பினாங்கு நீர் விநியோக வாரியம் மூல தண்ணீரை விரையம் செய்யவில்லை – டத்தோ ஜசானி

Admin
தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் டத்தோ ஜசானி மைடின்சா பினாங்கு மற்றும் கெடா மாநில நீரின் கொள்ளளவைக் காண்பிக்கிறார்.
தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் டத்தோ ஜசானி மைடின்சா பினாங்கு மற்றும் கெடா மாநில நீரின் கொள்ளளவைக் காண்பிக்கிறார்.

பினாங்கு நீர் விநியோக வாரியம் மூல தண்ணீரை சுங்கை மூடா ஆற்றிலோ அல்லது கடலிலோ விடவில்லை என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் டத்தோ ஜசானி மைடின்சா. பினாங்கு மாநிலம் சுங்கை மூடா ஆற்றில் நீரை திறந்து விட அதற்கான அணையை கொண்டிருக்கவில்லை என மேலும் தெரிவித்தார். அண்மையில் 100 விவசாயிகள் அம்பாங் ஜாஜாரில் மூல தண்ணீரை சுங்கை மூடா ஆற்றில் அல்லது கடலில் மாநிலம் அரசாங்கம் விடுவதாக தவறான தகவல் பெற்று போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து இவ்விளக்கம் அளிக்கப்பட்டது. சூப்பர் எல் நினோ பருவ காலத்தில் நீர்ப் பற்றாகுறையால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், மூல தண்ணீர் விரையமாகுவதைக் கண்டு விவசாயிகள் தங்களின் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். இருப்பினும் இவ்விவகாரத்தில் பினாங்கு மாநில அரசாங்கம் சம்பந்தப்படவிலை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அம்பாங் ஜாஜார் மூல நீர் இணைப்பு அம்பாங் ஜாஜார் சுங்கை மூடா நீர் திட்டத்தில் ( Skim Air Ampang Jajar Sungai Muda (SMWSB)) அடங்கியதாகும். விவசாயிகளின் இப்பிரச்சனையைக் களைய பினாங்கு நீர் விநியோக வாரியம் பெரிஸ் மற்றும் மூடா அணையிலிருந்து மூல நீர் திறந்து விடுவதை தடை செய்ய அதிகாரம் இல்லை எனவும் கூறினார். அதோடு, ரந்தாவ் பாஞ்சாங்கில் இருக்கும் அம்பாங் ஜாஜார் அணையை பொறியியல் ஆலோசனையின்றி மாற்றியமைக்கவும் இயலாது என்றும் அதோடு அம்பாங் ஜாஜார் நீர் கசிவுக்கு பினாங்கு நீர் விநியோக வாரியம் பொறுப்பல்ல என செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். இதனிடையே, பினாங்கு நீர் விநியோக வாரியம் பெரிஸ் மற்றும் மூடா அணைகளிலிருந்து திறந்து விடும் நீரின் அளவின் வேகத்தைக் குறைப்பதன் மூலம் நீர் விரையமாகுவதைக் குறைக்கலாம் என்றார்.
அதுமட்டுமின்றி, 9/5/2016-ஆம் நாள் புள்ளிவிபரப்படி பினாங்கு மாநில நீரின் அளவு ஆயர் ஈத்தாம் அணையில் 51.8% (51 நாட்கள்) மற்றும் தெலுக் பஹாங் அணையில் 53.4%(162 நாட்கள்) இருப்பில் இருக்கிறது. இருப்பினும் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பெரிஸ் அணை(26.4%) மற்றும் மூடா அணை (32.0%) நீரின் அளவு குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு அணைகளின் நீரின் கொள்ளளவு எத்தனை நாட்களுக்குப் பயன்படுத்த முடியும் என்பதனை உடனடியாக அறிவிக்குமாறு வினவினார் டத்தோ ஜசானி. எனெனில் பினாங்கு மாநில 80% நீர் பயன்பாடு மூடா அணையிலிருந்து பெறப்படுகிறது.