மூன்று பிள்ளைகளின் கல்வி நலனுக்காக மடிக்கணினி அன்பளிப்பு -குமரேசன்

புக்கிட் கம்பீர் – பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் சாலை விபத்தில் சிக்கி உடல் நலம் குன்றிய சிவநேசன் குடும்பத்தாருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

சிவநேசன் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் படு காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பு பெருநிறுவனத்தில் வேலை செய்து தனது குடும்பத்தை வழி நடத்தி வந்துள்ளார்.

இந்த கொடூர சாலை விபத்து மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான சிவநேசனின் வாழ்க்கையைத் தடம் மாற செய்தது.

சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், சிவநேசனின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்த போது அவரின் மூன்று பிள்ளைகளும் இல்லிருப்பு கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள சிரமத்தை எதிர் நோக்குவதை கண்டு டெல் ரக மடிக்கணினியை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் இந்த குடும்பத்திற்கு உணவுக்கூடைகளும் வழங்கியுள்ளார்.

“இந்த கொடூர சாலை விபத்தில் அவரின் உடல் முழுவதும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இதனால் மொத்த நிரந்தர இயலாமை (டி.பி.டி) நிலை ஏற்பட்டது.

“இந்த மூன்று பிள்ளைகளும் தனது தந்தையின் ஒரு விவேக தொலைபேசி பகிர்ந்து கொண்டு இணைய வழி கற்றலை மேற்கொண்டுள்ளனர். கல்வி என்பது அனைவருக்கும் சமமான நிலையில் கற்க வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் வழி, மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

“பினாங்கு மின் கற்றல் கணினி திட்டம் இதுவரை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. எனவே, எனது நண்பரை அணுகி இந்த பிள்ளைகளுக்கான மடிக்கணினியை அன்பளிப்பு பெற்றேன்.

“இதன் வழி அந்த மூன்று பிள்ளைகளும் மின் கற்றல் வழி கல்வி கற்க இலகுவாக அமையும்,” என முத்துச்செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குமரேசன் இவ்வாறு கூறினார்.

சிவநேசனின் மனைவி கா.மீனாட்சியம்மாள்,49 இல்லத்தரசியாகவும் பகுதி நேரமாக ஒப்பனையாளர் மற்றும் மேடை கலைஞராகவும் பணியாற்றி வந்ததாக கூறினார். கோவிட்-19 தாக்கத்தால் தனது பகுதிநேர வருமானமும் தடைப்பட்டது, என்றார்.

“தனது குடும்பத்திற்கு உதவ முன் வந்த முதல் அரசியல்வாதியாக குமரேசன் திகழ்கிறார்.

“எனது குடும்பத்தை சந்தித்த சில தினங்களில் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக மடிக்கணினியை அன்பளிப்பாக வழங்கினார். அவரின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்றது.

“குமரேசன் இரக்கமுள்ளவர் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர். அவர் தொடர்ந்து வசதி குறைந்த பொது மக்களுக்கு உதவிகரம் நீட்டுவார்,” என மீனாட்சியம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிறரின் கரத்தை எதிர்பார்க்காமல் சுயமாக சொந்த தொழில் தொடங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

எனவே, தனது குடியிருப்பின் அருகாமையில் உணவுக்கடை அமைக்க உணவு வளாகத்தில் இடம் பெறுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் குமரேசனின் உதவியை நாடியுள்ளார்.

“பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) அகப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு பரிந்துரைத்து, அவரின் விண்ணப்பத்திற்கு ஆதரவு கடிதம் சமர்ப்பிப்பதாகவும் குமரேசன் கூறினார்.

பொது மக்கள் கடிமான சூழலிலும் சுயமாக உழைத்து வாழ முற்படும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

“மாநில அரசும் தொடர்புடைய அனைத்து நன்கொடையாளர்களும் தேவைப்படும் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவுகளையும் தொடர்ந்து வழங்குவார்கள்.