70 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க கம்போங் மானிஸ் மறுகுடியேற்றத் திட்டம்

Admin
img 20261018 wa0370

பிறை – கம்போங் மானிஸ் பகுதியில் சுமார் 70 ஆண்டுகளாக நீடித்து வந்த குடியிருப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. பினாங்கு மாநில அரசின் ‘முத்தியாரா’’ (RMKu) வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளைப் பெறுவதற்காக, 174 குடியிருப்பாளர்கள் தங்களின் தற்போதைய குடியிருப்புகளைக் காலி செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

img 20261018 wa0384

கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்மொழியப்பட்ட மறுகுடியேற்றத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், குடியிருப்பாளர்கள் இரயில் சொத்துகள் வாரியம் (RAC) மற்றும் பினாங்கு வீடமைப்பு வாரியம் (LPNPP) ஆகியவற்றிடமிருந்து ஒப்புதல் ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.

img 20261018 wa0397
இந்த ஒப்புதல், மறுகுடியேற்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைத்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மறுமேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

img 20261018 wa0396
பினாங்கு மாநில அரசு, LPNPP வழியாகவும் RAC உடனான மூலோபாய ஒத்துழைப்பின் மூலமாகவும் இந்த நீண்டகால வீடமைப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது.

img 20261018 wa0393

மத்திய செபராங் பிறை மாவட்டம், பிறையில் லாட் 286, 65 மற்றும் 67 ஆகிய நிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய RAC-க்குச் சொந்தமான 3.970 ஏக்கர் நிலத்தில் இந்த RMKu வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இன்று பிறையில் உள்ள சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியிருப்பாளர்களுக்கான ஒப்புதல் ஆவணங்கள் வழங்கப்பட்டன.

img 20261018 wa0378

இந்நிகழ்ச்சியில் பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழுத் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) உறுப்பினர்களான பொன்னுதுரை, ரேச்சல் தே சூவான் யென், RAC தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஸார் அகமது, LPNPP பொது மேலாளர் கைருல்னிசாம் ஹஷிம், மத்திய செபராங் பிறை மாவட்ட அதிகாரி டத்தோ கமாருல் ஹைசால் கோடெராட், கெர்ஜாயா புரோஸ்பெக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டீ எங் ஹோ மற்றும் ஆஸ்பென் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனிலரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

img 20261018 wa0385

கம்போங் மானிஸ் மக்களுக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ சுந்தராஜூ, சுமார் 70 ஆண்டுகளாக நீடித்து வந்த குடியிருப்புப் பிரச்சனைக்குத் தற்போது தீர்வு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாகப் புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளதுடன், வழக்கமாக வழங்கப்படும் மாற்று வீடுகளைவிட விசாலமான வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொதுவாக இத்தகைய மறுகுடியேற்றத் திட்டங்களில் 650 சதுர அடி பரப்பளவிலான குறைந்த விலை வீடுகள் வழங்கப்படும். ஆனால், கம்போங் மானிஸ் மக்களுக்கு 850 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிலத்தில் தற்போது வசித்து வரும் 174 குடும்பங்களுக்கும் RAC சார்பில் தலா ஒரு வீடு இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் LPNPP வழியாக வழங்கப்படும் இந்த வீடுகளின் மதிப்பு சுமார் ரிம350,000 முதல் ரிம400,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தகுதியுடைய 174 குடும்பங்களுக்கும் அவை இலவசமாக வழங்கப்படும்.

கம்போங் மானிஸ் பகுதியில் வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் அங்கு நிரந்தரமாக வசிக்காத சொத்து உரிமையாளர்களுக்கு, இதேபோன்ற வீடுகள் ரிம150,000 விலையில் வாடகை-கொள்முதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க மேம்பாட்டாளர் இலக்கு கொண்டுள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.

அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்ததும் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்றும், அதில் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் தற்காலிகமாக வெளியேற வேண்டிய குடியிருப்பாளர்களுக்கு, புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை மேம்பாட்டாளர் மாதந்தோறும் ரிம700 வாடகை உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் நாளிலிருந்து சுமார் 24 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டத்தை நனவாக்குவதற்குப் பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நன்றி தெரிவித்தார்.

2024 நவம்பர் 11ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் உடன்படிக்கை ஒப்பந்தம் (MoA) கையெழுத்தானதைத் தொடர்ந்து, நிலுவையில் இருந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் மேம்பாட்டாளரை அடையாளம் காண்பதற்கும் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அவர் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கான ஒப்பந்த விவரங்கள், வாடகை-கொள்முதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கட்டுமானக் காலத்தில் வழங்கப்படும் மாதாந்திர ரிம700 வாடகை உதவி ஆகியவை ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

செபராங் பிறை மாநகர் கழகத்தின் (MBSP) ஒப்புதலைப் பெறுவதற்கான தேவையான திட்டங்களை மேம்பாட்டாளர் விரைவுபடுத்தி, கட்டுமானப் பணிகளை அடுத்த சில மாதங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான மூலோபாயப் பங்காளிகளை அடையாளம் காணவும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தீவிரமாகப் பணியாற்றிய டத்தோஸ்ரீ சுந்தராஜூவுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

‘ரிவானிஸ்’ (Rivanis) எனப் பெயரிடப்பட்டுள்ள கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

முதற்கட்டத்தில் 338 குடியிருப்பு அலகுகள் அமைக்கப்படுவதுடன், நீச்சல் குளம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும்.

மறுகுடியேற்ற ஏற்பாட்டின்படி, தங்களின் தற்போதைய குடியிருப்புகளைக் காலி செய்யும் 174 குடும்பங்களுக்கும் தலா 850 சதுர அடி பரப்பளவிலான, சுமார் ரிம400,000 மதிப்புடைய மாற்று வீடு இலவசமாக வழங்கப்படும்.