167 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கி JKSB சமூகப் பணி

Admin
20260720 080905

தெலுக் ஆயிர் தாவார் – ஜம்பத்தான் கெடுவா சென். பெர்ஹாட் (JKSB) ஏற்பாடு செய்த மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டத்தின் கீழ், மாநிலத்திலுள்ள ஆறு தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 167 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

20260720 080738

அண்மையில் கெமிலாங் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற இத்திட்டம், JKSB-யின் ‘சினார் செஜஹ்தேரா’ எனும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) முன்னெடுப்பின் ஒரு முன்முயற்சி திட்டமாகும்.

மாணவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி, அதன் மூலம் அவர்களின் கற்றல் செயல்முறையை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என JKSB-யின் நேர்மை மற்றும் நிர்வாகத் துறைத் தலைவர் முஹம்மது நூர் அனாசிம் ரெஜாப் தெரிவித்தார்.
20260720 081524

2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சமூக நலனை மேம்படுத்துவதற்கான JKSB அமைப்பின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக முஹம்மது நூர் அனாசிம் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், பெர்தாம் பெர்டானா தேசியப்பள்ளி, ஹன்சிம் அவாங் தேசியப்பள்ளி, பத்து காவான் தேசியப்பள்ளி, டத்தோ ஓன் இடைநிலைப்பள்ளி,
கெமிலாங் இடைநிலைப்பள்ளி
மற்றும் பிறை இடைநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 167 மாணவர்கள் உதவி பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“இத்திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களை அடையாளம் காண்பதில் JKSB அமைப்பு பினாங்கு மாநிலக் கல்வித் துறையுடன் (JPNPP) நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது.

“மேலும், மாணவர்களின் பார்வைத்திறனை மதிப்பிடுவதுடன், ஒவ்வொருவருக்கும் ஏற்ற மூக்குக் கண்ணாடிகளைத் தீர்மானிப்பதற்காக உள்ளூர் கண் பரிசோதனை நிபுணர்கள் மூலம் இலவசக் கண் பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன,” என்று அவர் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

இதனிடையே, பள்ளிப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், வடக்கு செபராங் பிறை மாவட்டக் கல்வி அலுவலகத்தின் மாணவர் மேம்பாட்டுப் பிரிவுக்கான துணை மாவட்டக் கல்வி அதிகாரி ஜாகி ஜமானி அபு பாக்கர் அவர்களிடம் முஹம்மது நூர் அனாசிம் அடையாளப்பூர்வமான மூக்குக் கண்ணாடிக்கான பங்களிப்பு அட்டையை வழங்கினார்.

மேலும் விளக்கமளித்த முஹம்மது நூர் அனாசிம், மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறந்த முறையில் ஈடுபடுவதற்கும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கும் சிறந்த பார்வைத்திறன் முக்கியப் பங்கு வகிப்பதால், கண் தொடர்பான குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம், என்றார்.

“மாணவர்கள் மூக்குக் கண்ணாடிகள் மூலம்
தெளிவாகப் பார்க்கவும், வகுப்பறை நடவடிக்கைகளில் சிறப்பாகப் பங்கேற்கவும், அதன் மூலம் அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மூக்குக் கண்ணாடி வாங்குவதில் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்க, மேலும் பல மாணவர்களுக்கு இத்திட்டத்தின் பயன்களை விரிவுபடுத்த JKSB நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே, தேவைப்படும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உதவி வழங்கிய JKSB அமைப்புக்கு நோருலாமின் தனது உரையில் பாராட்டுத் தெரிவித்தார். இந்த உதவி மாணவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்துவதுடன், அவர்கள் அதிக வசதி, தன்னம்பிக்கை மற்றும் சிறந்த செயல்திறனுடன் கல்வியைத் தொடரவும் உதவும் என்றார்.

மேலும், தலைமைத்துவம், ஒழுக்கம், கூட்டுறவு மனப்பான்மை மற்றும் சீரான ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தங்களுக்கு வழங்கப்பட்ட உதவியை மதித்து, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட இணைப்பாட நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என அவர் ஊக்குவித்தார்.