ஜார்ச்டவுன் – 2027ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநிலத்தில் முதன்முறையாகத் திருமணம் செய்துகொள்ளும் தகுதியுடைய தம்பதியினருக்கு, ஒருமுறை ரிம500 நிதியுதவி வழங்கும் ‘தங்கத் திருமணத் தம்பதியர் திட்டத்தை’ மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், i-Sejahtera திட்டத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படும் இப்புதிய முன்முயற்சி திட்டம், மக்களின் சமூகநலனை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
அதேவேளையில், இத்திட்டங்களுக்காக மொத்தம் ரிம58 மில்லியன் தொடர்ந்து ஒதுக்கப்படும், என்றார்.
“இதற்கிடையில், சமூகநலத் துறை மூலம் வழங்கப்படும் சமூக நல நிதியுதவிகள் மற்றும் சமத்துவ பொருளாதார வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் செயல்திட்ட உதவித் திட்டம் (BAES) ஆகிய திட்டங்களுக்கு மாநில அரசு ரிம8 மில்லியன் ஒதுக்கீட்டையும் அங்கீகரித்துள்ளது.
“மேலும், முதல் முறையாகப் ‘பினாங்கு மாநில சமூக மேம்பாட்டு நிதியம்’ 2027ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரிம350,000 ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களுக்கு உதவுவதுடன், பல்வேறு சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் இதன் நோக்கமாகும்,” என்றார்.
பினாங்கு மாநிலத்தின் 15ஆவது சட்டமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தொடரில், 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநிலத்தின் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்ந்து சாதகமான முன்னேற்றத்தைக் கண்டு வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், இதுவரை மொத்தம் 176,457 ‘முத்தியாரா’ வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது, 2030ஆம் ஆண்டுக்குள் 220,000 வீடுகளை வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் இலக்கில் 80.21 விழுக்காட்டை எட்டியுள்ளது.
2021 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்தின் (LPNPP) மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தம் 22 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 13 முத்தியாரா வீடமைப்புத் திட்டங்களும், ஒன்பது நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களும் அடங்கும்.
“இத்திட்டங்களின் மூலம் மொத்தம் 18,342 குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தற்போதைய வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 2027ஆம் ஆண்டில் மாநில அரசின் வாடகை வீடுகள் மற்றும் மக்கள் வீடமைப்புத் திட்டங்கள் (PPR) ஆகியவற்றின் கீழ், இணைந்து வாழும் குடியிருப்பு முறையை (Co-living) அறிமுகப்படுத்துவது குறித்தும் LPNPP ஆராயவுள்ளது.
“குறிப்பாக, தனியாக வசிக்கும் திருமணமாகாதவர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இம்முயற்சி முன்னெடுக்கப்படும்,” என அவர் விளக்கினார்.
தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டுத் துறை குறித்து விளக்கமளித்த சாவ், பினாங்கு சிலிக்கான் டிசைன் @5KM+ சூழலமைப்பின் கீழ் செயல்படும் பினாங்கு சிப் டிசைன் அகாடமியில், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத் தொடக்கம் வரை பயிற்சி பெற்ற 675 பேரில் 85 விழுக்காட்டினருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
“இப்பயிற்சித் திட்டத்தில் புதிய பட்டதாரிகளும் தொழில்துறையில் ஏற்கெனவே பணியாற்றும் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். சிப் வடிவமைப்புத் துறையின் முக்கியப் பிரிவுகளான பௌதீக வடிவமைப்பு, வடிவமைப்புச் சரிபார்ப்பு, தனிப்பயன் சுற்றமைப்பு வடிவமைப்பு மற்றும் அனலாக் மின்சுற்று வடிவமைப்பு (Physical Design, Design Verification, Custom Layout மற்றும் Analog Circuit Design) ஆகியவற்றில் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.
“அதேவேளையில், தொழில்நுட்பத் திறமையாளர்களை உருவாக்கும் முயற்சிகள் பினாங்கு STEM வியூகத் திட்டம் 2026–2030 மூலம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
“இதற்காக, 2027ஆம் ஆண்டில் பினாங்கு டெக் டோம் அமைப்புக்கு ரிம850,000 மற்றும் பினாங்கு STEM அமைப்புக்கு ரிம700,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.