2017-ஆம் ஆண்டுக்கான பள்ளி அமர்வு தொடங்கப்படுவதை முன்னிட்டு பினாங்கு மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடை, சீருடை வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு மற்றும் பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரான திரு.கர்பால் சிங் நம்மை விட்டு நீங்கிருந்தாலும் அன்னாரின் மரபு இன்று வரை தொடரப்படுகிறது. அவரது சேவையை இன்று அவரது மகனான திரு ராம் கர்பால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராகி தொடர்ந்து சேவையாற்றுகிறார். புக்கிட் குளுகோர் தொகுதியில் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு பள்ளிச் சீருடை வழங்கும் திட்டம் அன்னார் தொடக்கி வைத்த திட்டமாகும். மேலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார். அதற்குச் சான்றாக கர்பால் சிங் கற்றல் மையம் அமைகிறது.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் இணைந்து 400 வசதி குறைந்த பிள்ளைகளுக்குப் பள்ளிச் சீருடை வழங்கினர். வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்நிகழ்வு ஏற்பாடுச் செய்ததாக திரு நேதாஜி கூறினார்.

புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் தனது மூன்று சட்டமன்ற தொகுதியில் செயல்படும் 20 சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற துணையுடன் 60 வசதி குறைந்த மாணவர்களுக்கு ரிம100-க்கான பற்றுச்சீட்டு வழங்கினார். இந்தப் பற்றுச்சீட்டு பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக பள்ளிச்சீருடை பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பற்றுச்சீட்டு பொது மக்களின் பணம், ஏனெனில் மக்கள் செலுத்தும் வரி பணத்தில் தான் அரசாங்கம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது என நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் கூறினார். மேலும், மாச்சாங் பூபோ சட்டமன்ற உறுப்பினர் லீ கய் லூன் தனது தொகுதியில் 400 மாணவர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கினார் என்றால் மிகையாகாது.

பினாங்கு இந்து சங்கம் மற்றும் டெர்மா சிவசந்தா ஏற்பாட்டில் 100 மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டு மற்றும் பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். மனித மூலதன உருவாக்கத்திற்கு அடித்தளமாக கல்வி திகழ்கிறது. எனவே, மாநில அரசு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி பல திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது என்றார்.
மேலும், ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் சிங் டியோ தனது தொகுதியில் 550 மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை எடுத்து வழங்கினார். இந்நிகழ்வு வெற்றிப் பெற துணைபுரிந்த டத்தோ கெராமாட் தொகுதியில் இருக்கும் அனைத்து சமூக பாதுகாப்பு & முன்னேற்ற கழகங்களுக்கும் நன்றி கூறினார்.
