பிறையில் புதிய சமூக மண்டபம் நிர்மாணிப்பு – முதலமைச்சர்

Admin

பிறை – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தாமான் செனாங்கின், பிறை MPKK மண்டப நிர்மாணிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

“பிறை கிராம சமூக மேலாண்மை கழக (MPKK) மண்டபத்தின் திட்டம் உரிய நேரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த பிறை MPKK மண்டபம் 30 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதனை இடித்து ரிம2.0 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதியத் தோற்றத்தில் கட்டப்படும். இந்தப் பொது மண்டபத்தில் பூப்பந்து ‘கோர்ட்’ இடம்பெறும்,” என்று மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.

“இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக மாவட்டம் மற்றும் நில அலுவலகம் (மத்திய செபராங் பிறை) மற்றும் மாநில பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) திகழ்கிறது.

“இத்திட்டத்தின் ஆரம்பப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பினாங்கு2030 இலக்குக்கு இணங்க, மாநில அரசு எம்.பி.கே.கே. அரங்குகளை முழுமையாக சமூகப் பாங்கானத் திட்டங்கள் நடத்துவதற்குப் பயன்படுத்த உறுதிபூண்டுள்ளது. இந்தப் பொது இடங்களை MPKK, அரசு சாரா நிறுவனங்கள், சமூக இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள் சமூகத்திற்கு நன்மை பெறும் வகையில் பயன்படுத்த வேண்டும்,” என இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னதாக சாவ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், இரண்டாம் துணை முதலமைச்சரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி, செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ அசார் அர்ஷத், எ.பி.எஸ்.பி கவுன்சிலர் டேவிட் மார்ஷல் மற்றும் பிறை MPKK தலைவர் ஶ்ரீ சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“இந்த மண்டப நிர்மாணிப்புப் பணிகள் முடிந்தவுடன் பிறை MPKK நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். MPKK பிறை நிர்வாகம் சிறந்த முறையிலும் மிகுந்த பொறுப்புடன் இதனை நிர்வகிக்க வேண்டும்,” என முதலமைச்சர் வலியுறுத்தினார்.

“பினாங்கில் வசதியான, பாதுகாப்பான மற்றும் சிறந்த பொது உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் மாநில அரசு இணக்கம் கொள்வதை இந்தத் திட்டம் சித்தரிக்கிறது.

“பொது மண்டபத்தைப் பொறுத்தவரை, இந்த அரங்குகள் நல்ல நிலையில் இருப்பதையும், உள்ளூர் சமூகத்தின் பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டுடன் பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையும் நாங்கள் எப்போதும் கண்காணிப்போம்” என்று சாவ் கூறினார்.

பினாங்கு மாநில அரசாங்கம் ஊராட்சி மன்றங்களின் ஒருங்கிணைப்பில் காலி நிலங்களை சமூக பாங்கான இடமாக உருமாற்றம் காண இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசாங்கம், ஊராட்சி மன்றங்களுடன் கைக் கோர்த்து அரசு சாரா நிறுவனங்கள், சமூக இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள் இணை ஆதரவில் புதிய அணுகுமுறையைக் கையாள இணக்கம் கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பொது இடங்கள் குறிப்பாக மண்டபங்கள், விளையாட்டு அரங்குகள், பொழுது போக்கு பூங்கா ஆகியவை சமூகம் பாங்கான நடவடிக்கைகள், திட்டங்கள் மேற்கொள்ளும் இடமாகப் பயன்படுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் சாவ் அறிவித்தார்.

“இன்னும் சில திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து திட்டங்களும் காலக்கெடுவிற்குள் முடிக்கப்படுவதை மாநில அரசாங்கம் உறுதி செய்யும்,” என்று அவர் கூறினார்.

பொது மக்கள் நலனுக்காக MPKK மண்டபங்கள் நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம். அவ்வகையில், தாமான் கிம்சார், தாமான் இந்திராவாசே ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் மண்டபங்கள் சமூகப் பாங்கானத் திட்டங்கள் நடத்த துணைபுரிகிறது என இராமசாமி கூறினார்.

மாநில அரசாங்கம் பிறை தொகுதி மக்களின் நல்வாழ்வுக்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தி வருவதை வரவேற்றார்.

பிறை தொகுதியில் வெள்ளப் பிரச்சனையைக் களையும் நோக்கத்தில் பல வெள்ள நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்ட பல நிவாரணத் திட்டங்கள் தற்போது செயல்பாடுக் கண்டு வருகிறது.

“மாநில அரசாங்கம் எப்பொழுதுமே சமூகத்தின் தேவைகளுக்கு முன்னிரிமை அளித்து செயல்படும். அவ்வகையில், பெருநிலத்தில் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையைக் களைய தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு துறைகள், மத்திய அரசாங்கம் என பல தரப்பினருடன் செயல்படுவதாகக் கூறினார்.