“மத்திய அரசின் மாற்றம் இந்தியர்களின் ஏற்றத்திற்கு வித்திடும்”. துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி கருத்து.

Admin
பட்டவர்த் பஞ்சாபி கல்வி மையத்தின் தலைமயாசிரியரும் (வலம்) ஆசிரியர்களும்

“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

  புண்ணுடையர் கல்லா தவர்”          குறள்: 393

வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்களைப்போல் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வியைக் கற்றறியாதவர் கண்கள் இருந்தும் பார்வையற்றவராவர் எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கல்விச் செல்வத்தை அனைவரும் பெற்றிருப்பது அத்தியாவசியமாகும். அந்த வகையில் அதி முக்கியம் வாய்ந்த இந்தக் கல்வியை நம் இந்திய மாணவர்கள் சிறந்த முறையில் கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து பல சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது.

கடந்த மாதம், மாநில அரசு தொடர்ந்து ஐந்தாம் முறையாகப் பினாங்கின் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம1.75 மில்லியன் மானியத்தை பகிர்ந்தளித்ததை நாம் அறிவோம். இம்முறை மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குக் கூடுதல் சிறப்பு மானியமும் தமிழ் பாலர் பள்ளிகளுக்கும் பஞ்சாபி பள்ளிகளுக்கும் மானியமும் வழங்கியது. இதுவரையில் மலேசியாவில் எந்த மாநில அரசாங்கமும் பாலர் பள்ளிகளுக்கு மானியம் வழங்கியது கிடையாது என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாநில அரசு பாலர் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ரிம100,000 மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 16 பாலர் பள்ளிகளுக்கும் ரிம50,000 வழங்கிய மாநில அரசு இம்முறை 23 பாலர் பள்ளிகளுக்கும் ரிம50,000 பகிர்ந்தளித்தது. மத்திய அரசிடமிருந்து பாலர் பள்ளிகளுக்கான நிதியுதவியைப் பெறும் மற்ற 7 பள்ளிகளும் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டதால் இம்முறை இப்பள்ளிகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் அன்பழகன் தம் வரவேற்புரையில் கூறினார். இம்மானியம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இரண்டு தவணையாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 21-ஆம் திகதி கொம்தார் ஏ அரங்கத்தில் நடைபெற்ற இம்மானியம் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தலைமை தாங்கினார். இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மற்ற பள்ளிகளுக்கு நிகராகச் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குப் பல நிதியுதவிகளை வழங்கி எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்து வருகிறது என முதல்வர் தம் சிறப்புரையில் கூறினார். “ மேலும், பினாங்கு மாநில பஞ்சாபி இனத்தவரின் உரிமைகளையும் நாங்கள் மதிக்கத் தவறியதில்லை. தொடர்ந்து ஐந்தாம் முறையாக, பினாங்கில் செயற்படும் கல்சா தர்மிக் பஞ்சாபி பள்ளிக்கும் பட்டவர்த் பஞ்சாபி கல்வி மையத்திற்கும் மானியம் வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். அதுமட்டுமன்றி, இம்முறை தமிழ்க்கல்விக்காகக் கூடுதல் சிறப்பு நிதியாக ரிம84,000 வழங்கப்படுகிறது. இந்நிதி ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்விக் கூடங்களில் தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கு, தன்முனைப்புக் கருத்தரங்கு, தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு, யு.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் ஆகிய தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் பலவற்றை மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று முதல்வர் லிம் தம் உரையில் கூறினார்..

இதுவரை இல்லாத வகையில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமளவில் உதவி வரும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசுக்குப் பினாங்கு வாழ் இந்திய மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர்             ப.இராமசாமி தம் சிறப்புரையில் வலியுறுத்தினார். பினாங்கின் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் நல்லதொரு கற்றல் கற்பித்தல் சூழல் உண்டாக வேண்டும் என்ற உன்னத நோக்கில் வழங்கப்படும் இந்த மானியம் மிகவும் பாராட்டுக்குரியதாகும். இந்தியர்களின் தேவைகளும் உரிமைகளும் உயர்ந்த நிலையில் காக்கப்பட வேண்டும் என்றால் மத்திய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் தெளிவுறுத்தினார். அதற்காக மக்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமையினை இம்முறை சரியாகச் செய்வார்கள் என்றும் பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.

இம்மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர், இரண்டாம் துணை முதல்வர் உட்பட, சட்டமன்ற உறுப்பினர்களான, திரு நேதாஜி இராயர், திரு, இரவீந்திரன், திரு தனசேகரன், டத்தோ அப்துல் மாலிக்,  மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு அதிகாரிகளான டத்தோ டாக்டர் அன்பழகன் மற்றும் திருமதி மங்களேஸ்வரி, திரு காளிதாஸ், திரு அருணாச்சலம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பாலர் பள்ளி ஆசிரியர்கள், பஞ்சாபி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பொதுமக்கள் யாவரும் கலந்து சிறப்பித்தனர்.

 

மானியம் பெற்ற பள்ளிகளின் விவரம் பின்வறுமாறு :

 

எண்

பள்ளியின் பெயர்

மானியம் (ரிம)

1. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

3,000

2. சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி

3,000

3. ஸ்ரீ அம்பாள் பாலர் பள்ளி

3,000

4. கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

3,000

5. சிம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி

3,000

6. பிறை தமிழ்ப்பள்ளி

2,500

7. பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,500

8. மேஃபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

9. பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி

2,000

10. பழனியாண்டி தமிழ்ப்பள்ளி

2,000

11. சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

12. பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

13. பய்ராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

14. வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

15. ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

16. ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

17. புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி

2,000

18. பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி

2,000

19. நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி

2,000

20. ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி

1,500

21. அஸாத் தமிழ்ப்பள்ளி

1,500

22. சுங்கை அரா தமிழ்ப்பள்ளி

1,500

23. தாசெக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி

1,500

மொத்தம்

50,000

 

பஞ்சாபி பள்ளிகளுக்கான மானியம்

  பள்ளியின் பெயர் மானியம் (ரிம)
1. கல்சா தர்மிக் பள்ளி, பினாங்கு ரிம 40,000
2. பஞ்சாபி கல்வி மையம், பட்டவர்த் ரிம 25,000
மொத்தம் ரிம 65,000