பொது மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் – ஜெக்டிப்

Admin

கட்டட ஆணையரின் (சி.ஒ.பி) கீழ் உள்ள கூட்டமைப்பு நிர்வாகக் குழு (ஜே.எம்.பி) மற்றும் நிர்வாகக் கழகங்கள் (எம்.சி) நீர் மற்றும் மின்சாரம், சுகாதார சேவை, மின் தூக்கி மற்றும் இயந்திர பராமரிப்பு போன்ற அத்தியாவசிய வசதிகள் தற்போதைய நடமாட்டக் கட்டுபாடு ஆணையின் போது முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வீடமைப்பு, உள்ளூராட்சி, கிராமப்புற & நகர்ப்புற நல்வாழ்வு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மற்றும் வீட்டமைப்பு அமைச்சு அண்மையில் நிலையான இயக்க செயல்முறையை அறிவுறுத்தியுள்ளதை ஜெக்டிப் விவரித்தார்

“நிர்வாக அலுவலகம் குடியிருப்பாளர்களுக்கு திறக்கப்படாது. இது கோவிட் -19 தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொது மக்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கும் ஆகும். கூட்டமைப்பு நிர்வாக குழு (ஜே.எம்.பி) மற்றும் நிர்வாகக் கழகங்கள் (எம்.சி) ஊழியர்கள் பணியில் ஈடுப்படுவதை குறிப்பிட முறையான கடிதம் வழங்க வேண்டும். மேலும், இந்நிர்வாக குழுக்களின் செயல்படும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை”, என ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜெக்டிப் நினைவுறுத்தினார்.

மேலும், ஜெக்டிப் கூறுகையில், ஜே.எம்.பி மற்றும் எம்.சி அலுவலகத்தில் இரண்டு பேர் மட்டுமே பணிபுரிய முடியும்; பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜே.எம்.பி அல்லது எம்.சி ஊழியர்கள் உடல் சீதோஷ்ண நிலை பரிசோதிக்க வேண்டும். கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி (குறைந்தது ஒரு மீட்டர்) பின்பற்றுவது உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

ஜே.எம்.பி அல்லது எம்.சி அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்தினர், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதோடு அவ்வப்போது அரசாங்கத்தின் உத்தரவுக்கும் செவிசாய்க்க வேண்டும்.

தொடர்ந்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது ஜே.எம்.பி. மற்றும் எம்.சி நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பொதுக் கூட்டங்களையும் ஒத்திவைத்தல் அல்லது ரத்து செய்ய வேண்டும். பொது வசதிகளான அரங்குகள், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ‘சௌனா’, சுராவ் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பகுதிகளை மூடுவதல் ;அடுக்குமாடி குடியிருப்பின் வணிக வளாகங்களை (அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தவிர) மற்றும் கல்வி மையம் மூடுதல்; புதுப்பித்தல் பணிகள் அல்லது பழுதுப் பார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை ஒத்திவைத்தல் ஆகியவை மூலம் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் நம்பிக்கைத் தெரிவித்தார்.