மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு நேர்காணல்

Admin
மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்

நன்றி:  திரு மோகனன் & செ.குணாளன் (மக்கள் ஓசை)

“எங்கள் ஆட்சி தொடர வேண்டுமா? இல்லையா? என மக்கள் எடுக்கும் ஜனநாயக முடிவுக்குத் தலை வணங்குவோம்.”

 

கேள்வி : முப்பது ஆண்டுகளுக்கு மேல் உங்கள் தந்தை பினாங்கு மாநில ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தார். நீண்ட கால போராட்டத்திற்குப் பின்னர் உங்கள் தலைமையில் மாநில ஆட்சி அமைந்த அந்த நிமிடத்தில் உங்கள் தந்தையின் உணர்வு எப்படி இருந்தது?

பதில் : நான் அமர்ந்திருக்கும் இந்த ‘நாற்காலி’ ஜனநாயக செயல் கட்சி உறுப்பினர்களின் 30 ஆண்டு கால உழைப்பு, நாட்டு மக்களின் 50 ஆண்டுகால தைரியமான முடிவு, ஜனநாயகத்தின் காத்திருப்பு. என் தந்தை நெகிழ்ந்து போனார். மக்களின் வரிப் பணத்தை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நிர்வகிக்கும் அரசு வேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடத்தி நாங்கள் இருவரும் சேர்ந்தே சிறை சென்றுள்ளோம். எங்களைப் போலவே கட்சித் தோழர்கள் பலரும் சிறை சென்றுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட வேண்டும் என்று கட்டி அணைத்துக் காதில் சொன்னார்.

 

கேள்வி: நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் முன்வைத்த மிக நியாயமான கோரிக்கைகளைக் கூட, எதிர்கட்சி உறுப்பினரின் கருத்து என்பதற்காகப் புறக்கணிக்கிறார்கள் என கடந்த காலங்களில் ஆதங்கப் பட்டுள்ளீர்கள். இப்போது நீங்கள் மாநில முதல்வர். உங்கள் மாநில எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்?

பதில்: நான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன். மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவன். எதிர்கட்சி தலைவருக்குக் கொடுக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் உரிய முறையில் வழங்கி உள்ளோம். அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளோம். அரசியல் வாத விவாதங்களுக்கு அப்பால், மாநில மேம்பாட்டிற்காக எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினர் முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.. மிகமுக்கியமாகச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்கட்சியினர் உரையாற்றும் போது ஒலிவாங்கியை அடைத்தது இல்லை.

 

கேள்வி: உங்களுடைய ஆட்சியில் பினாங்கு மாநில இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை வரைந்துள்ளீர்களா?

பதில்: தரமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதன் மூலமே இந்திய சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சனைக்களுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அவ்வகையில், மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் 16 பள்ளிகளில் மட்டுமே பாலர் பள்ளி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. எஞ்சியுள்ள 12 தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கு மாநில நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாகப் பாலர் பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்தது பினாங்கு மாநில அரசுதான். மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிக்கு 2009 ஆம் ஆண்டு 1.5 மில்லியன் வெள்ளி; 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 1.75 மில்லியன் வெள்ளியைப் பினாங்கு மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அஸாத் தமிழ்ப்பள்ளி, வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு மக்கள் கூட்டணி அரசு நிலம் வழங்கி உள்ளது. 50 ஆண்டுகால ஆட்சியில் இம்மாநிலத்தில் எத்தனை தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது என மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பினாங்கு மாநிலத்தில் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி தொடங்க நிலம் வழங்க மாநில அரசு தயாராக இருக்கிறது. வரலாற்றுப் பூர்வமான அத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

மேலும், அதிகமான இந்தியர்கள் வாழும் பாகான் டாலாம் தொகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்புக்கு நிலம் கொடுக்க மாநில அரசு தயாராக இருக்கிறது, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதின் யாசினுக்குக் கடிதம் அனுப்பி உள்ளோம். இதுவரை கல்வி அமைச்சிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இதைத்தவிர்த்து ,ஆண்டு தோறும் மாநிலத்தில் உள்ள ஆலயங்களுக்கு இந்து அறப்பணி வாரியத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறோம்.

 

கேள்வி: தமிழ்ப் பள்ளிக்கு நிதி, ஆலயங்களுக்கு நிதி, சமூக அமைப்புக்களுக்கு நிதி இவையெல்லாம் தேசிய முன்னணி காலத்திலிருந்து சொல்லப்படுகின்ற – கொடுக்கப்படுகின்ற சலுகைகள்தான். இந்தியர்களின் மேம்பாட்டிற்காக மாநில அரசு கொள்கை அமைப்பில் என்ன உறுதி செய்திருக்கிறது.

