யோகா ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும்.

  1. பகுதி நேர யோகா பயிற்றுவிப்பாளரான ஆர். லலிதா கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அவரது யோகா வகுப்புகள் நடத்த கட்டுப்படுத்தப்பட்டபோது, ஆரோக்கியமான உணவு உண்ணும் வாழ்க்கை முறையை வலியுறுத்தும் வகையில் சமையல் கலையில் களம் இறங்கியுள்ளார்.
  2. யோகா பயிற்சி செய்யும் ஆறு வயது சிறுமி

2015-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட யாத்ரா யோகா ஸ்டுடியோவில் சுமார் 50 பங்கேற்பாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் உறுப்பினர்கள் ஆறு வயது சிறுவர் முதல் 80 வயது முதியோர் வரை பங்கேற்கின்றனர்.

இந்த யோகா மையம் சுங்கை நிபோங்கில் உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, ஸ்ரீ நிபோங் வளாகத்தில் அமைந்துள்ளது.

சகலகலா வல்லவர் என்ற சொற்றொடருக்கு லலிதா மிகவும் பொருத்தமானவர். ஏனெனில், அவர் ஒரு யோகா பயிற்றுவிப்பாளர் மற்றும் சமையல்காரராக மட்டும் வலம் வராமல் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கில் பன்னாட்டு நிறுவனத்தில் முழுநேர திட்ட மேலாளராக பணியாற்றுகிறார்.

பகுதி நேரமாக ஏன் யோகாவில் இறங்கினீர்கள் என்று கேட்டதற்கு, ஜார்ச்டவுனில் அமைந்துள்ள தி டெம்பிள் ஒப் ஃபைன் ஆர்ட்ஸ் (டி.எஃப்.ஏ) மாணவராக பரதநாட்டியம் பயின்று வந்த காலத்தில்தான் யோகாவின் மீது நாட்டம் ஏற்பட்டதாக லலிதா கூறினார்.

டி.எஃப்.ஏ என்பது இந்திய சமூகத்தின் இந்திய கலைகளின் செழுமையை சமூகத்திற்கு வழங்குவதற்கான ஒரு தளமாகும். இங்கு இசை, நடனம் மற்றும் சமையல் கலைகள் போன்ற இந்திய நுண்கலைகளை மேம்படுத்துவதற்காக இம்மையம் பினாங்கில் செயல்படுகின்றது.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனது சொந்த மையத்தைத் தொடங்குவதற்கும், அம்மையம் பலருக்கு பலனளிக்கும் வகையில் திகழ்வதற்கு டி.எஃப்.ஏ-க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், என்றார்.

“ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமலாக்கத்தைத் தொடர்ந்து, எனக்கு மிகவும் பரிச்சயமான இந்த சமையல் கலையில் களம் இறங்கினேன்.

“நான் ஒரு முழுநேர சைவ உணவு உண்பவர் என்பதால் சைவ அடிப்படையிலான உணவுகளை மட்டுமே சமைத்து விற்பனை செய்கிறேன்.

எனது ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்த யோகா வகுப்புகள் வழிநடத்துதல் மற்றும் சமையல் கலை ஈடுபாடு இடம்பெறுகிறது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது,” என முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்க்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனித்துவமான பாரம்பரிய இந்திய சைவ உணவு வகைகளான கருவேப்பிலை குழம்பு, உருளைக்கிழங்கு மசாலா, கோங்குரா வித் பூசணி மசாலா, வாழைப்பூ போரியல் மற்றும் பலவற்றை சமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

தற்போது வேலை பழு மற்றும் யோகா வகுப்புகள் வழிநடத்துவதால் ஒரு நாளைக்கு அவர் 10 பேருக்கு மட்டுமே உணவுகளை சமைத்து விநியோகம் செய்கிறார்.

லலிதா தனது மாணவர்களுக்கு நேருக்கு நேர் வகுப்புகளை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) பின்பற்றி யோகா வகுப்புகளை நடத்துகிறார்.

“இப்போது நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது (சி.எம்.சி.ஓ), ஸ்டுடியோவில் நேருக்கு நேர் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 10 பங்கேற்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

” தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலை காரணமாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை நான் குறைக்க வேண்டியுள்ளது. எனது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது கடமையாகும்,” என்று லலிதா மேலும் கூறினார்.

ஒரே நேரத்தில் 10 பங்கேற்பாளர்கள் மட்டுமே ஸ்டுடியோவில் அனுமதிக்கப்படும் வேளையில், வெப்பநிலை பரிசோதனை, கை சுத்திகரிப்பு பயன்பாடு, பொதுவாக பயன்படுத்தப்படும் இடங்களை கிருமிநாசனி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, ​​லலிதா தனது சமையல் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக ஆரோக்கியமான உணவுகளைத் தயாரிக்கும்
ஓர் இலக்கை கொண்டுள்ளார்.

” எனவே, யோகாப் பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும், என அனைவரையும் வலியுறுத்தினார். இது நீண்ட காலம் மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் வாழ வழிவகுக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

யோகா வகுப்புகள் மற்றும் பிற தொடர்புடைய கூடுதல் தகவல்களுக்கு, 016-4112378 என்ற எண்ணில் லலிதாவை அழைக்கவும்.