பினாங்கு லிட்டல் இந்தியாவில் வியாபாரக் கலை விழா

Admin

ஆகஸ்ட் 21- லிட்டல் இந்தியா வர்த்தகர்களும் பினாங்கு இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனமும் இணைந்து நடத்திய பினாங்கு லிட்டல் இந்தியா வியாபாரக் கலை விழாவை மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். எதிர்வரும் 55-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விழா முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் குறித்து முதல்வர் தனது உள்ளக்களிப்பை வெளிபடுத்தினார். இந்நிகழ்வில் முதல்வர் உட்பட சட்டமன்ற உறுப்பினர் சௌ கொன் யௌ, பினாங்கு வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத் தலைவர் திரு வசந்தராஜன், இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவர் மற்றும் அவர்தம் செயற்குழு உறுப்பினர்கள், பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர்கள், சம்மேளன உறுப்பினர்கள், லிட்டல் இந்தியா வணிகர்கள், ஊடகத்துறையினர், வாடிக்கையாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.

பினாங்கு மாநில அரசின் ஆதரவோடு லிட்டல் இந்தியா வணிகர்கள் நடத்தும் இந்த பெருவிழா ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் நோன்பு பெருநாட்கள் காலங்களில் லிட்டல் இந்தியாவில் பெருநாள் கலை கட்டும். இம்மாதம் சுதந்திர தினக் கொண்டாட்டக் கலையும் சேர்ந்து காணப்படுகிறது. லிட்டல் இந்தியாவில் ஆங்காங்கே மலேசியக் கொடிகள் பரக்கவிடப்பட்டிருப்பது பினாங்கு வாழ் இந்தியர்களின் நாட்டுப் பற்றை வெளிபடுத்தும் வண்ணம் அமைந்துள்ளது என முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  மேலும், உலக பாரம்பரியமிக்க நகரமான (UNESCO) பினாங்கு மாநிலம் லிட்டில் இந்தியாவில் பிரதிபலிக்கப்பபடும் இந்திய பாரம்பரியத்தைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறினார்.  இங்கு கடைகளுக்கு முன்பு போடப்பட்டிருக்கும் கூடாரங்கள், வண்ணமயமான அலகாரங்கள், வண்ண விளக்குகள் யாவும் லிட்டல் இந்தியாவுக்குப் புது பொலிவைத் தந்து மெருகூட்டியுள்ளது என்றார்.

பினாங்கு வாழ் இந்தியர்களின் தரமான வாழ்க்கையையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் முதல்வர் அவர்கள் பல  அரிய திட்டங்களைத் தீட்டி வருவதோடு மக்களுக்குச் சிறந்த சேவைகளையும் புரிந்து வருகிறார் என்பது வெள்ளிடை மலையாகும். மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்(ச்) செயல்படும் மாநில அரசு பினாங்கு மாநிலத் தமிழ் பள்ளிகளுக்காக ஆண்டுதோறும் ரி.ம 1.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது அவற்றில் ஒன்றாகும். ஒரு காலத்தில் பாதாளத்தில் புதைந்து கிடந்த அஸாத் தமிழ்ப் பள்ளி இன்று இரண்டு மாடி கட்டடத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அங்கு நம் மாணவர்கள் வசதியான சூழ்நிலையில் கல்வி கற்கிறார்கள் என்பது மனதிற்கு பெருமகிழ்வை அளிக்கின்றது எனலாம். அத்தோடு, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ஆண்டுதோறும் ரி.ம 1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த  10 ஆண்டுகளுக்கு முன் முன்மொழியப்பட்ட பினாங்கு மாநில தண்ணீர் மலை கோவிலின் மேம்பாட்டுத் திட்டம், தம்  புதிய ஆட்சியின் கீழ் நிறைவடைந்திருப்பது பெரும் மன நிறைவையும் பெருமையையும் அளிப்பதாக முதல்வர் லிம் குவான் எங் நிகழ்ச்சியின் சிறப்புரையில் கூறினார். மக்களுக்குத் தேவையான தரமான பொருட்களை மலிவான விலையில் பெற்றுக் கொள்ள இவ்வாறான வியாபார விழாக்கள் சிறந்ததொரு களமாக அமையும். ஆகவே, லிட்டல் இந்தியா வணிகர்கள் இவ்விழாவை இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு முதல்வர் தம்முரையை முடித்துக் கொண்டார்.