பினாங்கு மாநில உபகாரச் சம்பள திட்டத்தின் மூலம் 11,000 மாணவர்கள் பயன் பெறுவர் – முதல்வர்

Admin

 

ஜார்ச்டவுன் – மாநில அரசின் கீழ் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் பினாங்கு மாநில உபகாரச் சம்பளம் (பி.கே.என்) திட்டத்தால் இம்மாநிலத்தில் மொத்தம் 11,000 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறுகையில், 2020 ஆம் ஆண்டில், ரிம999,840 நிதி ஒதுக்கீடு மூலம்
இம்மாநிலத்தின் 117 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 1,460 மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது, என்றார்.

“மேல் இடைநிலைப்பள்ளி (எஸ்.டி.பி.எம்) மாணவர்களுக்கு ரிம840 மற்றும் இடைநிலைப்பள்ளி (எஸ்.பி.எம்) மாணவர்கள் ரிம600-ஐ உபகாரச் சம்பளமாகப் பெறுவர்.

“எனவே, உபகாரச் சம்பளம் வழங்கினால் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பொருளாதார சுமையை குறைக்க முடியும் என்று மாநில அரசு நம்புகிறது.

“தற்போது மாணவர்கள் கோவிட்-19 தாக்கத்தினால்  பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் வகையில் இந்த உபகாரச் சம்பளம் வழங்குவது அவசியம்,” என்று கொம்தாரில் மாநில உபகாரச் சம்பளம் தொடர்பான காசோலை வழங்கும் நிகழ்வில் மாநில முதல்வர் சாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான சொங் எங், சூன் லிப் சீ மற்றும் இயோ சூன் இன்; மாநில தலைமைச் செயலாளர் டத்தோ அப்து இரசாக் ஜாபார், மாநில கல்வி இலாகா பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தரப்பினரும் வருகையளித்தனர்.

2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மாநில அரசு உபகாரச் சம்பளம் கட்டண விகிதத்தை இரண்டு முறை அதிகரித்துள்ளது என்று கொன் யாவ் கூறினார்.

“முதல் அதிகரிப்பு இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிம240 இருந்து ரிம480 ​​ஆகவும் (100% அதிகரிப்பு), மேல் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிம360 முதல் ரிம760 என கூடுதலாக வழங்கப்பட்டது.

“இரண்டாவது முறையாக ஒவ்வொரு பிரிவிற்கும் ரிம120 அதிகரிப்பை வழங்கியது. ஆகவே, தற்போது புதிய உபகாரச் சம்பளம் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிம600 ஆகவும், மேல் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிம840 ஆகவும் வழங்கப்படுகிறது,” என்று ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் விவரித்தார்.

இந்த ஆண்டு, கோவிட் -19 பரவலை தொடர்ந்து இந்நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த முடியாமல், இந்த உபகாரச் சம்பளத்திற்கான காசோலை வழங்கும் விழா சிறிய அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பள்ளிகளை பிரதிநிதித்து மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

உபகாரச் சம்பளப் பெறுநரின் விபரம் பின்வருமாறு:

•வடகிழக்கு மாவட்டம் – 35 பள்ளிகளைச் சேர்ந்த 242 மாணவர்கள் பெறுவர். (ரிம171,360 நிதி ஒதுக்கீடு)

•தென்மேற்கு மாவட்டம் – 13 பள்ளிகளைச் சேர்ந்த 189 மாணவர்கள் பெறுவர். (ரிம132,840 நிதி ஒதுக்கீடு)

• வட செபராங் பிறை மாவட்டம் – 25 பள்ளிகளைச் சேர்ந்த 361 மாணவர்கள் பெறுவர்.
(ரிம 241,320 நிதி ஒதுக்கீடு)

•மத்திய செபராங் பிறை மாவட்டம் – 29 பள்ளிகளைச் சேர்ந்த 411 மாணவர்கள் பெறுவர். (ரிம278,280 நிதி ஒதுக்கீடு)

•தென் செபராங் பிறை மாவட்டம் – 15 பள்ளிகளைச் சேர்ந்த 257 மாணவர்கள் பெறுவர்
(ரிம 176,040 நிதி ஒதுக்கீடு)