பினாங்கு குடிமக்களுக்குப் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங்கின் திறந்த மடல்

Admin

எதிர்கால வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு, நம் பிள்ளைகள் போக்குவரத்து நெரிசலின் தலைமுறையாகாமல் இருக்க பினாங்கு மாநில அரசு எதிர்கால முதலீடு செய்வது அவசியம்.

 மாநில அரசு மூன்று நெடுஞ்சாலைகளும் மூன்றாவது பாதையாகக் கருதப்படும் கடல் வழி சுரங்கப்பாதையும் அமைப்பதற்கான திட்டப் பரிந்துரையைப் போட்டித்திறன் மிக்க திறந்த விலை ஒப்பந்தத்தின் வழி ரிம 6.3 பில்லியன் விலைக்கு வழங்கப்பட்டிருப்பதைக் குறித்துச் சில அரசு சாரா அமைப்புகளும் தேசிய முன்னணியும் எழுப்பியுள்ள தவறான குழப்பமான குற்றஞ்சாட்டுகளைக் குறித்து விவாதம் செய்யவே இக்கடிதம். ஆகவே, பினாங்கு தீவில் சாலை நெரிசலைக் குறைக்கவும் செபெராங் பிறையில் போக்குவரத்து ஓட்டத்தை எளிமைப்படுத்தவும் மாநில அரசு எடுத்துள்ள இந்தத் தீவிர முயற்சியைப் பற்றி தெளிவான விளக்கமளிக்க மாநில அரசுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் மக்கள் இதனைப் பற்றி பகுத்தறிய முடியும் என்று நம்புகிறேன்.

இங்கு நான் ‘தீவிரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்குக் காரணம் மக்கள் கூட்டணி அரசு ஆட்சி புரிந்த இந்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கில் சிறந்த போக்குவரத்து முறைமையைக் கொண்டுவர முயற்சி செய்துள்ளோம். தொடக்கமாக, உலகப் பாரம்பரியமிக்க நகரமாக உனேஸ்கோவால் (UNESCO) அங்கிகரிக்கப்பட்ட ஜோர்ஜ் டவுன் நகரத்திற்குத் திராம் (TRAM) வகை இரயில் சேவையே மிகவும் ஏற்றது என்று அறிந்திருந்தும் மோனோரயில் எனப்படும் தனித்த விரைவு இரயில் சேவையை நிர்மாணிக்க மத்திய அரசு பரிந்துரைத்த கருத்தை ஆதரித்தோம்..

ஒவ்வோர் ஆண்டும் மத்திய வரவு செலவுத் திட்டத்தை வகுக்கும்போது இந்த மோனோரயில் பரிந்துரையைத் தீவிர நாட்டமுடைய கனவுப் பட்டியலில் இணைப்போம். ஆனால், இதுவரை எந்தவொரு நேர்மறையான பதிலும் பெற்றதில்லை. எனவே, குண்டுச் சட்டியிலேயே குதிரை ஓட்டுவதைவிடுத்து புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்பதற்காக ராபிட் (RAPID) பினாங்குக்குக் கட்டணம் செலுத்திப் பாரம்பரியமிக்க ஜோர்க் டவுன் நகரப் பகுதிக்கு இலவசப் பேருந்துச் சேவை வழங்கினோம். இந்த முயற்சிக்கு மக்களிடமிருந்து மிகுந்த ஆதரவைப் பெற்றோம். இத்திட்டத்தை விரிவுபடுத்தும் அடுத்தக் கட்டமாகச் செபெராங் பிறையிலிருந்து பாயான் லெப்பால் கட்டற்ற தொழிற்துறைப் பகுதிக்கும் பாலிக் புலாவுக்கும் போய் வர உச்சக்கட்ட நேரத்தில் இலவசப் பேருந்துச் சேவையும் வழங்கினோம். மாநில அரசே இத்திட்டங்களுக்கான செலவினத்தை ஏற்றுக் கொண்டது.

தொடர்ந்து, ஊராட்சி மன்ற அதிகாரிகளே பேருந்து சேவையைச் செயற்படுத்த வேண்டும் என்ற எங்களின் பரிந்துரைக்கு  மத்திய அரசு எந்த ஒரு பின்னூட்டமும் வழங்கவில்லை. இறுதி முயற்சியாக, மாநில அரசு பினாங்கு மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட நேரங்களில் இலவசப் பேருந்துச் சேவையை வழங்க மத்திய அரசுக்கு        ரிம10 மில்லியன் வழங்கத் தயாராக இருந்தது. ஆனால், அத்திட்டமும் அப்படியே நிராகரிக்கப்பட்டது.

