7 தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரத்தியேக கைத்தூய்மி கருவிகள் அன்பளிப்பு

கெபூன் பூங்கா- “கோவிட்-19 தொற்று நோயிலிருந்து விடுப்படுவதற்கு பாதுகாப்பு கூறுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை(எஸ்.ஓ.பி) பின்பற்றி உடல் சுகாதாரத்தை பேணுவதன் மூலம் இத்தோற்றிலிருந்து பாதுகாக்கப்படுவோம்,” என பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் தமிழ்ப்பள்ளிகளுக்கு கைத்தூய்மி வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

தற்போது பள்ளிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கியதால் மாணவர்களின் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைத்தூய்மி கருவிகள் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ் பாலைபள்ளிகளுக்கு வழங்கப்பட்டன, என்றார்.

பினாங்கு தீவுப்பகுதியில் செயல்படும் ஏழு தமிழ்ப்பள்ளிகளான அஸாத் தமிழ்ப்பள்ளி, இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி, ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி, இராஜாஜி தமிழ்ப்பள்ளி, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி மற்றும் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி அனைத்துக்கும் முறையே மூன்று பிரத்தியேக கைத்தூய்மி கருவிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் “Step To Clean” என்ற பிரத்தியேக கைத்தூய்மி கருவியை கைகள் பயன்படுத்தாமல் கால் மிதியை அழுத்தி கைத்தூய்மி பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் கல்வி பிரிவுத் தலைவர் ஹரிடாஸ் மற்றும் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் கல்வி பிரிவுப் பொருளாளர் அமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரத்தியேக கைத்தூய்மி கருவி மாணவர்கள் கைத்தூய்மி பொத்தலின் விசையை அழுத்தாமலே பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது என மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைவர் தர்மன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார்.

மாநகர் கழக உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் ரிம5,000 நிதி ஒதுக்கீட்டில் இந்த ஏழு தமிழ்ப்பள்ளிகளுக்கும் பிரத்தியேக கைத்தூய்மி கருவியை வழங்கினார். இந்த கைத்தூய்மி கருவியைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் அக்கருவியில் இணைக்கப்பட்டுள்ளது.