பினாங்கு மாநிலத்தில் 7 இந்தியப் பிரதிநிதிகள்

Admin

நடந்து முடிந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பினாங்கில் இந்தியர்களைப் பிரநிதித்துப் போட்டியிட்ட அனைத்து இந்திய வேட்பாளர்களும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இம்முறை பினாங்கு மாநிலம் மொத்தம் ஏழு இந்தியத் தலைவர்களைப் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.

      மலேசிய நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஜனநாயக செயல்கட்சியின் தலைவருமான  மதிப்பிற்குரிய திரு கர்ப்பால் சிங் தேசிய முன்னணி வேட்பாளரான தே பெங் இயாமை 41,778 வாக்குகள் பெரும்பான்மையில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் பேராசிரியர் ப இராமசாமி போட்டியிட்டுக் கெராக்கான் தலைவரான தன் ஸ்ரீ கோ சூ கோன் அவர்களை வெற்றி பெற்ற பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் இம்முறை மூத்த அரசியல்வாதியான மறைந்த பி.பட்டுவின் புதல்வி குமாரி கஸ்தூரி பட்டு போட்டியிட்டார். இவர் நான்கு முனை போட்டியைச் சந்திக்க நேர்ந்த போதிலும் 25,962 வாக்குகள் பெரும்பான்மையில் ம.இ.காவைப் பிரநிதித்த தேசிய முன்னணியைச் சேர்ந்த திரு என். கோபாலகிருஷ்ணனை வீழ்த்தினார்.

மதிப்பிற்குரிய திரு கர்ப்பால் சிங்
மதிப்பிற்குரிய திரு கர்ப்பால் சிங்

இம்முறை, பேராசிரியர் ப இராமசாமி பிறை சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டார். அனைவரும் எதிர்பார்த்தபடி மொத்தம் 10,549 வாக்குகள் பெற்று தேசிய முன்னணியின் ம.இ.கா வேட்பாளர் எல் கிருஷ்ணனை 7959 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார். புக்கிட் குளுகோர் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியை வழக்கறிஞரான திரு நேதாஜி இராயர் தக்கவைத்துக் கொண்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் லோ ஜூ இயாப்பை 9,277 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அரசியல் புலியாகக் கருதப்படும் மாண்புமிகு கர்ப்பால் சிங் புதல்வரான திரு ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணியின் தோர் தியோங் ஜீயை 5,020 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுத் தன் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து, பாகான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இருக்கும் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திரு தனசேகரன் அவர்களும் நான்கு முனை போட்டியை எதிர்கொண்டார். எனினும், தேசிய முன்னணியைச் சேர்ந்த எம் கருப்பண்ணனை 5,161 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மக்கள் நீதிக் கட்சியைப் பிரதிநிதித்துப் பத்து உபான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திரு ஜெயபாலன் அவர்கள்  ஐமுனை போட்டியை எதிர்கொண்டார், இத்தொகுதியில் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இருப்பினும், மொத்தம் 17,017 வாக்குகள் பெற்று தேசிய முன்னணியின் கோ கேங் சினேயாவை 9,857 வாக்குகள் பெரும்பான்மையில் வீழ்த்தியுள்ளார்.

ஜனநாயக செயல் கட்சியைப் பிரதிநிதித்து ஆறு இந்தியர்களும் மக்கள் நீதிக் கட்சியைப் பிரநிதித்து ஓர் இந்தியரும் பினாங்கு மாநில பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள், பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆற்றல், பொறுப்பு, வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கையின் அடிப்படையில் தங்கள் கடமையை முறையே ஆற்றி இந்தியர்களுக்கு மட்டுமன்றி பினாங்கு மக்கள் அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

பினாங்கு மாநில இந்தியப் பிரதிநிதிகள். மதிப்பிற்குரிய கஸ்தூரி ராணி பட்டு, மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ, மதிப்பிற்குரிய பேராசிரியர் ப இராமசாமி, மதிப்பிற்குரிய திரு தனசேகரன், மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர், மதிப்பிற்குரிய திரு ஜெயபாலன். ( இடமிருந்து வலம்)
பினாங்கு மாநில இந்தியப் பிரதிநிதிகள். மதிப்பிற்குரிய கஸ்தூரி ராணி பட்டு, மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ, மதிப்பிற்குரிய பேராசிரியர் ப இராமசாமி, மதிப்பிற்குரிய திரு தனசேகரன், மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர், மதிப்பிற்குரிய திரு ஜெயபாலன். ( இடமிருந்து வலம்)