நாங்கள் பொது போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பதையே விரும்பினாலும், உண்மை நிலவரம் என்னவென்றால், பொது போக்குவரத்துத் தொடர்புடைய அனைத்தும் தனிச் சிறப்பு வாய்ந்த மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ்ச் செயற்படுபவையாகும். மாநில அரசு நிதி வழங்கியிருந்தாலும், மத்திய அரசின் அனுமதியின்றி எதையும் செய்ய முடியாது. ஆகையால்தான், பொது போக்குவரத்தில் முதலீடு செய்யும் நடவடிக்கைக்கு மீண்டும் மீண்டும் பரிந்துரை செய்வது என்பது தண்ணீரின் மேல் எழுதுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசு நம் சாலைகளை நசுக்குவதில் தீர்மானமாக இருப்பதால் பினாங்கு மாநில அரசு உறுதியாகச் செயற்பட முடிவெடுத்துள்ளது. இனிமேலும் எங்களால் அமைதி காக்க முடியாது. எனவேதான், சாலை வலையமைப்பை விரிவுபடுத்த, மிகவும் நெரிசலான பகுதிகளில் மாற்றுச் சாலைகளை நிர்மாணிக்க முடிவெடுத்துள்ளோம். அதுமட்டுமன்றி, பினாங்குத் தீவிற்கும் செபெராங் பிறை வட்டாரத்திற்குமான இடைவெளியைக் குறைக்கவும் செபெராங் பிறை பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்யவும் மூன்றாவது பாதை அமைத்துப் பினாங்கு தீவையும் செபெராங் பிறையையும் இணைக்கவுள்ளது.

 

பொது மக்களே தீர்மானிக்கட்டும்

பினாங்கு மக்கள் கூட்டணி அரசு, 1.6 கோடி பினாங்கு குடிமக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்த்து உடன்படும். அதனால்தான், இத்திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டுத் தொடங்கியது முதல், இதுவரை மேற்கொள்ளப்படாத நடவடிக்கையாகப் பொது மக்களும் உள்நாட்டுச் சமூகத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டம் மிக அவசரமாகச் செயற்படுத்தப்படவில்லை. பொது மக்களுடனான பொது ஆலோசனை செயற்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2011-ஆம் ஆண்டு திறந்தவிலை ஒப்பந்தந்திற்காக அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், கெர்னி டிரைவ்வையும் பாகான் ஆஜாமையும் இணைக்கும் 6.5கிமீ நீளமுள்ள கடலுக்கடியிலான சுரங்கப்பாதை, தஞ்சோங் பூங்காவிலிருந்து தெலுக் பகாங்கிற்குச் செல்லக்கூடிய 12 கிமீ நீளமுள்ள இரட்டைச் சாலைகள், கெர்னி டிரைவ்வையும் துன் டாக்டர் லிம் சொங் யு நெடுஞ்சாலையை இணைக்கும் 4.2கிமீ நீளமுள்ள குறுக்குச் சாலை, மற்றும் அதே செடுஞ்சாலையையும் பண்டார் பாரு ஆயர் ஈத்தாமையும் இணைக்கும் 4.6கிமீ நீளமுள்ள மற்றொரு குறுக்குச் சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

மாநில அரசு இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை  ‘Construction Zenith’ செனிட் கட்டுமானம், China Railway Construction Corporation Ltd (CRCC) சீனா தண்டவாளக் கட்டுமான நிறுவனம் , ‘Beijing Urban Construction Group’ பெய்ஜிங் உர்பான் கட்டுமானம், ‘Sri Tinggi Sdn Bhd’ ஸ்ரீ திங்கி நிறுவனம் மற்றும் ‘Juteras Sdn Bhd’ ஜுதெராஸ் நிறுவனம் ஆகிய உள்நாட்டு நிறுவனங்களைக் கூட்டுமுயற்சியில் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் சிறப்புப் பயன்பாட்டு நிறுவனமான கொன்செர்தியும் செனிட் ‘Consortium Zenith BUCG’ என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் Beijing Urban Construction Group சீன நாட்டின் முதன்மை கட்டுமான நிறுவனமாகும். பெய்ஜிங்கின் பறவைக் கூடாக அழைக்கப்படும் உலக புகழ்மிக்க ஒலிம்பிக் அரங்கம் இந்நிறுவனத்தால் கட்டப்பட்டது. அதுபோல் China Railway Construction Corporation Ltd நிறுவனம், உயர்ந்த தண்டவாளமாகக் கருதப்படும் ‘Tibet’ தீபட் தண்டவாளம் உட்பட சீனாவில் பெரும்பான்மையான இரயில் பாதைகளைக் கட்டியுள்ளது.

