லெபோ கம்போங் பெங்காலி பல்நோக்கு விளையாட்டு மைய அடிக்கால் நாட்டு விழாக் கண்டது

Admin

பட்டர்வொர்த்தில் உள்ள லெபுக் கம்போங் பெங்காலியில் உள்ள பல்நோக்கு விளையாட்டு மையத்தை மேம்படுத்தும் திட்டத்தை செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முழுச் செலவும் அதாவது ரிம300,000 மாநகர் கழகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத் கூறினார்.

“இத்திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகள் செப்டம்பரில் தொடங்கி, இந்த ஆண்டு டிசம்பரில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இத்திட்டம் நிறைவடைந்ததும், 1,465 சதுர மீட்டர் பல்நோக்கு விளையாட்டு மையத்தில் 21 வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் பூக்கள் மற்றும் தாவரங்கள் என பசுமையான சுற்றுச்சூழலுடன் காட்சியளிக்கும்.

“இந்த பல்நோக்கு விளையாட்டு மையத்தில் கூடைப்பந்து மற்றும் ஃபுட்சல் விளையாட பயன்படுத்தப்படலாம்.

“இந்த சமூகத் திட்டம் இந்த வட்டாரத்தில் வாழும் குடிமக்களுக்கும் பயனளிக்கும்,” என நம்பிக்கை கொள்வதாக இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில்
அசார் இவ்வாறு கூறினார்.

மேலும், வீட்டுவசதி, ஊராட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜக்டிப் சிங் டியோ மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கம்போங் பெங்காலி வட்டார குடியிருப்பாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு இந்த விளையாட்டு மையம் அமைக்க தாம் விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டார்.

“தனது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இன்று அடிக்கால் நாட்டு விழா நிகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், எம்.பி.எஸ்.பி-க்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, செபராங் பிறை ஊராட்சி திட்டம் 2030 (DRTSP2030) பொதுப் பங்கேற்பின் மூலம் குறிப்பாக பெருநிலத்தில் வசிப்பவர்களிடமிருந்து மொத்தம் 5,149 கருத்துக்களை சேகரிக்க முடிந்தது என்றும் அசார் தெரிவித்தார்.

“எம்.பி.எஸ்.பி உள்ளூர் திட்டத்திற்கு செபராங் பிறையில் உள்ள பல்வேறு தரப்பிலிருந்து நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் கருத்துக்களைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

“2030 ஆம் ஆண்டு வரை செபராங் பிறையில் ஒரு விரிவான திட்டத்தைத் தீர்மானிப்பதற்கு அவர்களின் கருத்துக்கள் மிகவும் முக்கியம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

“இதனால், அனைத்து மதிப்புமிக்க கருத்துக்கள் வழங்கிய பொது மக்களுக்கு நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் MBSP DRTSP2030 அரசிதழ் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.