பினாங்கு மாநில சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் உறவை வலுப்படுத்தும்- சொங் எங்

பினாங்கு மாநில அரசும் மாநில இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழுவும் இணைந்து சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் ஆட்சிக் குழு உறுப்பினரும், பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் . இத்திட்டத்தின் வழி சமூகம், விளையாட்டு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நடைபெறவுள்ளன.
தற்போதைய நவீன காலத்தில் குடும்ப உறுப்பினர்கள், அண்டை அயலாளர் என அனைவரிடம் சுமூகமான நட்புறவு, நல்லிணக்கம் ஆகியவை குறைந்து கொண்டே வருகிறது. எனவே, இந்த சூழ்நிலையை மாற்றும் முயற்சியில் மாநில இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவு சமூக நிகழ்வு திட்டங்களை அனைத்து தொகுதிகளில் நடத்தவுள்ளன. இதன்வழி, குடும்ப உறவுகளிடையே நல்லிணக்கம் மேம்படுத்த உறுதுணையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்.

பினாங்கில் சமூக மற்றும் விளையாட்டு   நிகழ்வு திட்ட பிரச்சூரத்துடன் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.
பினாங்கில் சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வு திட்ட பிரச்சூரத்துடன் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.

அதோடு, நம் நாட்டில் ஆண்டுதோறும் விவாகரத்து கோரும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இம்மாதிரியான சமூக நிகழ்வுகளின் வழி உறவுகள் வலுவடைவதோடு குடும்பத்தில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் மேலோங்கும் என்பதில் ஐயமில்லை என மேலும் அவர் விவரித்தார். இந்த சமூக நிகழ்வுகளுக்கு ரிம5,000 வரை மானியம் வழங்குவதாகவும் மேலும் ஒவ்வொரு சமூக மற்றும் முன்னேற்றக் கழகங்களும் திட்டங்களின் விபரங்களைச் சமர்ப்பித்து மானியத்தை பெற்றுக் கொள்ளுமாறு மேலும் கூறினார்.
சமூக விளையாட்டு நிகழ்வில் காற்பது விளையாட்டு, மிதிவண்டி ஓட்டம், மலை ஏறுதல், பூப்பந்து விளையாட்டு மற்றும் இன்னும் அதிகமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.