பிறை தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு.

Admin

இந்துக்களின் முக்கிய பண்டிகையில் தீபாவளியும் அடங்கும். இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இவ்விருந்துபசரிப்பு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருரான பேராசிரியர் ப.இராமசாமியின் ஏற்பாட்டில் தாமான் சுப்ரீமில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் தமது திணைவியார் திருமதி.கலையரசியுடன் கலந்து சிறப்பித்தார்.

அதன் பிறகு, குத்து விளக்கு ஏற்றி பிரபல ஆஸ்ட்ரோ புகழ் கெலக்ஸி நடனமணிகளின் ஆடலுடன் நிகழ்வு இனிதே தொடங்கியது. ஆடல் பாடல் என இயல் இசையுடன் திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக நடந்தது. இதனுடன் வைசுவன் என்டர்டெய்னர்சின் கலைநிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்விற்குச் சிறப்பு சேர்த்தது. அங்கு பொதுமக்கள் புற்றீசல் போல திரண்டனர். சுமார் 3000 பேருக்கு பெளிதா உணவகத்தின் உணவு பண்டங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தீபாவளி அன்பளிப்புப் பணத்தை 150 பேருக்கு பிறை சட்டமன்ற உறுப்பினர் ப.இராமசாமியும் அவர்தம் துணைவியாரின் பொற்கரத்தால் வழங்கினர்.

தீபாவளி அன்பளிப்பைப் பெற்ற சிறுவர்களுடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமியும் அவர்தம் துணைவியார் திருமதி.கலையரசி.
தீபாவளி அன்பளிப்பைப் பெற்ற சிறுவர்களுடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமியும் அவர்தம் துணைவியார் திருமதி.கலையரசி.

இதனை தொடர்ந்து பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் விரைவில் பிறை தொகுதியை ஒரு பசுமை பூங்காவாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வரவேற்புரையில் கூறினார். அதோடு, தெலோக் இண்டா அடுக்குமாடியின் பல பிரச்சனைகளுக்கு அவ்வப்போது தீர்வுக்கண்டு வருவதையும் சுட்டிக் காட்டினார். அதோடு, அப்பகுதி மக்களிடையே பொது உடைமைகளின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வும் அவசியம் என வேண்டுகோள் விடுத்தார். நடந்து முடிந்த 14-வது பொது தேர்தலில் பிறை வரலாற்றில் முதல் முறையாக பெரும்பாண்மை ஓட்டு வித்தியாசத்தில் தம்மை வெற்றி பெற செய்த பொதுமக்களுக்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொண்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி அவர்கள்.