மாநில அரசு ஊழியர்களுக்கு மலிவு வீடு – திரு.ஜெக்டிப்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு.ஜெக்டிப் சிங் டியோ
செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு.ஜெக்டிப் சிங் டியோ

பினாங்கில் 1 மலேசியா பராமரிப்பு நிதியம் கீழ் பிரிமா(PRIMA) மலிவு விலை வீடமைப்புத் திட்டம் கட்டப்படும் எனும் மத்திய அரசின் ஆசைவார்த்தை இன்று வரை செயல்படுத்தவில்லை. அதே போன்று, 1மலேசியா அரசு ஊழியர்களுக்கானப் பொது வீடமைப்புத் திட்டத்திலும்(PPA1M) பினாங்கு மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ தமக்கு வருத்தத்தைத் தருவதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்த 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தில் 2018-ஆம் ஆண்டு நாட்டில் பல மாநிலங்களில் ரிம 90,000 முதல் ரிம300,000 வரையில் 100,000 வீடுகள் பிரத்தியேகமாக பொது துறை அரசு ஊழியர்களுக்கு கட்டப்படவிருப்பதாக இடம்பெற்றிருந்தது. சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு மாநில அரசு கடிதம் எழுதியும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறினார். எனவே, பினாங்கு மாநில வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் மாநில அரசின் உதவியுடன் விரைவில் கட்டப்பட இலக்கு கொண்டுள்ளதாக விவரித்தார். இத்திட்டத்தை மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதித்து அதற்கான ஆயுத்த வேலைகள் தொடங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் ஆட்டிக்குழு உறுப்பினர்.
பினாங்கில் மட்டும் ஏறக்குறைய 4,178 அரசு ஊழியர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்கள் அனைவரையும் புறக்கணிப்பது நியாமற்ற செயல் எனக் கேள்வி எழுப்பினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப். பினாங்கு மாநில அரசு, ஊழியர்களின் நலனை என்றும் பாதுகாத்து வருவதற்கு இவ்வாண்டு இறுதியில் வழங்கப்பட்ட போனஸ் தொகை தக்க சான்றாகும். கடந்த டிசம்பர் 18-ஆம் திகதி அரசு ஊழியர்களுக்கு ரிம 5.22 கோடி ஒதுக்கீட்டில் அவர்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு இச்சன்மானத்தை வழங்கியது.