பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

Admin

நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் நடைபெற வழிவிடும் வகையில் கடந்த 5.4.2013 அன்று பினாங்கு மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. முன்னதாகப் பினாங்கு மாநில ஆளுநரின் அனுமதியைப் பெற்ற மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் இவ்வறிவிப்பைச் செய்தார். வாரத்தின் சிறந்த நாளாக கருந்தப்படும் மங்கலகரமான வெள்ளிக்கிழமையன்று சட்டமன்றத்தைக் கலைக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்ததாகக் கூறினார்.

2008ஆம் ஆண்டு மார்ச் 8-இல் பினாங்கு மக்கள் ஏற்படுத்திய அரசியல் சுனாமியால் பினாங்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பினாங்கு மாநில மக்களோடு இணைந்து நாங்கள் பலவற்றைச் சாதித்துள்ளோம் என்று முதல்வர் பெருமையுடன் கூறினார். வெளிப்படையான குத்தகை முறை, மாநில வரவுசெலவுத் திட்டங்களின் மிகையான நிதி, மாநில அரசின் கடனை 95% அதாவது 630 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 30 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைத்தது ஆகிய பினாங்கு மக்கள் கூட்டணி அரசின் செயல்பாடுகளை அனைத்துலக வெளிப்பாட்டுத்தன்மை நிறுவனம்  மற்றும் தேசிய தலைமை கணக்காய்வாளர் அறிக்கை ஆகியவை மலேசியாவின் மிகத் தூய்மையான ஆட்சி நடக்கும் மாநிலம் என்பதை நிரூபித்துள்ளது. மக்கள் நலன் காக்கும் மக்கள் கூட்டணி அரசு, பினாங்கை மேம்படுத்த, பல திட்டங்களை அறிமுகம் செய்து வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கதாகும். பினாங்கு மக்களின் பேராதரவின்றி இவை சாத்தியப்பட்டிருக்காது என்று முதல்வர் தம் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். அனைத்துலகத் தரமிக்க அறிவார்ந்த நகரமாக மலேசியாவின் முதல் நிலை மாநிலமாகப் பினாங்கை உருவாக்க எண்ணம் கொண்டுள்ளோம். இதனை நிறைவேற்றும் அதிகாரத்தையும் நம்பிக்கையையும் மக்களே எங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் தம் சிறப்புரையில் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். அதோடு ஒரு தவணைக்காலம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பை அளித்த மக்களுக்கு தம் மனமார்ந்த நன்றியினையும் சமர்ப்பித்துக் கொண்டார்.

மலேசியாவின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமான பினாங்கு  மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் 19 தீவிலும் மற்றவை பெருநிலத்திலும் உள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளோ மொத்தம் 13 உள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜசெக கட்சி 19 சட்டமன்றத் தொகுதிகளையும் மக்கள் நீதிக் கட்சி 9 தொகுதிகளையும், மலேசிய இஸ்லாமியக் கட்சி 1 தொகுதியையும் கைப்பற்றிய வேளையில் தேசிய முன்னணி 11 தொகுதிகளை வென்றது. மேலும், பினாங்கின் 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜனநாயக செயல்கட்சி 7 தொகுதிகளையும், மக்கள் நீதிக் கட்சி 4 தொகுதிகளையும், தேசிசிய முன்னணி 2 தொகுதிகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, லிம் குவான் எங் தலைமையில் பராமரிப்பு அரசாங்கம் செயல்படும்.