பினாங்கு நகராண்மைக் கழக பொது வீடமைப்புத் திட்ட வாடகையாளர் பெயர் மாற்ற விண்ணப்பம்

பினாங்கு நகராண்மைக் கழகத்தின் கீழ் செயல்படும் பொது வீடமைப்புத் திட்ட வீடுகளின் அதிகமான வாடகையாளர்கள் போலியான ஆவணங்களைக் கொண்டு தொடர்ந்து வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 240 வாடகை வீடுகளில் 133 வீடுகளின் வாடகையாளர்கள் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர் என எடுத்துரைத்தார் பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர் தான் உன் ஊய். மீதமுள்ள 107 யூனிட் வீடுகளின் வாடகையாளர்களின் விபரங்கள் தேசிய பதிவு இலாகாவின் மூலம் சேகரிக்கப்பட்டு  உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொது வீடமைப்புத் திட்டத்தின் வாயிலாக வாடகை வீடு பெற்ற தரப்பினர் இறந்த பிறகு அவ்வீட்டுக்குப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதாவது இறந்த ஆடவரின் துணைவியார் அல்லது பிள்ளைகள் அந்த வீட்டில் தொடர்ந்து வாடகைப் பணம் செலுத்தி வசிக்கலாம். ஆனால் இந்த பொது வீடமைப்பில் வசிப்பதற்கு ரிம2500-க்குக் குறைவான மாத சம்பளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர்கள்
செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர்கள்

 

தகுதியற்றவர் பொது வீடமைப்பில் வாடகைக்கு வசிக்க நேரிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாடங் கோத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. 2012-ஆம் ஆண்டின் தேசிய கணக்காய்வு அறிக்கையில் நகராண்மைக் கழக பொது வீடமைப்பில்  240 யூனிட் வீடுகள் இறந்தவர்களின் பெயரில் வாடகைக்கு விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பினாங்கு நகராணமைக் கழகத்தின் கீழ்  தாமான் பிரி ஸ்கூல், கம்போங் செலூட், ஜாலான் பாடாங் தெம்பாக், லெபோ தாம்ரேல், ஜாலான் சுங்கை(பிபிஆர்) ஆகிய 5 வீடமைப்புப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடமைப்பகுதியில் மொத்தம் 133 பேர் வீட்டு பெயர் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 68 பேருக்கு வீடு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 25 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டன, 10 பேரின் விண்ணப்பம் சட்ட ஆலோசனைப் பெறப்படும், அதேவேளையில் 5 பேரின் வீடுகள் மீண்டும் நகராண்மைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் நகராண்மைக் கழகத்தினர் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது வீடமைப்புத் திட்டத்தில் வீடுப் பெற்றவர்களின் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும் வாடகைச் செலுத்தாதவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநில பதிவு இலாகாவின் மூலம் பொது வீடமைப்புத் திட்ட வீட்டு உரிமையாளர்களின் பின்னணி அறியப்படும்.