மாணவர்களிடையே பற்கள் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு அவசியம்

பிறை – “பொதுவாகவே பொது மக்கள் சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிப்பர். எனவே, சுகாதாரமான வாழ்க்கை முறை என்று கூறும் உடலின் பல பாகங்களான இருதயம், சிறுநீரகம், நிரையீரல், கண் என ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் பற்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அனைவரின் மனதில் எழுவதில்லை.

பிறை எம்.பி.கே.கே தலைவர் ஸ்ரீ சங்கர்.

“பல் போனால் சொல் போகும் என்ற பழமொழிக்கேற்ப, நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது.

“நமது குரலின் பிம்பமாகத் திகழும் பற்களை சிறு வயது முதல் பேணி காக்க வேண்டும்,” என ‘நமது பற்களை நேசிப்போம் வாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் பிறை சமூக மேலாண்மை கழக (எம்.பி.கே.கே) தலைவர் ஶ்ரீ சங்கர் இவ்வாறு கூறினார்.

எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை.

‘நமது பற்களை நேசிப்போம் வாருங்கள்’ என்ற திட்டத்தை செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் பொன்னுதுரை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இத்திட்டம் பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் Ikon Gigi Malaysia (Pulau Pinang) மற்றும் பிறை தமிழ்ப்பள்ளி இணை ஆதரவில் நடைபெற்றது.

இத்திட்டம் பிரத்தியேகமாக பிறை தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 50 மாணவர்களுக்கும் பிறை எம்.பி.கே.கே சார்பாக பற்தூரிகை மற்றும் பற்பசை வழங்கப்பட்டது.

மாணவர்களுக்குச் சரியான முறையில் பல் துலக்குவது எப்படி என Ikon Gigi Malaysia (Pulau Pinang) பிரதிநிதி துரைசிங்கம் மிக எளிய முறையில் காண்பித்தார். மாணவர்களும் இணைந்து பற்களைத் துலக்கிக் கற்றுக் கொண்டனர்.

நம் அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட வேளையில் மாணவர்களுக்கு சிறு வயது முதல் முறையாக பல் துலக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்குப் பற்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விழுப்புணர்வு பட்டறையும் நடத்தப்பட்டது.

“இத்திட்டத்தை வரவேற்பதாகவும் எதிர்காலத்தில் ஒன்று, இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்த இலக்கு கொண்டுள்ளதாகவும் கவுன்சிலர் பொன்னுதுரை கூறினார்.

அடுத்ததாக பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் உலர்ந்த உணவு மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பட்டறை இரண்டு மாத காலத் தவணையில் பி40 மகளிருக்கு நடத்த இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஶ்ரீ சங்கர் தெரிவித்தார்.