பினாங்கு தைப்பூசத்தில் தங்க இரத ஊர்வலம் சரித்திரம் படைத்தது – பேராசிரியர்

பவனி வரும் தங்க இரதம்

மலேசிய அளவில் பத்துமலை, கல்லுமலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணீர்மலை ஆலயம் திகழ்கிறது. இந்த ஆண்டு 231-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா சரித்திரப்பூர்வமாக அமைகிறது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. 231-வது முறையாக கொண்டாடப்படும் தைப்பூசத்தில் முதல் முறையாக தண்ணீர்மலை ஆலயத்திற்குச் சொந்தமான தங்க இரதம் ஊர்வலம் நடைபெற்றது

கடந்த காலங்களில் இந்த வேல் ஊர்வலம் சகடை எனும் சிறிய தேரில் மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இந்த ஆண்டு தொடங்கி தைப்பூச விழாவின் சின்னமாகத் திகழும் வேல்தங்க இரதத்தில் பிரமாண்டமாக குவின் ஸ்ரிட் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தண்ணீர்மலை ஶ்ரீ பால தண்டாயுதபாணி சன்னதியை வந்தடைந்தது. பொது மக்கள் அலையென திரண்டு தங்க இரத்திதில் பவனி வரும் முகப்பெருமான் சின்னமான வேலிடம்ஆசிர்வாதம் பெற்றனர். தங்க இரதம் தொடர்ந்து வெள்ளி இரதம் பவனி வந்ததது.

பால் குடம் ஏந்தி வரும் பக்தர்கள்

சாலையெங்கும் தேங்காய்கள் குழுமியிருக்க பக்தர்கள் கூட்டம் புடை சூழ தங்கம் மற்றும் வெள்ளி இரதங்கள் பவனி வந்தது. இந்தியர்கள் மட்டுமன்றி, சீனர்களும் இலட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து முருகனுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினர்.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ரிம200,000 மானியம் வழங்குவதாகக் கூறினார். மாநில அரசு தொடர்ந்து பல ஆண்டுகளாக மானியம் வழங்குவது பாராட்டக்குறியதாகும். மேலும் , மத்திய அரசாங்கம் பினாங்கு மாநிலத்தை கூட்டரசு அரசாங்கமாக மாற்றியமைக்கும் முயற்சியினை ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என தைப்பூச வரவேற்புரையில் தெரிவித்தார். ” நான் பினாங்கை நேசிக்கிறேன்எனும் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார்.

பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு நாடு முழுவதிலிருந்தும் பக்த கோடி பெருமக்கள் தங்கள் காணிக்கைகளைச் செலுத்த அலைகடல் போல் திரண்டனர். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சமூகப் பற்றாளர்களால் இவ்வாண்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அழகிய கலை வேலைபாடுகளையும் அலங்கரிப்புகளையும் கொண்ட பந்தல்களில் மக்களின் பசி தீர்க்க அன்னதானங்களும் தாகத்தைத் தீர்க்கக் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. தைப்பூச முதல்நாள் மாலை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர், கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் கீர் ஜொஹாரி ஆகியோர் தண்ணீர் பந்தல்களுக்கு வருகை புரிந்து மக்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தனர். பந்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வரவேற்றனர்.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் கீர் ஜொஹாரி, இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் ஆகியோர் தண்ணீர் பந்தல்களுக்கு வருகை புரிந்தனர். ‘நான் பினாங்கை நேசிக்கிறேன்’ எனும் வாசகத்தை அறிமுகப்படுத்தினர்

தைப்பூச முதல் நாள் தொடங்கி மக்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்கிவிட்டனர். பால் குடங்களையும் காவடிகளையும் ஏந்தியபடி மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர். முருகப்பெருமானுக்கு விரதமும் சைவமும் மேற்கொண்டு முருகனின் வாசகத்தை உரக்கக் கூறியபடி பக்தர்கள் 513 படிகளைக் கடந்து திருக்குமரனைத் தரிசிக்கச் சென்றனர். இவர்களுடன் சீனப் பெருமக்களும் இணைந்து மஞ்சள் ஆடையுடுத்தி பால் குடங்களையும் அலகு குத்தி காவடிகளையும் ஏந்தி சென்றது மெய்ச்சிலிர்க்க வைத்தது.