பொது வீடமைப்புத் தேர்வு நேர்மையாக நடத்தப்படும் – ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ

பினாங்கு மாநில அரசு பொது வீடமைப்புத் தேர்வு செயல்முறையினை மிக நேர்மையாக திறன்பட நடத்துவதாக தெரிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ. மாநில அரசு பின்பற்றும் பொது வீடமைப்புத் தேர்வு செயல்முறையினை அறிக்கையாக செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
மாநில அரசு மீது குற்றஞ்சாட்டுகள் சுமத்தும் கட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் மலேசிய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அல்லது காவல் துறையிடம் புகார் கொடுக்க வரவேற்கப்படுகின்றனர். “நாங்கள் பொது வீடமைப்பு செயல்முறையில் பண மோசடி ஏற்படுவதை பொறுத்து கொள்ள மாட்டோம். பினாங்கில் பொது வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்குவதற்கு எவ்வித பணமும் செலுத்த அவசியமில்லை. எனவே, பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையிடம் புகார் கொடுக்க வேண்டும்” என திரு ஜெக்டிப் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் பொது வீடமைப்புப் பெறுவதை உறுதிப்படுத்த முன் பணம் செலுத்தியதாக பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இவ்வாறு தெரிவித்தார். வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் பினாங்கு காவல் துறை தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மார்ச் 4-ஆம் திகதி பொது வீடமைப்புப் பெறுவதில் பாதிக்கப்பட்ட மூவரின் போலிஸ் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி வினவினார். எஸ்.பி செல்லையா வீடமைப்புப் பகுதியில் வீடுப் பெற்று தருவதாக கூறி பண மோசடி நடந்ததாகக் கூறினார்.
பினாங்கில் தேர்வு செயல்முறை விரிவாக்கக் குழுவின் நேர்மையான வழிகாட்டலில் உண்மையான ஏழை அல்லது தகுதிப் பெற்றவர்களுக்கு மட்டுமே பொது வீடமைப்பு வீடுகள் கிடைக்கும் என மீண்டும் வலியுறுத்தினார். எனவே, பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தினார்,
ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் எங், நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ராம் கர்பால் மற்றும் ஜேப் உய் கலந்து கொண்டனர்.