ட விமான நிறுவனத்துடன் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது. கூடிய விரைவில் பினாங்கு மாநிலத்திற்கும் இந்தியா நாட்டிற்கும் நேரடி விமானச் சேவைத் தொடங்கப்படும் என சுற்றுலா மற்றும் புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

பினாங்கு மாநிலத்திலிருந்து எட்டு உள்நாட்டு விமான நிலையங்களுக்கும் இந்தோனேசியா, சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, சீனா, வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவையை வழங்குகிறது.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் பினாங்கிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணச் சேவை பட்டியல் குறித்த கேள்விக்கு இயோ இவ்வாறு விளக்கமளித்தார்.