 

மோனோரயில் வேண்டாம் , திராம் (Tram) வேண்டும்!

மக்கள் கூட்டணி அரசு புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், பினாங்கையும் செபெராங் பிறையையும் இணைக்கப் பினாங்கு மாநிலம் முழுவதும் திராம் வகை இரயில் சேவையை அமைக்கப் பரிந்துரை செய்வோம். தேசிய முன்னணி பரிந்துரை செய்த மோனோரயில் பினாங்கைப் போன்ற உலகப் பாரம்பரிய நகரத்திற்கு ஏற்புடையதல்ல. மேலும், இதன் உயர் கட்டமைப்பு பினாங்கின் எழில்மிகு தோற்றத்தைச் சீர்குலையச் செய்ய வல்லது. நிலத்தின் மேல் நகரக்கூடிய திராம் வகை இரயில் சேவை பினாங்கின் பாரம்பரியத்திற்கு ஏற்புடையதாக இருப்பதால் நடப்புப் பாதைகள் திராம் இரயில் தண்டாவாளத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு புதிய மாற்றுச் சாலைகள் அவசியமாகிறது.

பினாங்கில் தேசிய முன்னணி வெற்றி பெற்றாலும் தேசிய முன்னணியின் இந்த மோனோரயில் திட்டம் நிறைவேறுவதற்குச் சாத்தியம் இல்லை. அதற்கு முதல் காரணம், உனேஸ்கோ மோனோரயிலை அனுமதிக்காது. அப்படி நிர்மாணித்தால், உலகப் பாரம்பரியமிக்க நகரம் என்ற அங்கிகாரத்தைப் பினாங்கு மாநிலம் இழந்துவிடும். இரண்டாம் காரணம், 2006-ஆம் ஆண்டில் முன்னால் பிரமரான துன் அப்துல்லா அமாட் படாவியால் அளிக்கப்பட்ட மோனொரயில் வாக்குறுதியை இன்றுவரை தேசிய முன்னணி நிறைவேற்றவில்லை. நடப்பு பிரதமரான டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்களாலும் இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், நாம் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகி இந்தத் திராம் செயற்முறையைக் கொண்டு வர காத்திருக்க வேண்டும்.

 

ஜோர்ஜ்டவுன், பினாங்கிற்குள் நுழைவதற்குக் கட்டணம் விதிக்கப்படாது.

மாநில அரசு வரையறுத்துள்ள இந்த நான்கு பிரதான நெடுஞ்சாலைகளின் நிர்மாணிப்புத் திட்டம் பொது போக்குவரத்துப் பெருந்திட்டத்திற்குள் Pelan Induk Pengangkutan Awam (PTM) அடங்கவில்லை  என்ற குற்றஞ்சாட்டை மறுக்கிறேன். வெறும் கால அளவில் மட்டுமே இங்கு வேறுபாடு உள்ளது. பி.தி.எம், இக்கடல் வழிச் சுரங்கப் பாதையின் நிர்மாணிப்பு 2025-2030ஆம் ஆண்டுகளில் நிறைவடையும் என்று வகுத்த நிலையில் மாநில அரசு 2023- ஆம் ஆண்டு என்று இரண்டு ஆண்டுகள் வேறுபாட்டில் நிறைவடைய முன் கொண்டு வந்துள்ளது. மேலும் மூன்றாவது இணைப்புப் பாதையான கடல் வழிச் சுரங்கப் பாதையை அனைத்து ஒழுங்குமுறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழலின் பாதுகாப்பை உறுதி செய்து நிர்மாணிக்க 20 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு முறைக்கேடு ஏற்படுமானால் இத்திட்டம் நிச்சயம் கைவிடப்படும்.

பினாங்கு ஜோர்ஜ்டவுன் உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்ற தீவிரப் பரிந்துரைக்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. மக்கள் கூட்டணி அரசாங்கம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பினாங்கு மாநிலத்தில் தங்கு தடையின்றி பிரவேசிக்க வேண்டும் என எண்ணம் கொள்கின்றது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகச் ‘சிங்கப்பூர் மாதிரி’யைப்’ பின்பற்றுவது ஏற்புடையதல்ல. இது பணக்காரர்கள் மட்டுமே ஜோர்ஜ் டவுன் நகருக்கு நுழைய முடியும் என்ற பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. ஆக, பாரபட்சம் பார்க்கும் மாநில அரசாக நாங்கள் இருக்க விரும்பவில்லை.

