2023 மாநில வரவு செலவு திட்டம் அனைவரின் பரிந்துரைக்கு இணங்க வடிவமைக்கப்படும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு முதன்முறையாக 2023 வரவு செலவு திட்டத்தை வடிவமைக்க மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பினர்களின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டத்தொடர் அமர்வை ஏற்பாடு செய்தது.

பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப
இம்மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நிலையான வளர்ச்சியை உறுதிச் செய்ய இந்தக் கூட்டத்தொடர் அமர்வு நடத்தப்படுவதாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“இந்த கூட்டத்தொடர் அமர்வானது பினாங்கு2030 கொள்கையின் கருப்பொருள் ‘C’- பிரதான முன்முயற்சியின் கீழ், பொது பங்கேற்பை அதிகரிக்க மக்களுக்கு அதிகாரம் அளித்தல், மற்றும் C4: திட்டத்தை வழங்குதல் மற்றும் நிறுவன சீர்திருத்தத்தை துரிதப்படுத்துதல் என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அவர்தம் தொகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை முன்மொழிய மாநில அரசு வரவேற்கிறது.

“பரிந்துரைக்கப்படும் திட்டங்கள் பின்னர் மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு மற்றும் மாநில நிதித் துறையால் மதிப்பீடு செய்யப்பட்டப் பின் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்”, என 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக மாநில முதல்வர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ம கூட்டத்தொடர் அமர்வில் முதல்வர் கூறினார்.

இக்கூட்டத்தொடரில் பினாங்கு மாநில சட்டமன்ற சபாநயகர் டத்தோ லாவ் சூ கியாங்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி; மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்; மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்; மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள்; அரசு துறைகள், முகவர்கள் மற்றம் துணை நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய பொருளாதார செயல்திறன் குறித்து பேசுகையில், 2021-இல் பினாங்கு மாநிலத்தின் நிதி நிலை, நிலையான மற்றும் வலுவான பணப்புழக்கத்துடன் சிறந்த வளர்ச்சியைக் காட்டுகிறது என்று கொன் இயோவ் குறிப்பிட்டார்.

மேலும் விளக்கமளித்த அவர், 2020-இல் இருந்த ரிம1.82 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2021ல் ஒருங்கிணைந்த நிதியின் கீழ் மாநிலத்தின் திரட்டப்பட்ட சேமிப்பு வெற்றிகரமாக ரிம2.12 பில்லியனாக அதிகரித்துள்ளது, என்றார்.

“2020 இல் ரிம933.68 மில்லியனிலிருந்து கடந்த ஆண்டு ரிம1.27 பில்லியனாக அதிகரித்த ‘Akaun Amanah Disatukan’
கீழ் பெறப்பட்டப் பங்களிப்புகள் மூலம் இந்த அதிகரிப்பு பங்களித்தது

“இருப்பினும், Akaun Amanah Disatukan
கீழ் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே இந்நிதிப் பயன்படுத்தப்படும்,” என்றார்.

பினாங்கு மாநில அரசு 2021 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வசூலை ரிம692.24 மில்லியனாக அதிகரிக்க முடிந்தது, இது ரிம186.22 மில்லியன் அல்லது 36.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

“இந்த வருவாய் அதிகரிப்பு, மாநில அரசின் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் பெறப்பட்டது. இது 2021 இல் ரிம403.81 மில்லியன் பற்றாக்குறையில் இருந்து ரிம 38.66 மில்லியனாகக் குறைக்க உதவியது.

“எனவே, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பின் வாயிலாக 2022 ஆம் ஆண்டிற்கான மொத்த பற்றாக்குறையையும் கடந்த ஆண்டைப் போலவே குறைக்க உத்வேகம் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு வழங்கும் சேவைகளை பாதிக்காத வகையில் இருத்தல் வேண்டும்,” என்றார்.

அதே வேளையில், மாநில அரசு
அதிகமானப் பொருளாதார சவால்களை எதிர்கொண்டாலும், அதன் பொறுப்புகளை சிறப்பாகச் செய்ய எப்போதும் முயற்சிக்கிறது என்றும் கொன் இயோவ் கூறினார்.

“எனவே, மாநில அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும், முன்முயற்சியும் பினாங்கு2030 இலக்கின் தொலைநோக்கு சாதனையை அடையும் வகையில் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

2023 ஆம் ஆண்டிற்கான மாநில வரவு செலவுத் திட்டத்தை தயார் செய்வதில் மாநில பிரதிநிதிகள் கலந்து கொள்ள
அனுமதி அளித்ததற்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இந்தக் கூட்டத்தொடர் அமர்வு மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலம் மக்களின் குரலை மாநில அரசு செவி மடுக்க துணைபுரிகிறது என்று கொன் இயோவ் தெரிவித்தார்.

“இதன் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் பிரதானத் திட்டங்களை அடையாளம் காண முடியும்,” என்று அவர் கூறினார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் மாநில அரசு கவனத்தில் கொள்ளும் என சூளுரைத்தார்.