பினாங்கைத் தாக்கிய கோரப்புயல் காற்றுக்கு மூவர் பலி

Admin

கடந்த ஜூன் 13ஆம் திகதி வியாழனன்று பினாங்கு மாநிலத்தைக் கடுமையான புயல் காற்றுத் தாக்கியது. இசம்பவம், இரண்டாம் பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரக் காலத்திற்குப் பிறகு நடந்துள்ளது. இக்கோரப்புயலால் ஜாலான் மெக்கலிஸ்டரில் அமைந்துள்ள அம்னோ கட்டடத்தின் இடிதாங்கி சரிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் சேதமுற்றன. அதுமட்டுமன்றி, சாலையோரம் நடந்து சென்ற வழிப்போக்கர்களும் காயமுற்றனர்.

இச்சம்பவம், மாலை 7.10 மணியளவில் நிகழ்ந்தபோது இடிந்து விழுந்த பாகங்களின் ஒருபகுதி எரிவாயு கலன்களை ஏற்றிச் சென்ற பார உந்தின் மீது விழுந்ததில் அவ்வுந்து அவ்விடத்திலேயே நொறுங்கியது. அப்பார உந்தின் ஓட்டுநர் சலீம் அப்துல்லா (37) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வேளையில் அவரின் உதவியாளர் வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டார். மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார உந்தின் உள்ளே சிக்கிக் கொண்ட அந்த ஆடவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான 48 வயது நிரம்பிய சாகிர் ஹூசேன் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இப்பேரிடரால் தன் உயிர் நண்பனை இழந்த சலீம் துக்கத்தில் ஆழ்ந்தார். இவர்கள் தமிழ்நாட்டுத் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆயர் ஈத்தாம் அணைக்கட்டுப் பகுதி அருகில் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த சீன ஆடவர், திடீரென கனத்த மழையுடன் கடுமையான புயல் காற்று வீசியதால் பாதுகாப்புக்காக மரத்தடியில் ஒதுங்கியபோது மரம் அவர்மீது சாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் பினாங்கு குடிநீர் விநியோக வாரியத்தின் பணியாளரான வோங் சீ சோ (வயது 33) என்று அடையாளம் காணப்பட்டது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான வோங்கின் குடும்பத்திற்கு மாநில அரசு 3000 ரிங்கிட்டும் பினாங்கு குடிநீர் விநியோக வாரியத்தின் பணியாளர் என்பதால் அதன் சார்பாக 10,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி காப்புறுதி தொகையைப் பெற்றுத் தருவதற்கும் அவ்வாரியம் உதவி புரியும் என அதன் தலைவர் ஜாசெனி மைடின் சா கூறினார்.

 

இதற்கிடையில், பினாங்கைத் தாக்கிய இக்கடும் காற்றால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தும் கிளைகள் முறிந்தும் பெரும் சேதத்தை விளைவித்தன. இக்கடுமையான புயல் காற்றால் மக்கள் பீதியடைந்து தத்தம் தங்கள் வீட்டினில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாநிலத்தின் பெருநிலத்தில் இருக்கும் பல பகுதிகளிலும் உணரப்பட்ட இந்தச் சூரைக் காற்று எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தியது. மரங்கள் மட்டுமன்றி வீட்டு கூரைகள் காற்றின் வேகம் தாங்காமல் பறந்து சென்று விழுந்தன. மேலும் பிறையில் உள்ள மகா மாரியம்மன் ஆலயக் கூரைகளும் பிறைத் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கூரைகளும் இதனால் பெரும் பாதிப்புற்றன. இந்தப் பலத்த புயல் காற்றினால் மரங்கள் விழுந்ததில், பினாங்கு மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போக்குவரத்து நிலைகுத்தியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உதவும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார். அந்தப் புயல் காற்றிற்குப் பிறகு அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்வது மாநில அரசின் முன்னுரிமை என்றும் வலியுறுத்தினார்.

 

இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, காணாமல் போன சீன ஆடவரான லிம் சின் எய்க், அம்னோ கட்டடப் பேரிடரில் மேலிருந்து பெரும் பாரத்துடன் கீழே விழுந்த பாகங்களால் சில மீட்டர் ஆழம் வரையில் தன் ஹோண்டா சிட்டி ரகக் காரோடு புதையுண்டிருக்கக்கூடும் என ஐயுறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை மீட்கும் பணி தீயணைப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பெரும் முயற்சியில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் நொறுங்கிய நிலையில் இருந்த காரின் சிறு சிறு பாகங்களையும் டயரையும் முதலில் கண்டுபிடித்தனர். காருடன் புதையுண்ட தன் கணவர்தான் என்பதை அறிந்த லீ சாய் சொங் (வயது48) நிகழ்விடத்திலேயே தன் குடும்பத்தினருடன் பீதியுடன் காத்திருந்தனர். மீட்புப் படியினர் புதையுண்ட ஆடவரைக் கண்டுபிடிக்க சுமார் 10 மீட்டர் ஆழம் வரையில் தோண்டினர். எனினும், பெரும்பான்மையான பாகங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டிருப்பதை அறிந்தனர்.

படம்1  இடிதாங்கி விழுந்து சேதமுற்ற மெக்கலிஸ்தார் சாலையின் ஒரு பகுதி
படம்1
இடிதாங்கி விழுந்து சேதமுற்ற மெக்கலிஸ்தார் சாலையின் ஒரு பகுதி

இதன் பொருட்டு, புதையுண்ட வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஆடவரின் உடலைத் மீட்டெடுக்கும் பணி அவரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் ஜூன்17 காலை 8 மணியளவில் நிறுத்தப்பட்டது. சேதமுற்ற அப்பகுதியை மண்வாரி இயந்திரத்தின் உதவியோடு இன்னும் ஆழமாகத் தோண்டினால் பக்கத்தில் உள்ள கட்டடங்களுக்கு பெரும்  ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று அஞ்சி இம்முடிவு எடுக்கப்பட்டது. இச்சம்வத்தால் அச்சாலையின் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததால் உடனே அதைச் சீரமைக்கும் பணி பினாங்கு நகராண்மைக் கழக ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய காலவரம்பில் அவர்கள் சாலையைச் சீரமைத்தது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

இதற்கிடையில், மீட்புப் பணியின் போது முழுமையாக உடனிருந்த பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட அக்குடும்பத்திற்குத் தம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுத் தர மாநில அரசு முழுமையாக உதவி புரியும் எனக் கூறினார். அதோடு, பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு, முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இணைந்து 19,000 ரிங்கிட் கருணைநிதியை வழங்கினர்.

இரண்டு வாரங்களில் நடந்த இரண்டு கட்டமைப்புத் தோல்விகளைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக மாநில அரசு பினாங்கு பொது கட்டமைப்பு தோல்விகளைப் பற்றிய விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது. இக்குழு, மரணங்களை விளைவித்த இரண்டாம் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தையும், அம்னோ கட்டட இடிதாங்கி விழுந்த சம்பவத்தையும் முழுமையாக ஆராய்ந்து விசாரிக்கும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கவும் மாநில அரசு தயங்காது என முதல்வர் வலியுறுத்தினார்.

 

படம்2 சீரமைப்புப் பணிக்குப் பின் பழைய நிலைக்குத் திரும்பிய மெக்கலிஸ்தர் சாலை.
படம்2
சீரமைப்புப் பணிக்குப் பின் பழைய நிலைக்குத் திரும்பிய மெக்கலிஸ்தர் சாலை.