பதில்: பினாங்கு மாநிலத்தில்தான் அதிகமான இந்திய பிரதிநிதிகள் இருக்கிறார்கள். பினாங்கில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகளில் வழக்கறிஞர் கர்பால் சிங் புக்கிட் கெளுகோர், பேராசிரியர் டாக்டர் இராமசாமி பத்து காவான் ஆகியத் தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில், ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களாகப் பிறையில் பேராசிரியர் டாக்டர் இராமசாமி, டத்தோ கிராமாட்டில் ஜக்டிப் சிங், பாகான் டாலாமில் அ.தனசேகரன், ஸ்ரீ டெலிமாவில் நேதாஜி இராயர் ராஜாஜி, பத்து உபானில் இரவீந்திரன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மாநில மக்கள் நலன் குறித்த முடிவுகள் எடுக்கும் வாத விவாதங்களில் அவர்களது பங்கேற்பு மிக முக்கியமானதாகக் கருதப்படும். மலேசிய அரசியல் வரலாற்றிலேயே இந்தியர் ஒருவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மாநில இந்தியர்களின் உரிமைக்கு அரசியல் ரீதியிலான பாதுகாப்பு ஏற்படுத்த எல்லா அடிப்படையும் உருவாக்கப் பட்டுள்ளது.. அதுமட்டுமன்றி, பினாங்கு சட்டமன்றச் செயலாளராக முதல் இந்தியப் பெண்மணியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி: ஏராளமான இந்திய பிரதிநிகள் – துணை முதல்வர் பதவி இந்தியருக்கு இருந்தாலும் அவர் அதிகாரம் இல்லாத துணை முதல்வர் என குற்றஞ்சாட்டப்படுகிறதே?

பதில் : உண்மைதான் எங்கள் ஆட்சியில் பதவியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லை. எல்லா அதிகாரமும் மக்கள் கையில்தான் இருக்கிறது. பதவியில் இருப்பவர்கள் கையில் அதிகாரம் குவிந்து கிடப்பதால்தான், அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல், பண விரையம் ஆகியவை ஏற்படுகின்றது. இதனால், பதவியில் இருப்பவர்களைப் பார்த்து, பதவியில் அமர வைத்த மக்கள் அஞ்சுவதற்கு அடிப்படையாக இருக்கிறது அதிகாரம். எனவே எங்கள் ஆட்சியில் அதிகாரம் உள்ளவர்கள் யாரும் இல்லை. மக்களுக்குச் சேவையாற்றும் அர்ப்பணிப்பு உணர்வும். தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுபவர்கள் மட்டுமே உள்ளனர்.

 

கேள்வி: இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்நிய முதலீட்டில் முதலிடம் வகித்தீர்கள். அதன் பின்னர் நிலை நிறுத்த முடியவில்லையே?

பதில் : இதற்கு முந்திய ஆட்சியில் ஒரு முறைக்கூட பினாங்கு அந்நிய முதலீட்டில் முதலிடம் வகித்தது இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் பினாங்கு அந்நிய முதலீட்டில் முதலிடத்திலும் இதர மூன்று ஆண்டுகள் சிலாங்கூர் மாநிலம் முதலிடத்திலும் இருந்தது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.  ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு மிக முக்கியம். ஆனால் மாநில பொருளாதார வளர்ச்சியின் அளவை அந்நிய முதலீட்டை மட்டுமே வைத்து முடிவு செய்துவிடமுடியாது. உள்நாட்டு வளத்தையும் முதலீட்டையும் முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலமும் ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

கேள்வி: இன்றைய பினாங்கு மாநில பொருளாதார நிலை என்ன?

பதில்: நாங்கள் 2008இல் ஆட்சியைக் கைப்பற்றிய போது, மாநிலத்தின் கடன் ரிம 630.13 மில்லியனாக இருந்தது. 2011ஆம் ஆண்டின் தேசிய கணக்குத் தணிக்கையின்படி மத்திய அரசிடமிருந்து பெற்றிருந்த மாநிலக் கடன் தொகையை 95% அதாவது 30 மில்லியனுக்குக் குறைத்துள்ளோம். இது மத்திய் அரசிடம் நீர் சொத்துடமைக்கான மறுகட்டமைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் வழி சாத்தியப்படுள்ளது.

