பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டியது

படம் 1: வெள்ள நிவாரண உதவித்தொகைக்கானக் காசோலை  வழங்கினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
படம் 1: வெள்ள நிவாரண உதவித்தொகைக்கானக் காசோலை வழங்கினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

2014ஆம் ஆண்டு இறுதியில் கிழக்குக்கரையோர மாநிலங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பேரிடரால் பல்லாயிரக்கணக்கானப் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் குறிப்பாக கிளந்தான் மாநிலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ராட்சத வெள்ளத்தினால் கிளந்தான் மாநில குவா மூசாங், குவால கிராய், தானா மேரா ஆகியப் பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எண்ணிலடங்கா பொது மக்கள் தங்கள் வீடுகளைப் பறிக்கொடுத்து துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கிளந்தான் வாழ் பொது மக்கள் வீடுகள் மட்டுமின்றி தங்களின் உடமைகள், சொத்துகள், வியாபார ஸ்தாபனங்கள் இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர். எனவே, இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூட்டரசு அரசாங்கம் மட்டுமின்றி மக்கள் கூட்டணி அரசாங்கமும் உதவிக்கரம் நீட்டி வருவது சாலச்சிறந்ததாகும்.
ஆதரவற்ற நிலையில் இருக்கும் பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு ரிம1.5 மில்லியன் வழங்கியது சாலச்சிறந்ததாகும். மேலும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகக் கிளந்தான் மாநில பொது மக்களுக்கு உதவிப்புரிய தனது பயணத்தைத் தொடர்ந்தது. அவ்வகையில் கடந்த 8/1/2015-ஆம் நாள் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய வொங் ஹொன் வாய் தலைமையில் “கிழக்கு மாநில வெள்ள நிவாரணப் பணிக்குழு” கிளந்தான் மாநிலத்தை நோக்கிப் பயணித்தது. இந்தப் பயணத்தில் 12 வாகனங்கள் துணையுடன் 2500 பெட்டி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. கிளந்தான் மக்களுக்கு அடிப்படைப் பொருட்களை வழங்குவதற்கு பினாங்கு மாநில அரசு உட்பட பினாங்கு மக்கள், அரசு இலாக்கா, அரசு சாரா இயக்கங்கள், அரசு அமைப்புகள் என்று அனைவரும் உதவிப்புரிந்தனர். இதில் உணவுப்பொருட்கள், மருந்து, நீர் போத்தல்கள், தற்காலிக சமயல் அடுப்புகள் மற்றும் பல இடம்பெற்றன.
இந்த வெள்ள நிவாரணப் பணிக்குழுவில் ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ அப்துல் மாலிக் காசிம், லாவ் ஹெங் கியாங், ஆட்சிக்குழு உறுப்பினர்களான திரு தனசேகரன், தே லாய் ஹெங், நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ராம்கர்பால் சிங், ங் வே அய்க் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 48 பேர் கலந்து கொண்ட இந்தப் பணிக்குழு மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கிளாந்தான் மாநில பல்வேறு பகுதிகளுக்குச் சென்று உதவிக்கரம் நீட்டினர். முதல் பணிக்குழுவினர் குவால கிராய் பகுதிக்குச் சென்று பொது மக்களுக்குத் தேவையானப் பொருட்களை வழங்கினர். இக்குழுவினருடன் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியதோடு உதவித்தொகைக்கானக் காசோலையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீர் இல்லாமல் துன்புறும் கிளந்தான் மக்களுக்கு பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் சார்பாக 2 லாரியில் நீர் வழங்கப்பட்டன.

படம் 2: கம்போங் பாசிர் தும்போ பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்கர்பால்.
படம் 2: கம்போங் பாசிர் தும்போ பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்கர்பால்.

இரண்டாம் மற்றும் மூன்றாவது பணிக்குழுவினர் கிளாந்தான் மாநில குவாங் மூசாங்கில் அமைந்துள்ள கம்போங் பாசிர் தும்போ மற்றும் சுங்கை நிங்கிரி எனும் இடத்திற்குச் சென்று பொருட்கள் கொடுத்தனர். கம்போங் பாசிர் தும்போவில் உள்ள 80 வீடுகளில் ஏறக்குறைய 42 வீடுகள் முற்றுலும் அழிந்துள்ளன. மேலும் சுங்கை நெங்கிரி கடக்கும் பிரதாணப் பாலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. கிழக்கு மாநில வெள்ள நிவாரணப் பணிக்குழுவின் பயணத்தைத் தொடர்ந்து கிளாந்தான் மாநிலம் சுனாமி ஏற்பட்டது போல காட்சியளிப்பதாக உணரப்படுகிறது. அம்மாநிலத்தின் பிரதாண சாலையில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பேரிடரால் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் இப்பணிக்குழுவினர் மிகுந்த சவாலுக்கிடையே கிளாந்தான் மாநிலத்திற்குச் சென்று உதவிப்புரிந்தனர் என்பது பாராட்டக்குறியது.

படம் 3: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் பாசிர் தும்போ தேசியப்பள்ளி.
படம் 3: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் பாசிர் தும்போ தேசியப்பள்ளி.