பினாங்கு மூத்த குடிமக்களின் சேவையைப் போற்றும் திட்டம்.

Admin

மூத்த குடிமக்களைப் போற்றும் திட்டத்தின் வழி பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் கொடுத்த உறுதிமொழியினை மறுபடியும் காப்பாற்றியுள்ளது. அதன்படி 1 ஜனவரி 1953 –ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த, 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட்டினை வழங்கி வருகிறது. இப்பணம், பினாங்கு மாநில வளர்ச்சிக்காக இத்தனைக் காலமாக உழைத்த மூத்த குடிகளின் சேவையினைப் போற்றும் வண்ணம் வழங்கப்படுகிறது.

அதே வேளை, மக்கள் கூட்டணி அரசின் மற்றுமொரு அரிய திட்டம்தான் ‘AES- Agenda Ekonomi Saksama’ எனப்படும் சமத்துவப் பொருளாதாரத் திட்டம். பினாங்கு மாநிலம் இத்திட்டத்தின்வழி      2013-இல் பினாங்கு வாழ் மக்களின் வறுமையை ஒழித்து மலேசியாவில் இதுவரை எந்த மாநிலமும் சாதிக்காததைச் சாதிக்கவிருக்கிறது. இவ்வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டின் குறைந்தபட்ச வருமானமான ரிம 770க்குக் கீழ் வருமானம் பெறும் குடும்பத்திற்கு மாநில அரசு ஒவ்வொரு மாதமும் தொகையதிகரிப்புச் செய்யும்.

இன்று வரையில் சுமார் 152,787 மூத்த குடிகள் இத்திட்டத்தில் பதிந்துள்ளனர். இத்திட்டத்தின் வழி மரணமுற்ற மூத்தக் குடிகளின் வாரிசுகளுக்கு இறுதிச் சடங்கினை ஏற்று நடத்த 1000 ரிங்கிட் மரண சகாய நிதியும் வழங்கப்படுகிறது.  2010- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வழி சுமார் ரிம 46.5 மில்லியன் மூத்த குடிகளுக்கும், மரணமுற்ற மூத்த குடிகளின் வாரிசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இது மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் ஆற்றல் பொறுப்பு, மற்றும் வெளிப்படையான  நிர்வாகத்தின் வழி சிக்கனப்படுத்தப்பட்டப் பணத்தால் வழங்கப்படுகிறது. 8 மார்ச் 2008-இல் ரிம 630 மில்லியனாக இருந்த கடன் தொகையை 95% குறைத்து, அதனை 31 டிசம்பர் 2011-இல் ரிம 30 மில்லியனாக மாற்றியதன் மூலம் தூய்மையான நிர்வாகத்தைக் கொண்டது என மாநில அரசாங்கம் மெய்ப்பித்துள்ளது. ஊழலுக்கு எதிரான நிர்வாகத்தைக் கொண்ட  மலேசியாவின் முதன்மை மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தைச் சர்வதேச வெளிப்பாடு அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டின் தலைமை கணக்காய்வாளரால் சிறந்த நிதி நிர்வாகத் திறமையைக் கொண்ட மாநிலம் என்ற பாராட்டினைத் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகப் பெற்றுள்ளது.

நீங்கள் வழங்கிய இந்த அதிகாரத்தின் மூலம் பெற்ற வெற்றிகளை மக்கள் கூட்டணி அரசாங்கம் பின்வரும் சாதனைகளின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

  1. பதியப்பட்ட தங்கக் குடிமகன், தனித்து வாழும் தாய் அல்லது ஊடல் ஊனமுற்றோர் இறந்த பிறகு, மரண சகாய நிதியான    ரிம 1000 அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது.
  2. தங்கக் குழந்தையின் திட்டத்தின் மூலம் 01 ஜனவரி 2011-லிருந்து பினாங்கில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தலா ரிம 200 வழங்கப்படுகிறது.
  3. தங்க மாணவர் திட்டத்தின் வழி முதலாம் மற்றும் நான்காம் ஆண்டு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும், முதலாம் மற்றும் நான்காம் படிவ இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் தலா  ரிம 100 (தனியார் மற்றும் சமயப் பள்ளி மாணவர்கள் உட்பட) வழங்கப்படுகிறது.

பினாங்கு மக்கள் கூட்டணி அரசு  இதுபோன்ற நிதியுதவியை ஒவ்வொரு மாதமும் ஒவ்வோர் ஆண்டும் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். வெறும் ஓட்டுக்காக வலைவிரித்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வழங்குவதில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். இதற்கு முன்பு நிரம்பி வழிந்த ஊழலினால் உங்களால் இதுபோன்ற பயனை அனுபவிக்க இயலவில்லை. ஆனால் ஒரு தூய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததன் பலனாக ஊழல் எதிர்ப்பு மூலம் சிக்கனப்படுத்தப்பட்ட பணத்தினையே நாங்கள் உங்களுக்கு நிதியுதவியாக வழங்குகிறோம்.

 

பினாங்கு மாநிலம் தொடர்ந்து பசுமையாகவும் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் விளங்கட்டும்.

 

இறைவனின் திருவருளோடு வாழ்க!

 

உங்கள் உண்மையுள்ள ,

லிம் குவான் எங்

பினாங்கு முதல்வர்