2009ஆம் ஆண்டு தொடங்கி, 500 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெரும் மக்கள் தங்கள் செலவீனத்தைச் சமாளிக்கவும் அவர்கள் குறைந்தபட்ச மாத வருமானம் 600 வெள்ளி பெறுவதை உறுதி செய்யவும் கூடுதல் நிதி வழங்கும் மாநில அரசின் உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்வழி 2009-ஆம் ஆண்டு அதிவறுமையை ஒழித்த முதன் மாநிலமாகப் பினாங்கு மாநிலம் சரித்திரம் படைத்தது. இவற்றைத் தவிர, மக்கள் கூட்டணியின் ஆக்ககரமான திட்டங்களில் வயது முதிர்ந்தோர் திட்டம், தங்கக்குழந்தை திட்டம், மாற்றுத் திறனாளி திட்டம், தனித்து வாழும் தாய்மார்கள் திட்டம், தங்க மாணவர் திட்டம், உயர்நிலைக் கல்வித் திட்டம், மரண சகாயத் திட்டம் யாவும் அடங்கும். இவ்வனைத்துத் தங்கத் திட்டங்களின் வழி மக்களுக்குப் பொருளாதார அடிப்படையின் வழி உதவி வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம். அவ்வகையில் இன்று மத்திய அரசாங்கம் வழங்கும் 500 வெள்ளி உதவித் திட்டம், பினாங்கு மாநிலம் எடுத்த முயற்சியால் உதயமானது என்ற வரலாற்றைப் பதிவு செய்வதில் மாநில அரசு மனநிறைவு கொள்கிறது. அதுமட்டுமன்றி, இவ்வாண்டு தொடங்கி, பினாங்கு வாழ் மக்கள் குறைந்தபட்ச மாத வருமானம் ரிம770ஐ பெறுவதை உறுதி செய்ய சமத்துவப் பொருளாதாரத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உதாரணத்திற்கு ரிம600 மாத வருமானம் பெறும் குடும்பத்திற்கு மாநில அரசு ரிம170 தொகை இதன் மூலம் பினாங்கில் வறுமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்.

 

கேள்வி: பினாங்குத் தீவில் சாமன்ய மக்கள் வாழவே முடியாத அளவிற்கு வீட்டு விலை, வாடகை, வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்து வருகிறதே?

பதில்: வீட்டு விலை உயர்வடைந்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. தீவில் நிலத்தின் மதிப்பு உயர்வடைந்து வருவதால், வீட்டு விலையும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் சாமான்ய மக்களின் நலனை முன்வைத்து ஏற்புடைய விலையில் வீடமைப்பு திட்டங்களை மாநில அரசு வடிவமைத்துள்ளது. புறநகர் பகுதிகளில் 72,500 வெள்ளி முதல் 220,000 வெள்ளி வரையிலான வீடுகளும் நகர் பகுதிகளில் 22,500 வெள்ளி முதல் 400,000 வெள்ளி வரையிலான வீடுகள் நகர்புறங்களிலும் நிர்மாணிக்கப் படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜார்க் டவுன் ஜாலான் எஸ் பி செல்லையாவிலும் பத்து காவான் பண்டார் காசியாவிலும் 19,172 வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் 82 வீடுகள் மட்டுமே 400,000 வெள்ளி விலையிலான வீடுகளாகும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 

கேள்வி : இந்தத் தேர்தலில் கம்போங் புவா பாலா விவகாரம் எது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்?

பதில்: பினாங்கு மாநிலத்திற்கு வெளியே உள்ள மக்கள் கம்போங் புவா பாலா விவகாரம் குறித்துச் சொல்லப் படும் பொய் பிரச்சாரங்களை ஒரு வேளை நம்பலாம். ஆனால் பினாங்கு மாநில மக்களைப் பொருத்த வரையில் உண்மை நிலையை நன்கு அறிவார்கள்.

அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டின் இன்றைய குறைந்த பட்ச மதிப்பு 7 முதல் 8 இலட்சம் வெள்ளியாகும். ஒரு தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். பொது நியாயம் அறிந்த மக்கள், மாநில அரசு செய்து கொடுத்துள்ள ஏற்பாட்டை வரவேற்பார்கள். அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது.

 

கேள்வி: கடந்த பொதுத் தேர்தலில் உங்களோடு கைக்கோர்த்து நின்ற ஹிண்ராப் தலைவர் வேதமூர்த்தி, பிரதமரைச் சந்திக்க போவதாகக் கூறியுள்ளாரே?

பதில்: ஜனநாயக அமைப்பு முறையில் யார் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். தனிப்பட்ட முறையில் நான் அவரைச் சந்திக்கவில்லை. எங்கள் கட்சி சார்பில் தலைவர்கள் அவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்களைப் பொறுத்த வரையில் ஹிண்ராப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இன்னும் வழி இருக்கிறது.