பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

Admin
படம் 1: பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட உகாண்டா நாட்டை சேர்ந்த சிறுவர்களை அரவணைத்தார் மாநில முதல்வர்.
படம் 1: பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட உகாண்டா நாட்டை சேர்ந்த சிறுவர்களை அரவணைத்தார் மாநில முதல்வர்.

பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பு ஆறாவது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநில அளவிலான கிறிஸ்மஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 14-இல் பினாங்கு சரித்திர புகழ்ப்பெற்ற ஃபொர்ட் கார்னிவல்ஸ் (Fort Cornwallis) தளத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில அரசும் மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து ஆறாம் முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்மஸ் விருந்துபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்குப்பெற்றனர். இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சிறப்பு வருகையளித்தார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள் நாட்டில் வளமையும் அமைதியும் நிலைநாட்ட அனைவரும் ஒன்றாக பாடுப்படுவோம் என சூளுரைத்தார். மாநில அளவிலானத் திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில பிரபல உணவு வகைகளான லக்சா பினாங், மீன் தலைக்கறி, சார் கோய் தியாவ், செண்டோல் மற்றும் பல இடம்பெற்றன. மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பின் தலைவர் திரு சாம் சுரேந்திரன் கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை அளித்த அனைவரையும் வருக வருக என வரவேற்றதுடன் இவ்விழா நடைபெறுவதற்கு உறுதுணையாகத் திகழ்ந்த மாநில மக்கள் கூட்டணி அரசிற்கும் மனமார்ந்த நன்றி மாலை சூட்டினார்.

படம் 2: பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.
படம் 2: பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

இந்நிகழ்விற்கு மாநில முதல்வர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்துவக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகிய முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.