மாநில அரசிற்கு எ.கே.எஸ் நிவாஸ் நிறுவனம் 1,000 மளிகைப் பொருட்கள் அன்பளிப்பு

Admin

மாக் மண்டின்- கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் அரசு சாரா இயக்கங்கள், அனைத்துலக வர்த்தக நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொருளுதவியாகவும் நிதிவுதவியாகவும் வழங்குவது போற்றத்தக்கது.

எ.கே.எஸ் நிவாஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம் கோவிட்-19ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் மளிகை பொருட்கள் உள்ளடக்கிய 1,000 பொட்டலங்கள் மாநில அரசிற்கு வழங்கும் நிகழ்வில் அதனைப் பெற்றுக் கொண்ட சமூகநலம், சமுதாய வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரான பீ புன் போ இவ்வாறு கூறினார்.

ஏகே.எஸ் நிவாஸ் நிறுவனம் ஏறக்குறைய ரிம60,00 மதிக்கத் தக்க மளிகை பொருட்களை 1,000 பொட்டலமாக பகிர்ந்தளித்தது.

“ஒவ்வொரு பொட்டலத்திலும் இந்நிறுவன தயாரிப்பு உணவுப் பொருட்களும் இதர சமையல் பொருட்களும் இடம்பெறுவதாகவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனதாபிமான உணர்வோடு எவ்வித எதிர்ப்பார்பும் இல்லாமல் இந்த பங்களிப்பு நல்குவதாக இந்நிறுவன இயக்குநர் டத்தின் பத்மினி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முதலாளி வர்கத்தினர் கோவிட்-19 காலச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கும் செயலிற்குக் கண்டனம் தெரிவித்தார்.

மாநில அரசு கோவிட்-19ஐ எதிர்நோக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் பின் தங்கிவிடக்கூடாது என்ற கொள்கையில் இணக்கம் கொள்கிறது. மேலும், மாநில அரசாங்கம் எல்லை கட்டுப்பாடின்றி, அரசியல் பின்புலம் பாராமல் மனிதநேயத்திற்கு முன்னுரிமை வழங்கி உதவிகள் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

மாநில அரசு கோவிட்-19ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவுவதற்காக தொடர்புச் சேவை (call centre)அறிமுகம் செய்துள்ளது. எனவே, பொது மக்கள் 15999-எண்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்புக் கொண்டு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, எ.கே.எஸ் நிறுவன செயல்முறை இயக்குநரும் உரிமையாளருமான டத்தோ முரளிதரன், இந்நிறுவனப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில அரசு சமூகநலன் துறை மற்றும் பொருளாதார சமத்துவப் பிரிவுவில் பதிவுப்பெற்றவர்கள்; மக்கள் வீடமைப்புப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க 20,000 மளிகைப் பொருட்கள் வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டினார்.

பொது மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்க விரும்பும் அரசு சாரா இயக்கங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் துணையுடன் வீட்டுக்கு வீடு சென்று வழங்க வேண்டும் எனக் கூறினார். இதன் மூலம் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க முடியும்.