பினாங்கு மாநில நான்காம் தவணைக்கான முதலாம் சட்டமன்ற கூட்டம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

Admin
மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் அவர்களுடன் இணைந்து மாநில அரசியல் தலைவர்கள் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் அவர்களுடன் இணைந்து மாநில அரசியல் தலைவர்கள் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த மே மாதம் 10-ஆம் திகதி பினாங்கு மாநில நான்காம் தவணைக்கான முதலாம் சட்டமன்ற கூட்டம் அதிகாரப்பூர்வமாக இனிதே தொடங்கியது. மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்பாஸ் அவர்கள் தனது துணைவியாருடன் சிறப்பு வருகை மேற்கொண்டார். தொடக்கவிழாவில் இன்ஸ்பெக்டர் முகமது நோர் அப்பென்டி தலைமையில் கெடா மாநில காவல் படை இசைக்குழு மற்றும் டி.எஸ்.பி முகமது பாய்சூல் தலைமையில் 3 யூனிட் கூட்டரசு படை அணிவகுப்பு பினாங்கு மாநில சட்டமன்ற அருகில் நடைபெற்றது. மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் அவர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ஒன்றிணைந்து அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.
மாநில சட்டமன்றத்தின் செயலாளரான மகேஸ்வரி மலையாண்டி, கூட்டத்தை முறையாக வழி நடத்த மாநில முதல்வர் லிம் குவான் எங் முன்மொழிந்ததைத் தொடர்ந்து சட்டமன்றம் சபாநாயகர் வழிகாட்டலுடன் தொடக்க விழாக்கண்டது. மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றினார். 2008-ஆம் ஆண்டு தொடங்கி மாநில அரசு கூடுதல் வருமானத்தை ஈட்டுவதோடு கடந்த 8 ஆண்டுகளாக மாநில நிதி அறிக்கையும் பிற மாநிலங்களைக் காட்டிலும் மிக விரைவாக சமர்ப்பித்துவிடும் என்றார்.
கடந்த ஆண்டு பொருளாதாரத் துறையில் ரிம6.7 பில்லியன் முதலீடுச் செய்து அதாவது 107 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 2014-ஆம் ஆண்டு காட்டிலும் 5% கூடுதல் முதலீடு பெற்றுள்ளது. ‘சூப்பர் அல்-நீனோ’ பருவ மாற்றத்தால் நீர் பற்றாக்குறை பிரச்சனை எழுந்த போதிலும் பினாங்கு மாநிலம் ‘நீர் பங்கீட்டு முறையை’ அமல்படுத்தவில்லை எனப் பாராட்டினார். இதனால் பொது மக்கள் மட்டுமின்றி வியாபாரத்துறை மற்றும் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படவில்லை என்றார்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற நோக்கத்தில் மாநில அரசு இதுவரை 8.092 யூனிட் மலிவு விலை வீடுகளும் 8,107 யூனிட் நடுத்தர விலை வீடுகளும் கட்டியுள்ளன எனக் குறிப்பிட்டார். மக்களின் சமூகநல் பாதுகாக்கும் வகையில் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் பல தங்கத் திட்டங்கள் மேற்கொன்டு வருகின்றன. இத்திட்டங்களில் பிறந்த குழந்தை முதல் மூத்தக் குடிமக்கள் ஆகியோரின் நலன் பேணப்படுகிறது.
மாநில ஆளுநரின் வரவேற்பு உரையுடன் சட்டமன்ற கூட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது.