4 சட்டமன்ற உறுப்பினர்களின் இடத்தைக் காலி செய்யும் தீர்மானம் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசியலமைப்பின் பிரிவு 14A இன் கீழ் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் (DUN) நான்கு இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கும் தீர்மானம் இன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது.

முதலாம் துணை முதலமைச்சர், டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான் இப்பரிந்துரையை முன்வைக்கும்போது, ​​நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
பினாங்கு மாநில அரசியலமைப்பு 14A(1)ன் கீழ் அந்தந்த இடங்களை காலி செய்யத் தவறியதைத் தொடர்ந்து பினாங்கு மாநில சட்டமன்ற விதிமுறைகளின் துணை விதி 31(1)-க்கு இணங்குவதாகக் கூறினார்.

“பினாங்கு அரசியலமைப்புச் சட்டம் (திருத்தம்) 2012 [A.13/2012] மூலம் மாநில அரசு பினாங்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்துள்ளது, இது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் கட்சி மாற்றத்தை பிரிவு 14A- கீழ் குறிப்பிடுகிறது.

“2013 ஜனவரி,8 ஆம் தேதி மாநில அரசியலமைப்புச் சட்டம் 14A-கீழ், அரசியல் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவர் ஒரு அரசியல் கட்சியில் இருந்து அல்லது வேறு எந்த அரசியல் கட்சியில் சேரும்போது, அவரது உறுப்பினர் பதவியை கைவிடும்போது அல்லது கட்சியிலிருந்து விலகும்போது
தனது இடத்தைக் காலி செய்ய வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

“ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது இருக்கையைக் காலி செய்ய மறுத்தால், மாநில அரசியலமைப்பின் 18(1) வது பிரிவின் அடிப்படையில் மாநில சட்டமன்றம் மாநில அரசியலமைப்பின் பிரிவு 14A இன் பயன்பாட்டுடன் பொருந்தும் ஒரு தீர்மானத்தின் மூலம் முடிவு எடுக்க வேண்டும்.

“மேலும், இந்தத் தீர்மானத்திற்கு உடன்பட்டால், 14A(4) இன் அடிப்படையில் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர், காலியிடம் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு (SPR) அறிவிக்க வேண்டும்,” என்று பினாங்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் விளக்கமளித்தார்.

அமாட் சாக்கியுடினின் கூற்றுப்படி, கேள்விக்குரிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர். அபீப் பஹாருடின் (செபராங் ஜெயா); சுல்கிஃப்லி இப்ராஹிம் (சுங்கை ஆச்சே); காலிக் மெஹ்தாப் முகமட். இஷாக் (பெர்தாம்) மற்றும் சூல்கிப்லி மொஹமாட் லாசிம் (தெலோக் பஹாங்) ஆகியோர் இதில் அடங்குவர்.

முன்னதாக, மக்கள் நீதிக் கட்சியின் (பி.கே.ஆர்) இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் 2020, ஜூன் மாதம், ஷெரட்டன் நடவடிக்கையைத் தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எழுப்பப்பட்டது என்று சாக்கியுடின் தெரிவித்தார்.

“பிரிபூமி கட்சியின் (பெர்சத்து) இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பி.கே.ஆர் சின்னத்தைப் பயன்படுத்தினர் என்பது பத்தி 11(1)(c) மற்றும் தேர்தல் விதிமுறைகளின் 25F perenggan (தேர்தல் பயணம்) 1981 குறிப்பிடப்பட்டுள்ளது.

“இரண்டு விதிகளின் அடிப்படையில், இரண்டு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பக்காத்தான் ஹராப்பானின் பி.கே.ஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே, இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலத்தில், பக்காத்தான் ஹராப்பானுக்குத் தாங்கள் அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் பயன்படுத்தப்படும் கட்சியை விட்டு மற்றொரு கட்சியில் இணைந்தது இதில் தெளிவாகிறது,” என அவர் விளக்கினார்.

இதற்கிடையில், இந்தத் தீர்மானம் மீதான விவாதத்தின் போது முதல்வர், பினாங்கு மாநில அரசு இந்த இப்பரிந்துரையை சட்டமன்ற விவாதத்திற்கு கொண்டு வர இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்ததாகக் கூறினார்.

“இரண்டரை ஆண்டுகளாக மாநில அரசு சட்ட நடைமுறைகள் முடிவடையாத வரை இந்தத் தீர்மானம் கொண்டு வர வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இப்போது நீதிமன்றத்தின் தீர்ப்பும் கிடைத்துள்ளது.

“நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இத்தீர்மானத்தைத் தள்ளுப்படி செய்ய விண்ணப்பித்தப்போதிலும் இது சம்பந்தப்பட்ட எந்த உத்தரவும்
இன்று காலை வரை பெறவில்லை.
ஒரு பரிந்துரையை நீங்கள் கொண்டுவர விரும்பினால், குறைந்தபட்சம் 14 நாட்கள் தேவைப்படும்.

“உண்மையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பினாங்கு அரசியலமைப்பின் 14A சட்டத்தை அதிகாரப்பூர்வச் சட்டமாக அறிவிக்கிறது. மேலும், எந்த விதிகளையும் மீறவில்லை,” என்று அவர் கூறினார்.

பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் நான்கு தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதில் பொறுமையற்றவர்களாகச் செயல்படுவதாக எழுந்துள்ள கூற்றை சாவ் மறுத்தார்.

இந்த விவாதத்தில் புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர், கூய் சியாவ்-லியுங்; பெர்மாதாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினர், முஹம்மது ஃபைஸ் ஃபட்சில்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர், சத்தீஸ்; புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர், லீ சுன் கிட் மற்றும் பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர், டேனியல் கூய் ஜி சென்; டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ; பந்தாய் ஜெராஜா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில்
ஆதரித்தனர்.

பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் சபையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.