கோலாலம்பூரில் நான் கலந்து கொண்ட இந்நான்கு பிரதான நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்புத் திட்டங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்ற நிகழ்ச்சியின் போது பிரதமர் டத்தோ  ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் சீன நாட்டு பிரதமர் வென் ஜியா பாவ் ஆகிய இருவரும் சாட்சியாளர்களாக இருந்ததன் வழி மத்திய அரசு இத்திட்டத்தைப் பற்றி கடந்த ஏப்ரல் 2011ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே நன்கு அறிந்துள்ளது என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 14.11.2011-ஆம் நாள் இத்திட்டத்திற்கான திறந்தவிலை ஒப்பந்தம் விடப்பட்டது. இத்திட்டத்தைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்க 2011-ஆம் ஆண்டு பொதுமக்களுடனான கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.

 

இத்திட்டத்திற்கானத் திறந்த விலை ஒப்பந்தத்தின் வெற்றியாளரின் மதிப்பீடு மற்றும் பரிந்துரை மாநில செயலாளர் டத்தோ ஃபாரிசான் பின் டாருஸ் மற்றும் மாநில நிதியியல் அதிகாரி டத்தோ ஹஜி மொக்தார் பின் முகமது ஜாயிட் ஆகிய இருவரின் கீழ் தனித்தனியே அமைக்கப்பட்ட இரு செயற்குழுவினால் எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் மாநில முதல்வராக நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை. இத்திட்டத்திற்கான திறந்த விலை ஒப்பந்த மதிப்பீட்டின் செயற்முறை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பரிசீலனைச் செய்யப்பட்டது என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

 

24 பங்கேற்பாளர்களில்  1 எதிர்ப்பு, 9 ஆதரவு, மற்றவர்கள் கூடுதல் விளக்கமளிக்கக் கோரினர்.

 இந்நான்கு பிரதான நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க நீண்ட காலம் தேவைப்படும் வேளையில் குறுகியக் காலக்கட்டத்தில் நிறைவுச் செய்ய இயலும் என்று கூறுவது ஏற்புடையதா? ஏனெனில் முதல் நெடுஞ்சாலையின் நிர்மாணிப்பு 2017ஆம் ஆண்டும் கடல் வழிச் சுரங்கப் பாதையின் நிர்மாணிப்பு 2023-2025ஆம் ஆண்டும் நிறைவடையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டைப் Environmental Impact Assessment (EIA)  பின்பற்றியே இத்திட்டத்தை மேற்கொள்வதால் இவற்றை நிர்மாணிக்க நீண்ட காலம் தேவைப்படும். ‘EIA’ மதிப்பீட்டுத் தேவைகளை நிறைவேற்றத் தவறும் நிலையில் இந்நான்கு திட்டங்களும் கைவிடப்படும்.

இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் மக்களின் முழு ஆதரவோடு பொது தேர்தலுக்குப் பின் சில மாதங்களில் கையொப்பமிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  பொது மக்களுடன் ‘டவுன் ஹாலில்’ நடத்தப்பட்ட பொது ஆலோசனை மற்றும் பொது கலந்துரையாடலின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் இத்திட்டத்தைத் துல்லியப்படுத்துவதற்கு உதவும் என நம்புகிறேன். பொது மக்கள் இத்திட்டத்திங்களுக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தால் நிச்சயம் மாநில அரசு இத்திட்டங்களைத் தொடராது.

கடந்த மார்ச் 10ஆம் திகதி ‘டவுன் ஹாலில்’ நடத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட 24 இளம் பங்கேற்பாளர்களில் ஒருவர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் 9 பேர்கள் ஆதரவு அளித்ததோடு மற்ற பங்கேற்பாளர்கள் இத்திட்டத்தைப் பற்றிய கூடுதலான விளக்கம் வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இத்திட்டப் பரிந்துரைக்கு இளைஞர்கள் முழு மனதுடன் ஆதரவு தெரிவித்தது கவனிக்க வேண்டியதாகும். இது இளைஞர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்தச் சாலை போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட விரும்பவில்லை என்பதை பறைசாற்றுகிறது,

எனவே, பினாங்கு மாநில அரசு இளைய தலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தைப் போக்குவரத்து நெரிசலில்லாமல் செம்மைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

 

தேசிய முன்னணி தஞ்சோங் பினாங்கிலுள்ள 940 ஏக்கர் நிலத்தை ஏன் ஒரு சதுர அடியை ரிம 1 க்கு விற்பனைச் செய்தது என்று தெங் சாங் யோவ் விளக்கமளிக்க முடியுமா???

