பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தடயவியல் தணிக்கை அறிக்கைக்குத் தயாராகிறது

Admin
img 20231218 wa0014

 

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கடந்தகால கணக்கு வழக்குகளை சரிபார்க்க தடயவியல் தணிக்கை கணக்கறிக்கை செய்ய ஒரு தனியார் நிறுவனத்தை நியமித்துள்ளது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் கூறினார்.

பினாங்கு அறப்பணி வாரியத்தின் கடந்த கால தலைமைத்துவத்தின் நிர்வாகத்தில் செலவழித்த பணம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் தணிக்கை செய்து அதன் அறிக்கையை பினாங்கு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதே வேளையில் தேவைப்பட்டால் தணிக்கை அறிக்கையை இலஞ்ச ஒழிப்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கூறினார்.

இதுவரையில் ஏறக்குறைய நான்கு தணிக்கை கணக்கியவியல் நிறுவனங்கள் வாரியத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்ய முன்வந்துள்ளனர்.

ஆனால், ஒரு நிறுவனம் மட்டும் ஜனவரி மாதம் 2024 ஆண்டுக்கான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கணக்குகளை தடயவியல் தணிக்கை செய்ய அமர்த்தப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முடிவை அதன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பாக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கூறுகையில் இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் ஆணையர்கள் உடனிருந்தனர்.

அதே செய்தியாளர் சந்திப்பில் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷண் மீது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைமைத்துவம் தொடுத்திருந்த வழக்கை நீடிக்காமல் வழக்கை திரும்பப்பெறும் முடிவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் எடுத்துள்ளது.

யாரிடமும் எந்த விரோதமும் வேண்டாம் என்றும் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு இந்துக்கள் என்ற சித்தாந்தத்தில் யாரும் யாருக்கும் அபராதம் ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஆர்.எஸ்.என் இராயர் தலைமையிலான இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் அனைவரும் கலந்து பேசி ஒரு சமரச முடிவு எடுத்துள்ளனர்.

இந்த சமரச முடிவுக்கு டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷாண் ஒத்துழைப்பு வழங்கி வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆர்.எஸ்.என். இராயர் கூறினார்.

அதே வேளையில் கடந்த காலத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் நடந்த கசப்பான சம்பவங்களுக்கு நான் மனம் திறந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வாரியத் தலைவர் இராயர் கூறினார்.