ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் சமூகநலத் திட்டங்கள் தொடரட்டும் – முதலமைச்சர் பாராட்டு

 

பிறை – மாற்றுத்திறனாளிகள் உட்பட வசதிக் குறைந்தோரின் சமூகநலனில் அக்கறை கொண்டுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டினார்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளாகத் தவறாமல் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தீபாவளி பரிசுக்கூடைகளை வழங்கும் இந்த ஆலயத்தின் முயற்சிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

“இந்து சமூகத்திற்கும், இந்த ஆலய பக்தர்களுக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொண்டு திட்டங்களை செயல்படுத்துவதில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் மிகவும் தீவிரமாக உள்ளது.

“இதன் மூலம், இந்து சமூகம் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவ வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

“தனிநபர், பெருநிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய பல பங்களிப்பாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இந்த சமூகநலத் திட்டங்களை வழிநடத்த ஆலய நிர்வாகத்திற்கு ஆதரவளிக்க முன்வருகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்கிறேன்,” என்று ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 2023 தீபாவளி பரிசுக்கூடை வழங்கும் விழாவில் சாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோஸ்ரீ சுந்தராஜூ; ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய தலைமை அறங்காவலரும், மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்; ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் தலைவர், மேஜர் சேகரன்
அத்துடன் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் இம்மாநிலத்தின் இந்தியச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக நிதியுதவி வழங்குகிறது, என்றார்.

மேலும், இந்த ஆண்டு பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினரின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பிறை தொகுதியில் உள்ள பள்ளிகளின் தர உயர்த்துவதற்காக மொத்தம் ரிம627,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிதி ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பத்து காவான் பகுதியில் குறிப்பாக பிறை தொகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், எப்போதும் மேம்படுத்தப்படும். எனவே, பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமாக விளங்கும் மனித வளத்தை உருவாக்க முடியும்,” சாவ் விளக்கினார்.

இதற்கிடையில், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக தீபாவளி தினத்துடன் இணைந்து ஆதரவற்றோருக்கு நன்கொடைகளை வழங்கி வருவதாக சேகரன் கூறினார்.

இந்த ஆண்டு நாங்கள் ரிம150,000 நிதி ஒதுக்கீட்டில் பாரம்பரிய உடைகள் மற்றும் உணவுகள் அடங்கிய 350 பரிசுக்கூடைகள் என ஒவ்வொன்றும் சுமார் ரிம200 மதிப்புடையது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடன பயிலும் சிறுவர்களின் பாரம்பரிய பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் விழாவை சிறப்பித்தன.