16 மாதக் கைக்குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்.

Admin

லியோங் கி யுவன் என்கிற 16 மாத குழந்தை இருதயத்தில் ஓட்டை ஏற்பட்டு உயிருக்காகப் போராடி வருகிறது. இக்குழந்தையின் தந்தையான லியோங் சீ ஹோங்,42 என்பவர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தனது பிள்ளையின் மருத்துவச் செலவையும் குடும்ப செலவையும் சமாளிப்பதற்கு ஒரு நாளைக்கு மூன்று பணிகளைச் செய்து வருகிறார். அதாவது அதிகாலையில் சீன உணவு விற்கிறார்; மதிய வேளையில் தன் மூதாட்டியுடன் சேர்ந்து அலுவலகம் சுத்தம் செய்கிறார்; இரவு வேளையில் கூடுதலாகப் பணி புரிகிறார். இருப்பினும், இவரால் மாதாந்திர வருமானமாக ரி.ம. 1500 மட்டுமே ஈட்ட முடிகிறது. இவ்வருமானத்தைக் கொண்டு தனது குடும்பப் பாரத்தைச் சுமக்க இயலாமல் திண்டாடுகிறார்.

இக்குழந்தைக்காக மாதந்தோரும் ரி.ம. 200 முதல் ரி.ம 300 வரை செலவிட வேண்டியுள்ளது. இக்குழந்தையால் உணவு உண்ண இயலாது. மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிறப்புப் பால் (special milk) மட்டுமே அருந்த முடியும். இக்குழந்தை குணமடைய  ரி.ம30,000 செலவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் லியோங் ஆரோக்கியமான நிலையில் இல்லாததால் அவனின் அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அவனுடைய தந்தை கூறினார். லியோங் சீ ஹோங், தம் பிள்ளையின் உடல் நலனுக்காகப் பொதுநல இலாகாவிடம் முறையிட்டும் உதவி ஏதும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். இவருக்கு உதவும் நோக்கில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘சன்ஷயின்’ பேரங்காடி நிர்வாக இயக்குநர் திரு யீ மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கினார். மேலும் ‘ரோஸ்’ என்னும் அறக்கட்டளை   ரி.ம. 500-ஐ நன்கொடையாக வழங்கி உதவியது.

ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. நேதாஜி இராயர் அவர்கள் லியோங் சீ ஹோங்கு உதவும் வண்ணம் மலிவான வாடகை வீடு பெற்றுக் கொடுப்பதுடன் பொதுநல இலாகாவின் உதவியையும் பெற்றுக் கொடுப்பார் என அவருடைய சிறப்பு உதவியாளர் திரு லிங்கம் உறுதியளித்தார். இக்குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக உதவி கரம் நீட்ட விரும்புவோர் கீழ்க்காணும் முகவரி அல்லது தொலைப்பேசியின் மூலம் தொடர்புக் கொள்ளலாம்.

 

குழந்தை: லியோங் கி யுவன்.

முகவரி: AB-1-5, LCF JLN HILIR PEMANCAR, TAMAN TUN SARDON, 11700

GLUGOR.

கைப்பேசி எண்:  016-4598052 / 014-6043108.