 

திறந்த விலை ஒப்பந்தத்தில்  ரிம 8 பில்லியனுக்கு விடப்பட்ட ஏலத்தை ரிம 6.3 பில்லியன் குறைந்த விலைக்கு ‘Consortium Zenith BUCG Sdn Bhd’ என்ற நிறுவனம் பெற்றனர். இத்திட்டத்திற்கான நிதியை ரொக்கப் பணமாகக் கொடுக்காமல்  தஞ்சோங் பினாங்கில் அமைந்திருக்கும் 110 ஏக்கர் மீட்டெடுப்பு நிலமாகக் கொடுக்கப்படும். இந்நிலத்திற்கு, முந்தைய தேசிய முன்னணியால் அனுமதி வழங்கப்பட்டதும் முன்னாள் முதலமைச்சர்  டான் ஸ்ரீ டாக்டர் கோ சூ கூன் அவர்கள் தஞ்சோங் பூங்காவிலிருந்து  பட்டர்வர்த் செல்வதற்கான அரை சுரங்கப் பாதை அமைப்பிற்கு ஆதரவு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நில மீட்டெடுப்புப் பிரச்சனை அவதூறு என தேங் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் தேசிய முன்னணிதான் 940 ஏக்கர் நிலத்தைப் பண்படுத்தும் பொருட்டு அதிலிருந்து 10% நிலம் மாநில அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற விதியோடு ஒரு சதுர அடி நிலத்தை ரிம 1 –க்கு விற்பனைச் செய்தது. ஆதலால் 940 ஏக்கர் நிலத்தின் ஒரு சதுர அடியை ரிம 1–க்கு விற்பனைச் செய்ததன் நோக்கத்தை தேங் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். ஏனெனில் ஒரு சதுர அடிக்கு ரிம 1 என்பது மிக மிக குறைவான விலையில் விற்பனைச் செய்யப்பட்டுள்ளதை மக்களுக்குத் தெளிவுறுத்துகிறோம். பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் நான்கு பிரதான நெடுஞ்சாலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக 10% இலிருந்து 20% நிலத்தை மாநில அரசுக்கு வழங்குவதை உறுதி செய்துள்ளது. இந்நிலத்தின் மூலம் பெறப்படும் நிதியானது இத்திட்டத்தை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும்.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு முதலாம் பினாங்குப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் இம்மாநிலத்திற்கு எதிர்காலத்தில் மூன்றாவது மாற்றுவழிப் பாதை மிக அவசியம் என்பதை நினைவுறுத்தியது.  மூன்று பிரதான நெடுஞ்சாலைகளின் நிர்மாணிப்பு பத்து பிரிங்கி, ஜோர்ஜ்டவுன் சுற்று வட்டாரம், பண்டார் பாரு ஆயர் ஈத்தாம், பார்லிம் ஆகிய இடங்களின் சாலை போக்குவரத்து நெரிசலை நிவர்த்திச் செய்யும் என்பது திண்ணம். அதே வேளையில், கடல் வழிச் சுரங்கப் பாதை வட செபெராங் பிறையின் பொருளாதார வளர்ச்சியை மேன்மையடைய வழிவகுக்கும்.

மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் பொது போக்குவரத்துத் துறையை மேன்மைப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் குற்றஞ்சாட்டாமல் மக்களுக்காகச் போக்குவரத்து நெரிசலைக் களைவதற்குப் பல அணுகுமுறைகளை மேற்கொள்ளும். வெறும் பினாங்குத் தீவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி செபெராங் பிறையை உள்ளடக்கிய அனைத்துப் பகுதிகளின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் ஆக்கபூர்வ அணுகுமுறைகளைக் கையாளும். மத்திய செபெராங் பிறை மற்றும் தெற்கு செபெராங் பிறை பினாங்கு தீவுடன் இணைவதற்கு  பாலம் இருக்கும் வேளையில் வட செபெராங் பிறையை இணைப்பதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடல் வழிச் சுரங்கப் பாதை அவசியமாகிறது.

 

லிம் குவான் எங்

பினாங்கு மாநில முதல்வர்