பினாங்கு வரவு செலவு திட்டத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிர்வாக செலவுக்கு ரிம1.0476 பில்லியன் நிதியைத் தாக்கல் செய்துள்ளது.

பினாங்கு வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்த மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், சட்டமன்ற வழங்கல் மசோதா 2024 மூலம் அடுத்த ஆண்டு 20 துறைகளுக்கு ரிம1,011,170,179 நிதியை ஒதுக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அறிவித்தார்.

“கூடுதலாக, ரிம36,434,356 நிதி மூன்று துறைகளுக்கு விதிக்கப்பட்ட செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. இது மாநில ஒருங்கிணைந்த நிதியில் இருந்து வசூலிக்கப்படுகிறது.

“எனவே, 2024க்கான மொத்த திட்டமிடப்பட்ட நிர்வாகச் செலவு ரிம1,047,604,535 ஆகும்.

“2024 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட நிர்வாக செலவு, 2023 உடன் ஒப்பிடும்போது ரிம58.13 மில்லியன் அதிகரிப்பைச் சித்தரிக்கின்றது.

“மாநில அரசு மக்கள் சார்ந்த திட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கும், மாநில வளர்ச்சித் திட்டங்களின் தேவைகளைச் சமநிலைப்படுத்தும் பொருட்டு நிதி நிர்வாகத்தில் உயர்வுக் காணப்படுகிறது.

“2024 நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், ஊதியங்களுக்கு ரிம205.90 மில்லியன், சேவைகள் மற்றும் விநியோகங்களுக்காக ரிம214.37 மில்லியன், சொத்துக் கையகப்படுத்துதலுக்காக ரிம3.38 மில்லியன், மானியங்கள் மற்றும் நிலையான கொடுப்பனவுகளுக்கு ரிம622.59 மில்லியன் மற்றும் பிற செலவினங்களுக்கு ரிம1.36 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

“மானியம் மற்றும் நிலையான ஊக்கத்தொகை வழங்கல் வரவு செலவு திட்டத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. இது மொத்த நிர்வாக செலவினத்தில் 59.43% ஆகும். இதில் மாநில மேம்பாட்டு நிதிக்கு ரிம240 மில்லியன், iSejahtera உள்ளிட்ட மாநில சமூகநலத் திட்டங்களுக்கு ரிம110.45 மில்லியன் மற்றும் துணை நிறுவனங்கள், மாநில சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான மானியங்களுக்காக ரிம98.50 மில்லியன் போன்ற பங்களிப்புகளுக்கும் உள்ளடங்கும்,” என்று சாவ் இன்று மாநில வரவு செலவு திட்டம் 2024-ஐ தாக்கல் செய்தபோது விவரித்தார்.

விவேகத்துடன் செலவழிப்பதில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, செயல்பாட்டு செலவினங்களின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது, என்று அவர் விளக்கினார்.

“இந்த ஆண்டு நவம்பர்,15 வரையிலான உண்மையான நிர்வாகச் செலவினம் ரிம709.20 மில்லியன் ஆகும். மேலும் 2023 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட ரிம989.47 மில்லியனுடன் ஒப்பிடுகையில் செலவினம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று சாவ் எடுத்துரைத்தார்.

பினாங்கு வரவு செலவு திட்டம் 2024 குறித்து பேசுகையில், மாநில அரசு 2024-இல் ரிம533,077,255 வருவாயை பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இது 2023 இல் மதிப்பிடப்பட்ட ரிம522.35 மில்லியனுடன் ஒப்பிடும்போது ரிம10.73 மில்லியன் அல்லது 2.05% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

“2024 வருவாய் அமைப்பில் ரிம167.91 மில்லியன் (31.5%) வரி வருவாய், ரிம277.92 மில்லியன் வரி அல்லாத வருவாய் (52.13%), மற்றும் ரிம87.24 மில்லியன் (16.37%) வருவாய் அல்லாத வரவுகள் ஆகியவை உள்ளடங்கும்.

“அடுத்தாண்டு வருமானத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கு, கூடுதலான வரி மதிப்பீடுகள், குறிப்பாக நேரடி வரிகள் மற்றும் வரி அல்லாத வருவாய் அடங்கும்.

“ரிம1.0476 பில்லியனின் நிர்வாகச் செலவினத்திற்கு எதிராக ரிம533.08 மில்லியன் கணக்கிடப்பட்ட வருவாயைக் கருத்தில் கொண்டு, வரவு செலவு திட்டம் 2024-இல் ரிம514.53 மில்லியன் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2023 பற்றாக்குறையிலிருந்து ரிம47.41 மில்லியன் அதிகமாகும், என்று சாவ் கூறினார்.

