பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்க விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

Admin

பாகான் – “பினாங்கு மாநிலம் பொருளாதாரம், தொழிலியல், உள்கட்டமைப்பு, கல்வி போன்ற துறைகளில் மட்டும் முன்னேற்றம் கண்டு வருவதோடு சமூகம், மனித வளம், விளையாட்டுத் துறைகளிலும் முன்னெடுத்துச் செல்கிறது.

“விளையாட்டுத் துறை குறிப்பாக அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மாநில, தேசிய மற்றும் அனைத்துலக ரீதியிலான தரம் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்க வித்திடும்.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்க(PIBA) விளையாட்டு அரங்கத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து இவ்வாறு கூறினார்.

பினாங்கு மாநில அரசாங்கம் ஊராட்சி மன்றங்களின் ஒருங்கிணைப்பில் காலி நிலங்களை விளையாட்டு, பொழுது போக்கு பூங்கா, மறுசுழற்சி மையம், நகர்ப்புற விவசாயம் போன்ற சமூக பாங்கான இடமாக உருமாற்றம் காண இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த மாநில அரசாங்கம், ஊராட்சி மன்றங்களுடன் கைக் கோர்த்து அரசு சாரா நிறுவனங்கள், சமூக இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள் இணை ஆதரவில் புதிய அணுகுமுறையைக் கையாள இணக்கம் கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்க நிர்மாணிப்புத் திட்டம் இன்று கம்பீரமானத் தோற்றத்துடம் காட்சியளிப்பதற்கு
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் ரிம80,000;
மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி ரிம120,000; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி ரிம30,000 மற்றும் பல ஆதராவாளர்கள் நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி, இந்தப் பூப்பந்து அரங்கம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி பல்லின மக்களும் பயன்படுத்த வரவேற்கப்படுகின்றனர். மேலும், இந்த விளையாட்டு அரங்கத்தை ஓர் இனத்தின் அரங்கமாகப் பார்க்காமல் பல்லின மக்களும் பயன்படுத்தி நன்மைப் பெறலாம் என பேராசிரியர் சூளுரைத்தார்.

“பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்க அரங்கம் ஐந்து ‘பூப்பந்து கோர்ட்’, ‘ஜிம்’ உடற்பயிற்சி மையம், வாகன நிறுத்துமிடம், PIBA அலுவலகம் மற்றும் முக்கிய பொது வசதிகள் குறிப்பாக AED கருவி என சுகாதார அம்சங்களும் இணைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

PIBA சங்கத் தலைவர் துரைராஜு

“PIBA 2011 ஆண்டு தேசிய விளையாட்டு மன்றத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு 2013 ஆண்டு அகாடமியாக அறிமுகம் கண்டு 12 ஆண்டுகளாக பூப்பந்து துறையில் 14 மாநில விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளோம். முன்னதாக, அருகாமையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து விளையாட்டாளர்களுக்கு பூப்பந்து பயிற்சிகளை வழங்கி வந்தோம். கூடுதலான வாடகையை மாதந்தோறும் செலுத்த வேண்டிய காரணத்தாலும் சொந்த விளையாட்டு அரங்கம் நிர்மாணிக்க வேண்டும் என்ற நோக்கிலும் கடந்த ஆண்டு (2022) அடிக்கல் நாட்டு விழா செய்யப்பட்டு, ஒன்பது(9) மாத காலவரையறையில் நிறைவுப்பெற்றது,” என்று இச்சங்கத் தலைவர் துரைராஜு விளக்கமளித்தார்.

இந்த அரங்கம் ரிம2.0மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு பினாங்கு மாநிலத்தின் சிறந்த பூப்பந்து அரங்கமாகவும் திகழ்கிறது, என்றார்.

பினாங்கு இந்தியர் பூப்பந்து
சங்க விளையாட்டு அரங்கம்

‘PIBA சங்கம் செபராங் பிறை மாநகர் கழகத்திடம்(எம்.பி.எஸ்.பி) 0.5 ஹெக்டர் நிலப்பரப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்தகை முறையில் வாடகைக்கு எடுத்துள்ளது என துரைராஜு தெரிவித்தார்.