மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் சமூகப்பணி பாராட்டக்குறியது – வோங்

மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைமையில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு அன்பான சமூகத்துடன் நற்பணி எனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 7-வது முறையாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் 30 இந்திய குடும்பங்களுக்கு பரிசுக்கூடைகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆறு ஆண்டுகளாக பி40 குழுவைச் சேர்ந்த பொது மக்களுக்குப் பரிசுக்கூடைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு கோவிட்- 19 தொற்றுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக வேலை மற்றும் வருமானம் இழந்த பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவிகள் நல்கப்பட்டதாக புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைவர் திரு தர்மன் கூறினார்.

நாங்கள் முன்பு உதவி செய்த 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருந்து, இந்நிகழ்ச்சியில் பரிசுக்கூடைகள் பெற 30 குடும்பங்களை பட்டியலிட்டோம். தீபாவளி
கொண்டாட்டத்தை முன்னிட்டு மளிகை மற்றும் பிரார்த்தனை பொருட்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இன்று வழங்கப்பட்ட ஒவ்வொரு பரிசுக்கூடையும் தலா ரிம200 மதிப்புடையவை, ” என்று தர்மன் கூறினார்.

” இந்த பேரவையின் வழிகாட்டலில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(எம்.சி.ஓ) காலக்கட்டத்தில் உதவி நாடும் பொது மக்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திட்டம் செயல்படுத்த ஏறக்குறைய ரிம50,000 செலவிடப்பட்டது,” என்றார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவை வசதிக் குறைந்த மற்றும் கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் செயலானது பாராட்டக்குறியது என புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ” என்று வோங் தனது உரையில் கூறினார்.


” இது போன்ற சமூகநலத் திட்டங்களுக்கு ஆதரவாளர்களின் கடின உழைப்பிற்கும் அவர்தம் உயர்ந்த சிந்தனைக்கும் நன்றித் தெரிவித்தார்.

புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினருமான கிரிஸ் லீ சுன் கிட், திரு தர்மன் மற்றும் அவர் தம் பேரவை உறுப்பினர்கள் சிறந்த சமூக சேவை செய்வதாகப் புகழாரம் சூட்டினார்.

இந்த ஆண்டு சவால் மிக்க ஆண்டாகத் திகழ்ந்தாலும், இந்தத் தீபாவளி பண்டிகை அனைவரின் வாழ்க்கையில் வெளிச்சத்தை அளிக்கும் என்று லீ நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது கோவிட்-19 தொற்று நோய் காலக்கட்டம் மட்டுமின்றி அதற்கு முன்பும் திரு தர்மன் மற்றும் அவர் தம் பேரவையின் உறுப்பினர்கள் வசதிக் குறைந்தவர்களுக்கு அயராது உதவி புரியும் செயலானது இந்தப் பேரவையின் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.

“நாங்கள் பினாங்கு மக்களின் நலனுக்காக பணியாற்றுவதை நிறுத்த முடியாது. இந்த சவாலான காலக்கட்டத்தில் இனம் அல்லது மதம் பாராமல் உதவி நாடுபவர்களுக்கு உதவ மறந்துவிடக் கூடாது. நாம் அனைவரும் மலேசிய சகோதர சகோதரிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என்று லீ வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஹரி கிருஷ்ணன் (பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்), முத்தியாரா உணவு வங்கி, மின்னல் குடும்பம் மற்றும் பன் கிளப் (டத்தோ சிவா நாயர்), டெஸ்கோ தஞ்சோங் பினாங்கு(பொது மேலாளர் பி. தேவியராஜன்) மற்றும் சிவம் கேட்டரிங் சென்.பெர்ஹாட் (சுபா பரமசிவம்) ஆகியோர் ஆதரவு நல்கினர்.

இவ்விழாவின் போது நடைபெற்ற பாடல்கள் மற்றும் பாரம்பரிய இந்திய நடனங்களில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கண்களை கவர்ந்தது.