மாநில வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் பினாங்கின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, பற்றாக்குறை வரவு செலவு திட்டம் அவசியம் என்று அவர் விளக்கமளித்தார்.

“பினாங்கு வரவு செலவு திட்டம் 2024-இல் ஏற்படும் ரிம514.53 மில்லியன் பற்றாக்குறையை, இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி
ஒருங்கிணைந்த அறக்கட்டளை கணக்கில் இருக்கும் ரிம1.67 பில்லியன் தொகை மற்றும் மாநில அரசின் இருப்புகளிலிருந்து அதற்கு நிதியளிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட மேம்பாட்டு வரவு செலவு திட்டம், ஒன்பது மாநில துறைகளுக்கு ரிம374,718,160 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023 உடன் ஒப்பிடும்போது ரிம47.96 மில்லியன் அல்லது 14.68% அதிகரித்துள்ளது.

“மேம்பாட்டுத் திட்டத்திற்கான அதிக ஒதுக்கீடு Vot P01 இன் கீழ், மொத்தம் ரிம197.76 மில்லியன் ஆகும். இதில் கெர்னி பே (ரிம80 மில்லியன்), விளையாட்டு மற்றும் திறந்தவெளி மேம்பாடு (ரிம15.3 மில்லியன்), பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டம் (PTMP) (ரிம21.23), வீட்டு வசதி மேம்பாடு (ரிம6 மில்லியன்), சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் (ரிம15.05 மில்லியன்) மற்றும் பிற மேம்பாட்டுத் திட்டங்களை
உள்ளடக்கியுள்ளது.

“கூடுதலாக 2024 ஆம் ஆண்டில் Vot P01 திட்டத்தின் கீழ், GBS By The Sea திட்டத்தின் செலவில் ஒரு பகுதியை ஈடுகட்ட, பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திற்கு (PDC) மாநில அரசாங்கம் ரிம15 மில்லியன் கடன் ஒதுக்கீடு வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.

“நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், பினாங்கு அரசாங்கம் சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் பினாங்கு2030 இலக்கின் சீரமைப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களையும்
வடிவமைத்து செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

பினாங்கு அரசாங்கம் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஏழு முன்னுரிமைப் பகுதிகளில் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை வலுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று சாவ் வலியுறுத்தினார்.

“வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் மேம்பாடு, போக்குவரத்து வலையமைப்பில் இணைப்பு மேம்பாடு, போக்குவரத்து மேம்பாடு, பருவநிலை மாற்றப் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான உத்திகள், நீர் விநியோக மேம்பாடு மற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான விரிவான சமூக மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவை இதில் அடங்கும்,” சாவ் மேலும் விவரித்தார்.

மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் (JHEAIPP) மேம்பாட்டிற்கு, மாநில அரசாங்கம் மொத்தம் ரிம21.48 மில்லியனை ஒதுக்கியுள்ளது, என்றார்.

“தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, வசதிக் குறைந்த குடும்பங்களின் வீடுகளுக்கான புதிய கட்டுமானம் மற்றும் பழுதுபார்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை அரசு மதிப்பாய்வு செய்துள்ளது. இதில் புதிய வீடுகள் கட்டுவதற்கான அதிகபட்ச மதிப்பு ரிம56,000 இலிருந்து ரிம75,000 உயர்த்தப்பட்டு 2023 முதல் அமலுக்கு வருகிறது.

“இந்த ஆண்டு, மாநில அரசாங்கம் ரிம3.1 மில்லியனை இந்த திட்டத்தின் நிலைத்தன்மையைத் தொடர ஒதுக்கீடு செய்துள்ளது, மொத்தம் 42 பெறுநர்கள் இதில் பயனடைவர். இன்றுவரை ரிம2.23 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

பினாங்கு வரவு செலவு திட்டம் 2024ல் பின்வருவன அடங்கும்:

i) மனிதநேய பேரிடர் மையம் = ரிம2.5 மில்லியன்

ii) ஜார்ச்டவுன் மத்திய போக்குவரத்து (CAT) பேருந்து நிதியம் = ரிம1.6 மில்லியன்

iii) CAT பிரிட்ஜ் மற்றும் BEST Komtar போன்ற போக்குவரத்து மானியம் = ரிம15 மில்லியன்

iv) வாடகைக்கார் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து நடத்துநருக்கான ஊக்கத்தொகை = ரிம1.2 மில்லியன்

v) மாநில விவசாயத்தை மேம்படுத்த பினாங்கு விவசாயத் துறைக்கான ஒதுக்கீடு = ரிம6.93 மில்லியன்

vi) கால்நடை மற்றும் உணவுத் தொழிலை வலுப்படுத்த பினாங்கு கால்நடை சேவை துறைக்கான ஒதுக்கீடு = ரிம4.6 மில்லியன்