பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக அகப்பக்கம் அறிமுகம்

பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக (PWDC)  ஏற்பாட்டில்  அக்கழகத்தின் அகப்பக்கம் கடந்த 5.2.2013-ஆம் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. www.pwdc.org.my என்னும் இந்த அகப்பக்கத்தைப் பினாங்கு இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின்  ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு லிடியா ஒங் கொக் பூய் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்தக் கழகத்தின் பெருந்திட்டமான  ‘Budjet Responsive Gender’- யும் இந்த அகப்பக்கத்தின் மூலம் அல்லது அதன் நேரடி இணையத்தள முகவரியான www.grb.pwdc.org.my  மூலம் அணுகலாம். இக்கழகம் பெண்கள். குடும்ப, சமூக முன்னேற்றத்திற்காகக் கடந்த நவம்பர் 2011-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு ஜனவரி 2012-ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது. இந்தக் கழகம் பெண்களுக்கு ஆண்பெண் சமத்துவம் மற்றும் சமூகநிதி கிடைக்கப் பல கொள்கைகளை உருவாக்கி வழி வகுக்கிறது. மேலும் பெண்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் திறன், மேம்பாடு மற்றும் அதிகாரம் பெறுவதற்கு இக்கழகம் போராடுகின்றது. இக்கழகம் இலாபநோக்கமற்ற தனியார் நிறுவன முகவராகச் செயல்பட்டாலும் பினாங்கு மாநிலத்தின் முழு நிதியுதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டின் 55-ஆம் சுதந்திர முழக்கத்தில் முதல் இக்கழகம் பினாங்கு மாநிலத்தின் மகளிர் அமைச்சரவையாகச் சித்தரிக்கப்படுகிறது.

இக்கழகம் துவங்கி ஓராண்டு நிறைவடையாத நிலையிலும் பெண்களுக்கிடையே ஆண்பெண் சமத்துவம், நல்லாட்சி, தலைமைத்துவ உருவாக்கம் ஆகிய பொது விழிப்புணர்வை உருவாக்க பல நிகழச்சிகளை வெற்றிக்கரமாக நடத்தி வந்துள்ளது. பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டத்திலும் ஏறக்குறைய 500 பெண்கள் இதுபோன்ற நிகழ்வில் கலந்து பயனடைந்துள்ளனர். இக்கழகத்தின் பெருந்திட்டமான  ‘Budjet Responsive Gender’ அமல்படுத்துவதற்குப் பினாங்கு நகராண்மைக் கழகம், செபெராங் பிறை நகராண்மைக் கழகம், மற்றும் அம்பாங், ஜாலான் சுங்கை சமூக வீடமைப்புத் திட்டம் ஆகிய உள்ளாட்சி அதிகாரிகளின் கூட்டுறவால் இத்திட்டம் இனிதே தனது இரண்டாம் ஆண்டை வலம் வருகிறது. அன்றைய தினத்தில் இத்திட்டத்தின் அகப்பக்கமும் PWDC-யின் இணைப்பகுதியாகத் துவக்க விழாக் கண்டது. மேலும் பினாங்கு மாநிலம் மகளிர் மேம்பாட்டிற்கு வழங்கிய ரி.ம 2.3 லட்சம் ஒதுக்கிட்டில் ரி.ம 1.5 லட்சம் மகளிர் மேம்பாட்டுக் கழகத்திற்கு (PWDC)  மானியமாக வழங்கப்பட்டது. இக்கழக அகப்பக்கத்திற்கு அனைவரும் குறிப்பாக மகளிர் வலம் வந்து அதன் நடவடிக்கை மற்றும் நிகழ்ச்சிகளின் விபரங்களை அறிந்து பயன்பெறுமாறு இக்கழகத் தலைமை நிர்வாகி நோர்மசித்தா நோர்டின் வலியுறுத்தினார்.