‘Dashboard Penang2030’ மாநில அரசின் சாதனைகளை கண்காணிக்க சிறந்த தலம் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – ” மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் துரித வளர்ச்சி
மற்றும் பொது மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த சிறந்த நிர்வாகத்தை வழிநடத்த உத்வேகம் கொள்கிறது. இதனை உறுதி செய்யும் ஒரு பிரதான அமைப்பாக ”Dashboard Penang2030′ திகழ்கிறது.

“Penang2030 Dashboard என்பது ஒரு வெளிப்படையான பொது நிர்வாகக் கருவியாகும். இது பொதுமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. ஏனென்றால், இந்த அமைப்பு மாநில அரசின் சாதனைகளைத் தெளிவாகக் காட்டுவதோடு, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கும், ஒட்டுமொத்த மாநில மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கூறுவதற்கும் சிறந்த தலமாக அமைகிறது.

“Dashboard Penang2030 அமைப்பை பொது மக்கள் அணுகுவதற்குத் தயார் நிலையில் உள்ளது என அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். இந்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட தற்போதைய சாதனைகளின் சதவீதம் 26% ஆகும். இந்தச் சாதனை தொடர்ந்து 2030 ஆம் ஆண்டு வரை மேம்பாடுக் காணும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பொதுச் சேவை ஊழியர்கள் உடனான சந்திப்புக் கூட்டத்தில் Dashboard Penang2030 அமைப்பை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

பினாங்கு2030 இலக்கில் நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களை நாம் தொடர்ந்து அடைய இந்த சதவிதம் ஒரு சிறந்த அளவுக்கோலாகக் கருதப்படுகிறது. தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்கை நோக்கிப் பயணிக்க, இந்த Dashboard Penang2030 மாநில அரசாங்கத்தின் கண்காணிப்பாளராக செயல்படுகிறது, என்றார்.

அண்மையில், பினாங்கு மாநில சட்டமன்றத்தின் (DUN) ஐந்தாவது தவணையின் முதல் கூட்டத்திற்கான தொடக்க உரையில் மாநில ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் அவர்கள், பினாங்கு மக்களுக்கு பாதுகாப்பான, போதுமான மற்றும் தூய்மையான உணவு விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் மற்றும் அனைத்துலக ரீதியிலான மோதல்கள் பினாங்கு மாநிலத்தில் 2.2 என்ற விகிதத்தில் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுத்தன. எனவே, பினாங்கு மக்கள் அதிக பணவீக்கத்தை எதிர்கொள்ளவும், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர் வகைகள் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றவும், இந்த மாநிலத்தில் பரந்த விவசாய நிலம் இல்லாததால், உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி அமாட் சாக்கியுடின்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; மாநிலச் செயலாளர், டத்தோ டாக்டர் அஹ்மத் ஜைலானி முஹம்மது யூனுஸ்; ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பினாங்கு2030 இலக்குக்கு இணங்க இம்மாநில மக்கள், பொதுச் சேவை ஊழியர்கள் உட்பட சுகாதாரக் கூறுகளில் குறிப்பாக முழுமையான சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்வதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பினாங்கு பாலத்தில் இருந்து குதித்த தற்கொலை முயற்சிகள் எட்டு (8) வழக்குகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் பினாங்கு மாநிலத்தின் நற்பெயர் பாதிப்பதோடு அதில் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்டால் மாநில உற்பத்தித்திறனை பாதிக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

மலேசியாவிலே 2021 ஆம் ஆண்டிற்கான அதிகமான உற்பத்தி முதலீட்டை பினாங்கு மாநிலம் பதிவுசெய்தது. இது 51,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. இந்த நேர்மறையான வேகத்தை 2022 ஆம் ஆண்டிலும் நிலைநிறுத்தும் பொருட்டு, மாநில அரசு மற்றும் மத்திய அரசு, தனியார் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்.

எனவே,மத்திய மற்றும் மாநில அரசு தொடர்புகளில் ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டறிய மாநில-மத்திய தொடர்பு சிறப்புக் குழு நிறுவப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.