மக்களின் நலன் கருதி தாமான் இண்ராவாசேவில் சாலை பாதுகாப்பு திட்டம் மேம்படுத்தப்படும் – டேவிட

Admin

தாமான் இண்ராவாசே குடியிருப்புப் பகுதியில் கனரக வாகனங்கள் அவ்வழியை பயன்படுத்துவது அவ்வட்டார மக்களுக்கு அபாயமாக இருப்பதால் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் முயற்சியில் 2015 – ஆம் ஆண்டு தடுப்புப் பாலம் அமைக்கப்பட்டது. எனினும், அப்பாலம் பொறுப்பற்ற தரப்பினரால் சேதப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு செபராங் பிறை நகராண்மைக்  கழகத் துணையுடன் இரண்டாவது முறையாக அங்கு மற்றொரு தடுப்புப் பாலம் அமைக்கப்பட்டு அதுவும் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தாமான் இண்ராவாசே குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு தடுப்புப் பாலம் நேற்று நிருவப்பட்டது. ஆனால், அத்தடுப்பு பாலம் நேற்று இரவு பொறுப்பற்ற கனரக ஓட்டுநனரால் உடைக்கப்பட்டது என அவ்விடத்தை நேரில்.சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல். தாமான் இண்ராவாசே அருகில்

இருக்கும் சீனி ஆலை மற்றும்  இரயில் நிலையத்திற்குச் செல்வதற்கு அதிகமாக கனரக வாகனங்கள் இச்சாலையைக் கடப்பதாக அவர் சாடினார். இக்கனரக வாகனங்கள் அச்சாலையை கடப்பதால் அவ்வட்டார மக்களுக்கு அபாயமாக அமைகிறது. அங்கு பலமுறை தடுப்புப் பாலம் அமைத்து, அறிவிப்பு பலகை பொருத்தியும் எவ்வித பயனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

 

இச்சம்பவம் தொடர்பாக   நேற்று காவல்துறையில் புகார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சனை கொண்டு சென்று சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும் என சூளுரைத்தார்.

 

மேலும், தாமான் இண்ராவாசே நுழைவாயிலில் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டம் விரைவில் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதன்வழி அச்சாலையில் கனரக வாகனங்கள் பயணிப்பது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.